26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld4573
மருத்துவ குறிப்பு

பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது?

இப்போது நீங்கள் சந்திக்கப் போவது ஒரு வித்தியாசமான பெண்மணி…’என் பெண்களைக் கேட்டீர்களானால், என்னை ஒரு நல்ல அம்மாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’இப்படிச் சொன்னது ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்திருந்தால் நான் இதை இங்கு எழுதியே இருக்கமாட்டேன். அது ஒரு செய்தியாகவே ஆகி இருக்காது. சொன்னது உலகில் உள்ள முக்கியமாக இந்தியாவில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பொறாமை கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்மணி! ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்திவாய்ந்த பெண்கள் வரிசையில் 13ம் இடத்தைப் பிடித்தவரும், உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின் உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி! அவர் இப்படிச் சொன்னார் என்றால் உலகமே கவனிக்காதோ? ஆம் கவனித்தது! உலகின் அத்தனை பகுதியிலிருந்தும் இவர் இப்படிச் சொன்னது குறித்து வாதங்கள், விவாதங்கள் என்று ஒரே அல்லோலகல்லோலம்தான்!

இத்துடன் இவர் நிற்கவில்லை. தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.’14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எப்போதும் நான் வெகு நேரம் வேலை செய்பவள். ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவே என் மேலதிகாரி என்னைக் கூப்பிட்டார். அப்போது மணி இரவு 9:30. ‘இந்திரா, உன்னை நமது நிறுவனத்தின் பிரெசிடென்ட் என்று அறிவிக்கப் போகிறேன். இயக்குனர் குழுவில் நீயும் இருக்கப் போகிறாய்’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை என்னுடைய பின்னணி, எனது பயணத்தின் ஆரம்பக் கட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது உலகின் மிகச்சிறந்த, அமெரிக்கா நிறுவனத்தின் பிரெசிடென்ட், இயக்குனர் குழுவில் இடம் என்பது எனக்குக் கிடைத்திருக்கும் தனிச்சிறப்பு என்று நினைத்தேன்.

சாதாரண நாட்களில் அலுவலகத்திலேயே இருந்து நடுநிசி வரை வேலை செய்பவள் அன்று வீட்டுக்குச் சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை என் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். 10 மணிக்கு வீட்டை அடைந்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பினால் என் அம்மா மாடிப்படிகளின் உச்சியில் நின்று கொண்டிருந்தார். ‘அம்மா! உனக்கு ஒரு நல்ல செய்தி!’ என்றேன்.’நல்ல செய்தி கொஞ்ச நேரம் காத்திருக்கட்டும்! வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வர முடியுமா?’ என்றார்.

நான் கார் நிறுத்துமிடத்தைப்
பார்த்தேன். என் கணவர் வீட்டுக்கு
வந்திருந்தார்.
‘எத்தனை மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தார்?’ நான் கேட்டேன்.
‘8 மணிக்கு!’
‘அவரை வாங்கிக் கொண்டு வரச் சொல்வதுதானே?’
‘அவர் ரொம்ப சோர்வாக இருந்தார்!’
‘சரி சரி. நம் வீட்டில் இரண்டு
பணியாட்கள் இருக்கிறார்களே!’
‘அவர்களிடம் சொல்ல நான் மறந்துவிட்டேன்!’
‘………………..!’
‘போய் பால் வாங்கிக் கொண்டு வா! அவ்வளவுதான்!’

ஒரு கடமை தவறாத மகளாக நான் வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வந்தேன். வீட்டுக்குள் சென்று சமையலறை மேடை மேல் பால் பாக்கெட்டை ‘பொத்’ என்று வைத்தேன். ‘நான் உனக்காக ஒரு பெரிய செய்தி கொண்டு வந்தேன். எங்கள் நிறுவன இயக்குனர் குழுவில் நான் தலைவராகப் பதவியேற்கப் போகிறேன். நீ என்னவென்றால் ‘போய் பால் வாங்கிக் கொண்டு வா’ என்கிறாய்! என்ன அம்மா நீ?’ பொரிந்து தள்ளினேன். என் அம்மா அமைதியாகச் சொன்னார்… ‘சில விஷயங்களை நீ தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீ பெப்ஸிகோ வின் தலைவராக இருக்கலாம். இயக்குனர் குழுவில் இருக்கலாம். இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டாலோ, நீ ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு தாய். இவை எல்லாம் கலந்த ஒரு கலவை நீ. அந்த இடத்தை வேறு யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பாழாய்ப்போன அலுவலகக் கிரீடத்தை கார் நிறுத்தத்திலேயே விட்டுவிட்டு வா! அதை வீட்டினுள் கொண்டு வராதே! நான் அந்த மாதிரி கிரீடங்களைப் பார்த்ததே இல்லை!’
இதைச் சொன்னவர் யாரென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

திருமதி இந்திரா நூயி, CEO, பெப்ஸிகோ!இந்திரா மேலும் சொல்லுகிறார்… ‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது போல நாம் பாவனை செய்கிறோம். எனக்குத் திருமணம் ஆகி 34 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு
2 பெண்கள். தினமும் நீங்கள் இன்று ஒரு மனைவியாக இருக்கப் போகிறீர்களா, அம்மாவாக இருக்கப் போகிறீர்களா என்று முடிவு எடுக்க வேண்டும். காலை நேரத்தில் அந்த முடிவை எடுக்க வேண்டும். இதற்குப் பலரின் உதவி தேவை. நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தினரின் உதவியை நாடினோம். நல்ல பெற்றோராக இருக்க நாங்கள் இருவரும் மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறோம்.

ஆனால், நீங்கள் என் பெண்களைக் கேட்டால், நான் ஒரு நல்ல அம்மா என்று அவர்கள் சொல்லுவார்களா தெரியாது. எல்லாவிதத்திலும் அனுசரித்துக் கொண்டு போக நான் முயலுகிறேன். என்னுடைய பெண்ணின் பள்ளியில் நடந்ததைக் கூறுகிறேன். ஒவ்வொரு புதன்கிழமையும் அவளது பள்ளியில் ‘வகுப்பறை காபி’ என்ற நிகழ்வு இருக்கும். மாணவர்கள் தங்கள் அம்மாக்களுடன் சேர்ந்து வகுப்பறையில் காபி அருந்துவார்கள். அலுவலகத்துக்குப் போகும் என்னால் காலை 9 மணிக்கு அதுவும் புதன்கிழமை எப்படிப் போக முடியும்? முக்கால்வாசி நேரம் நான் வகுப்பறைக் காபியை மிஸ் பண்ணிவிடுவேன். என் பெண் மாலையில் வீட்டிற்கு வந்து யார் யாருடைய அம்மாக்கள் வந்தார்கள் என்று பெரிய லிஸ்ட் படித்துவிட்டு, ‘நீதான் வரலை’என்பாள்.

ஆரம்பத்தில் மனது மிகவும் வலிக்கும், குற்ற உணர்ச்சி கொன்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக சமாளிக்கக் கற்றேன். அவளது கோபத்துக்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து யார் யாருடைய அம்மாக்கள் வரவில்லை என்ற பட்டியலைப் பெற்றேன். அடுத்தமுறை அவள் வந்து ‘நீ வரலை, நீதான் வரலை’ என்று சொன்னபோது, ‘மிஸஸ் கமலா வரலை… மிஸஸ் சாந்தி வரலை… நான் மட்டுமே கெட்ட அம்மா இல்லை’ என்றேன். சமாளிக்க வேண்டும்… ஈடு கொடுக்க வேண்டும். இல்லாவிடில் குற்ற உணர்ச்சியிலேயே மடிய நேரிடும். நமது சொந்த வாழ்க்கைக் கடிகாரமும் தொழில் வாழ்க்கைக் கடிகாரமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கிறது. மொத்தமான, முழுமையான முரண்பாடு!

நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்… தொழில் வாழ்க்கையின் ஆரம்பநிலையைத் தாண்டி நடுக்கட்டத்துக்கு வரும்போது, குழந்தைகள் பதின்ம வயதில் காலடி வைத்திருப்பார்கள். அதே நேரம் உங்கள் கணவரும் குழந்தையாக மாறியிருப்பார். அவருக்கும் நீங்கள் வேண்டும்! குழந்தைகளுக்கும் நீங்கள் வேண்டும். என்ன செய்ய முடியும்? உங்களுக்கு வயது ஏற ஏற உங்கள் பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போகும். அவர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஊஹூம்! பெண்களால் எல்லாவற்றையும் அடையவே முடியாது. எல்லாவற்றையும் சமாளிக்க ஒரே வழி எல்லோருடனும் ஒத்துப்போவதுதான். உங்களுடன் வேலை செய்பவர்களை பழக்குங்கள். உங்கள் குடும்பத்தை ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்பமாக மாற்றுங்கள்.

பெப்சியில் இருக்கும்போது நான் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனது குழந்தைகள் சின்னவர்களாக இருந்த போது குறிப்பாக இரண்டாமவள் நான் எங்கிருந்தாலும் சீனா, ஜப்பான் எனது ஆபீஸுக்கு போன் செய்வாள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு நான் மிகவும் கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருந்தேன். எனது வரவேற்பாளர் போனை எடுப்பார்… ‘நான் என் அம்மாவிடம் பேச வேண்டும்!’ எல்லோருக்கும் தெரியும் அது யார் என்று. ‘என்ன வேண்டும் உனக்கு? ‘எனக்கு கேம்ஸ் விளையாட வேண்டும்’வரவேற்பாளர் உடனே சில வழக்கமான கேள்விகளைக் கேட்பார்: ‘உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாயா?’ என்பது போல.

கேள்விகள் முடிந்தவுடன் ‘சரி, நீ ஒரு அரைமணி நேரம் விளையாடலாம்!’என்பார். எனக்கும் செய்தி வரும். ‘டீரா கூப்பிட்டாள். நான் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். அவளுக்கு அரைமணி நேரம் விளையாட அனுமதி கொடுத்திருக்கறேன்’ என்று. இதுதான் அல்லது இப்படித்தான் தடங்கல் இல்லாத குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோருடனும், வீட்டில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் சுமுகமாக இயங்கினால்தான் எல்லாம் நடக்கும். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆக இருப்பது என்பது மூன்று ஆட்கள் செய்யும் முழு நேரப்பணியை ஒருவர் செய்வது.

எப்படி எல்லாவற்றுக்கும் நியாயம் செய்ய முடியும்? முடியாது. இவ்வளவையும் சமாளித்துக் கொண்டு போகையில், உங்களை அதிகமாகக் காயப்படுத்துபவர் உங்கள் துணைவராக இருக்கக்கூடும். என் கணவர் சொல்லுவார்… ‘உன்னுடைய லிஸ்டில் பெப்ஸிகோ, பெப்ஸிகோ, பெப்ஸிகோ, உன் இரண்டு குழந்தைகள், உன் அம்மா, பிறகு கடைசி கடைசியாக கீழே நான்..!”இதை நீங்கள் இரண்டு விதமாகப் பார்க்கலாம்… நீங்கள் லிஸ்டில் இருக்கிறீர்களே என்று நினைக்க வேண்டும். புகார் செய்யக் கூடாது!’இப்படிச் சொல்லித்தான் கணவரை சமாளிக்க வேண்டும்!’ இப்படிச் சொல்லியதற்காக இவருக்கு வந்த கண்டனங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!ld4573

Related posts

கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும் என்டோமேட்ரியோசிஸ், மார்பக புற்றுநோய்– ஏன் எதனால் எப்படி வருகிற…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு ஏற்படும் 8 சருமப் பிரச்சனைகள்!!!

nathan

வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்வது எப்படி

nathan

புது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

nathan

பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்? தெரிந்துகொள்வோமா?

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிறுநீர் கோளாறுகளில் இருந்தும் விடுபட ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து!

nathan

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan