25.1 C
Chennai
Friday, Jan 17, 2025
p921 18263
மருத்துவ குறிப்பு

வாழ்க்கை தத்துவம் சொல்லும் முத்தான மூன்று கதைகள்…

"ஒவ்வொரு மனிதனும் எந்தவித சூழ்நிலையையும் எப்படி கையாள வேண்டும்" என்பதை அறிவுறுத்தும் அற்புதக் கதைகள் இவை.அப்படிப்பட்ட கதைகளில் சிலவற்றைப் பார்ப்போமா

"நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி"

கதைகள்

அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

”நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் கழித்து,

அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"
பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.

"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்” என்றார்.

"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"

கதைகள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.

"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.

தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.

இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.

இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.

அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு.

அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.

சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் – துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.

அனைத்தையும் சுமக்காதே !

கதைகள்

ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், "என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?"என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், "நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்" என்று கூறி வருந்தினாள்.

"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ”ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?” என்று கேட்க, அதற்கு அவர் ”நாம் ஒரு துறவி என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உதவி செய்த துறவி, "தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால் , வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.p921 18263

Related posts

திடீரென உயிரைப் பறிக்கும் மாரடைப்பு பற்றி இந்த விஷயங்களையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!

nathan

ஒருதலை காதலர்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

nathan

தேகத்தின் முடி வளர்ச்சி உங்கள் உடல் நலனை பற்றி என்ன கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா???

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு

nathan

வாழ்க்கையை வசப்படுத்த – 9 வழிகள்

nathan

தாங்க முடியாத கழுத்து வலியினால் அவதிப்படுகிறீர்களா? இதோ சில டிப்ஸ்…

nathan

பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்!. திருந்துங்கம்மா!

nathan

நாவூறும் யாழ்பாணத்து ஒடியல் கூழ் செய்முறை விளக்கம்

nathan