நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும். நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?’ என ஆலோசித்து, ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான் செய்வது? மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ..!? என்பது குறித்து யோசிக்க வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப் பிரச்னைக்குப் பெயர்தான் என்ன? அதுதான் இன்சோம்னியா (Insomnia). அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும். அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வோமா..!
தூக்கம் தொலைக்கும் மது
மது
இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன்மூலம் மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம் வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும் மூளையைத் தூண்டிவிடும். இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும் தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தக்காளி
தக்காளி
இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். அதிலும் தூங்குவதற்குச் சில மணி நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux) பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் உள்ள அமிலங்கள் தவறான பாதையில் சென்று உணவுக்குழாய்க்கு திரும்பி வருவதால் வாய் வழியாக வெளியேறும். இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நேராகப் படுக்கும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். எனவே, இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப் போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
துரித உணவுகள்
துரித உணவுகள்
துரித உணவுகள், சீன உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.
சர்க்கரை
சர்க்கரை
சர்க்கரை சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக ஆக்டிவ்வாக மாற்றும். மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் விழிப்பு வரும். அதாவது, தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கார்டிசால் (Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி, நடுஇரவில் விழிப்பு வரும் நிலைக்குத் தள்ளிவிடும்.
மசாலா உணவுகள்
மசாலா உணவுகள்
காரமான உணவுகள் உடலுக்குச் சூட்டைத் தரக்கூடியவை. தக்காளியைப் போல ஆசிட் ரிஃபிளக்ஸை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே நிம்மதியாகத் தூங்க முடியாது. உடலுக்குள் உள்ள சூடு, மூளையைத் தூண்டிவிட்டு தூக்க உணர்வை போக்கிவிடும். எனவே, காரமான உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.
காபி
காபி
காபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம். இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால், காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க நேரிடும்.
சாக்லேட்
சாக்லேட்
காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான் என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக் கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட இரவில் தூக்கம் வராமல் தவிப்போம். ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும் எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும் கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக் கெடுக்கக்கூடியவை.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்
உருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் உடலுக்குள் சேர்ந்து சீக்கிரமே சர்க்கரையாக மாறிவிடும். காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள். சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டாலும் நடக்கும்.
முழுத் தானியங்கள்
இரவில் என்ன சாப்பிடலாம்?
காய்கறிகள்
பழங்கள்
புரத உணவுகள்
பால் மற்றும் ஒரு வாழைப்பழம்
முழுத் தானியங்கள்
ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு.
ஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது உண்மைதான். ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும் மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும் வீண். மனநலம் சிறப்பாக அமைய யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். உடல்நலத்தோடு மனநலத்தையும் கவனமாகப் பார்த்துக்கொண்டால் தூக்கமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம்.