கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும்.
உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.
மேலும், தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் தேவையான அளவு பழச்சாறு அருந்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் உணவு அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் உடலில் உள்ள சக்தி வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேவையான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் பிரசவத்தின் போது உடலில் இருக்க வேண்டிய நீர்த்தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும், கருவில் இருக்கும் குழந்தை கருப்பையில் இருக்க முடியாமல் விரைவில் வெளியே வந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம். இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது. உடலிலேயே தங்கிவிடும். இதற்கும் நீர்ச்சத்து இல்லாததே காரணமாகும். ஆகவே, உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைத்துக்கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வரும். இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கும் காய்ச்சல் பரவி, குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.
உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சினையை உண்டாக்கும். தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலும் பாதிக்கும். தாயின் உடலில் ரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் அதிகமாக தண்ணீரை குடித்து உடல் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொண்டால் தாய், சேய் ஆகிய இரு உயிருமே நலமாக ஆரோக்கியமாக இருக்கும். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க… குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!