25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201702231021379028 goal of life to live SECVPF 1
மருத்துவ குறிப்பு

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும் உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்! எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்
வாழ்க்கையை இருவகையாக வாழலாம். இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்வது, எப்படியும் வாழலாம் என்ற மனம் போனபடி வாழ்வது. பண்பாளர், நன்னெறியாளர் தேர்ந்தெடுப்பது முதல் வகை வாழ்க்கையையே.

‘பெற்றோரைக் கொடுப்பது விதி
வாழ்க்கையை அமைப்பது மதி’

வாழ்க்கையை வகுத்துக்கொள்ளத் தெரியாமல் எப்படியோ வாழ்ந்து, நிலைதடுமாறி, எண்ணியது கிடைக்காமல், மனம் வெறுத்து, தளர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைய தலைமுறையை கண்டு மனது பதறுகிறது, கலங்குகிறது.

மனதில் உறுதி, வாக்கினில் இனிமை, நல்ல நினைவு இருந்தால் நினைத்தது கிடைக்காமல் போய்விடுமா என்ன?. சிலர் கூறுவர், இது நடக்க வேண்டும் என்று நினைத்தேன், நடந்து விட்டது என்பர். அவரிடம் உள்ள மந்திர சக்தியா அதை நடத்தியது? இல்லவே இல்லை. அவர் எதை அடைய வேண்டும் என்று நினைத்தாரோ, அதை எண்ணத்தை மிகத்தீவிரமாக மனதில் புதைத்து ஆழ்மனதில் மூலம் அந்த செயல் நடைபெற வேண்டும், அதில் தான் வெற்றி பெற வேண்டும் என்று விடாது எண்ணியதின் விளைவு தான் மந்திரச்செயல் போல் நடக்கிறது.

நம் வள்ளுவர் பெருந்தகையும்.

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்’

என்று கூறுகிறார். எண்ணத்தில் திண்மை இருந்தால் நினைத்தது கட்டாயம் நடக்கும். நல்லதை நினையுங்கள், உறுதியாக எண்ணுங்கள், வெற்றி உங்கள் கையில்.

வயது முதிர்ந்த நிலையில் நாவுக்கரசர் இறைவனை கயிலையில் காண விரும்பி பயணம் மேற்கொண்டார். நடை தளர்ந்தது, உள்ளம் தளரவில்லை. உடலுறுப்புகள் தேய்ந்தன, ஊக்கம் தேயவில்லை. படுத்த நிலையில் ஊர்ந்து செல்லும் நாவுக்கரசரைக் காணப்பொறுக்காத இறைவனே அந்தணனாக வடிவெடுத்து முயற்சியை கைவிடுமாறு வேண்டியும்,

‘ஆளும் நாயகன் கயிலை இருக்கைக் கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’

என்று மறுத்தார்.

அந்த உறுதிக்கு இறைவனே பணிந்து திருவையாற்றில் கயிலைக் காட்சியை அவருக்கு அருளினார்.

மார்க்கண்டேயர் கதையும் அனைவருக்கும் தெரியும்.

‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்’

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டு மார்க்கண்டேயர்.

வள்ளுவரை காண வந்த ஒருவர் ஐயா விதி என்னை வஞ்சித்து விட்டதே! நான் இனி எப்படி வாழ்வேன்? என்று புலம்பினார்.

வள்ளுவரும்

ஊழிற் பெருவலி யாவுள?

என்று விதியை ஏற்றுக்கொண்ட அவர், அத்தோடு நிறுத்தி விடவில்லை. உடனே விடாமுயற்சி இருந்தால் விதியையும் மதியால் வென்று விடலாம் என்று பதிலளிக்கிறார். ஊக்கம் இருந்தால் ஆக்கம் எங்கே எங்கே என்று வழிகேட்டு நம்மைத் தேடி ஓடிவரும்.

இளைய தலைமுறையினரே!

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்

என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு வாழ்ந்தால் அந்த தற்கொலையல்லவா தற்கொலை செய்துகொள்ளும்!

நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. நமது வாழ்க்கை நம்மை சுற்றி வாழ்கின்ற பல உயிரினங்களுடன் தான் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. நாமும் வாழ வேண்டும், பிற உயிர்களையும் வாழ விட வேண்டும்.

குருவி, கழுகு, புலி, காண்டாமிருகம் போன்ற பல உயிரினங்கள் அருகி வரும் உயிரினமாக அஞ்சப்படுகிறது. இதற்கு யார் காரணம்? நமது வாழ்வியல் முறைகளும், பேராசையும் தானே?. மனிதர்கள் வாங்கி வைக்காத மண்ணின் விசிறிகளாக பாதசாரிகளின் பணிமனை கூடங்களாக மானிட ஆண்மைக்கு மண் கொடுத்த சீதனங்களாக இருந்த மரங்கள் இன்று பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.

எண்ணிப்பாருங்கள், இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும் உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்! எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.

நம் வாழ்க்கையோடு ஒன்றி வாழும் பிற உயிரினங்களிடமும் அன்பு கொண்டு அவற்றையும் வாழ விடுங்கள்.

Related posts

உங்களுக்குதான் இந்த விஷயம் ! ஆண்மையை அதிகரிக்கும் ஏலக்காய் மருத்துவம்..!!

nathan

சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ குணங்கள் – தெரிந்துகொள்வோமா?

nathan

கருப்பை கட்டியை பற்றி பெண்கள் அறிய வேண்டியது

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள்!

nathan

நோய்கள் வராமல் தடுக்கும்…வந்தாலும் விரட்டும்!மருந்து கஞ்சி

nathan

கால் ஆணி மீண்டும் மீண்டும் வராமல் இருக்க….

nathan

முதுகுவலியை தீர்க்கும் பயிற்சிகள்

nathan

தும்மல் வர காரணங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா?

nathan