24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
201702200957324160 Guide children to achieve goals SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

சிறந்த லட்சியங்களை குழந்தைகள் மனதில் விதையுங்கள். கடுமையாக உழைத்தால்தான் வெற்றிகளை பெறமுடியும் என்று கூறி, கடுமையாக உழைக்க கற்றுக்கொடுங்கள்.

லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்
குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு பொறுப்பு நிறைந்த பணி. அவர்கள் தங்கள் பொறுப்பை சரிவர நிறைவேற்றினால்தான், எதிர்கால இந்தியாவிற்கு சிறந்த குடிமகன்கள் கிடைப்பார்கள். அதனால் பெற்றோர் தங்கள் கோபம், ஆத்திரம், மனஅழுத்தத்தை குழந்தைகளிடம் காட்டக்கூடாது. அதுபோல் எதிர்மறையான கருத்துக்களையும் குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

குழந்தைகள் செய்ய விரும்பும் செயல்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்காதீர்கள். ‘வேண்டாம்’, ‘அதை செய்யாதே’, ‘இதை செய்யாதே’ என்று பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்காதீர்கள். ‘எல்லாவற்றுக்கும் தடைபோடும், எப்போதும் தடை போடும் பெற்றோர்களை குழந்தைகள் அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதே நேரத்தில் எல்லா செயல்களுக்கும் குழந்தைகளை அனுமதிக்க முடியாதல்லவா! அதனால் எந்த காரியத்தை குழந்தைகள் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அந்த காரியங்களை ‘ஏன் செய்யக்கூடாது?’ என்றும் விளக்கிவிடுங்கள். செய்யக்கூடிய காரியங்களுக்கும், செய்யக்கூடாத காரியங்களுக்கும் எப்போதும் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பருவத்திற்கு ஏற்ற செயல்களை செய்ய ஊக்குவிக்கவேண்டும். சமையல் அறையில் தாயும், தந்தையும் லாவகமாக பயன்படுத்தும் கத்தியை தானும் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் குழந்தைக்கு வரலாம். அப்போது கத்தியை கவனமின்றி பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கவேண்டும். அதுபோல் கண்ணாடி கிளாஸ் கைநழுவி கீழே விழுந்தால் என்னவாகும் என்பதையும் சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். அதை விட்டுவிட்டு பதறிப்போய் கத்தியை பிடுங்குவது, கண்ணாடி கிளாசை கையில் கொடுக்க மறுப்பது போன்றவை எல்லாம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

‘கஷ்டம்’, ‘முடியாது’ என்ற இரு வார்த்தைகளையும் குழந்தைகளிடம் அதிகம் பயன்படுத்தவேண்டாம். அது அவர்கள் ஆழ் மனதில் பதிந்து போய்விடும். அப்படி பதிந்துபோனால், எதிர்காலத்தில் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும், ‘கஷ்டம்.. முடியாது’ என்ற வார்த்தைகளே நினைவுக்கு வரும். அது அவர்கள் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் புதிய முயற்சிகளில் குழந்தைகள் ஈடுபடும்போது, ‘உன்னால் முடியும், செய்து பார்’ என்று நம்பிக்கையளித்து, அதை செய்து முடிக்க சரியான பாதையை காட்டுங்கள்.

பெற்றோர் சொல்லும் அறிவுரைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு புரியாது. அவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு பெற்றோருக்கு சொல்லத்தெரியாது. அதனால் அறிவுரைகளை வழங்காமல், அந்த அறிவுரைகளுக்கு ஏற்ப பெற்றோர் வாழ்ந்துகாட்டவேண்டும். குழந்தைகளும் அதுபோல் வாழ்ந்துகாட்டுவார்கள். வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை குப்பைக்கூடையில் போடவேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை. முன்னோடியாக பெற்றோர் அதை செய்துவிட்டால், குழந்தைகளும் அதனை பின்பற்றத் தொடங்கிவிடும்.

பெற்றோர் தங்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. சிறுவயதில் மூட நம்பிக்கைகளை பதியவைத்துவிட்டால், பிற்காலத்தில் அவர்களிடம் இருந்து அந்த நம்பிக்கை மாறாது. பேய், பிசாசு, மாந்த்ரீகம் போன்றவற்றை விளையாட்டிற்காகவோ, பயமுறுத்தவோகூட சொல்லக்கூடாது. சொன்னால் அவர்கள் விபரீதமாக யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நீதியை சொல்லும் கதைகளில்கூட பொய், புரட்டு, மூடநம்பிக்கை இருக்குமானால் அதிலிருக்கும் நீதி குழந்தைகளுக்கு புரியாது. மாறாக பொய்யான விஷயங்கள் ஆழமாக பதிந்துவிடும். குழந்தைகளின் கற்பனை உள்ளம் மூடநம்பிக்கைகளை எளிதாக கிரகித்துக்கொள்ளும்.

நரி கதை, காகம் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லுங்கள். அதில் இருக்கும் நீதியை குறிப்பிட்டுக்காட்டிவிட்டு, ‘நரியோ, காகமோ பேசாது’ என்பதையும் கூறிவிடுங்கள். நீங்கள் அப்படி கூறாவிட்டால் முதலில் காகம், நரி பேசும் என்று குழந்தைகள் நினைத்துவிடும். சில வருடங்கள் கழித்துதான் அவை பேசாது என்ற உண்மை தெரியவரும். அப்போது ‘பெற்றோர் பொய்யான தகவலை அல்லவா கூறியிருக்கிறார்கள்’ என்று நினைக்கும் குழந்தை, அந்த கதையில் இருக்கும் நீதியையும் பொய்யாகக்கருதிவிடும்.

பெற்றோர், மற்றவர்கள் மீதுள்ள தங்கள் கோபத்தை வீட்டில் குழந்தைகளிடம் காட்டக்கூடாது. அப்படி அடிக்கடி நடந்தால் குழந்தைகள் முரட்டு சுபாவம் கொண்டவர்களாகிவிடுவார்கள். எப்போதும் சிடுசிடுப்பு, எரிச்சல் இதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் கூடவேகூடாது. குழந்தைகள் கோபமற்றவர்களாகவும், பொறுமை உணர்வுமிக்கவர்களாகவும் வளரவேண்டும் என்றால், அத்தகைய குணாதிசயத்தை தங்களிடம் இருந்து பெற்றோர் வெளிப்படுத்தவேண்டும். குழந்தைகளை திட்டுவது, அடிப்பது எல்லாம் பெற்றோர் மீது அவர்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கிவிடும். அது அவர்களிடம் வன்முறை எண்ணத்தை தூண்டும். தங்கள் வீட்டில் இருந்து வன்முறை எண்ணம்கொண்ட ஒருவர் உருவாக பெற்றோர் ஒருபோதும் காரணமாகி விடக் கூடாது.

அவரவர் வேலையை அவரவர் பார்க்கவேண்டும் என்பது பொதுவான விதி. அதே நேரத்தில் ஒருவர் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது, அவரது கவனத்தை திசைதிருப்பும் விதத்தில் வீட்டில் உள்ள மற்றவர்கள் செயல்படக் கூடாது என்பதும் கருத்தில்கொள்ளத்தக்க விஷயம். இதை எதற்கு சொல்கிறோம் என்றால், குழந்தைகளை பள்ளிப்பாடங்களை படிக்கச் சொல்லிவிட்டு அவர்களது கவனத்தை திசைதிருப்பும் விதத்தில் பெற்றோர் அருகில் இருந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. குழந்தைகளை படிக்கும்படி கூறிவிட்டு அருகில் உள்ள அறையில் இருந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கவும் கூடாது. குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர் அவரவர்களுக்கான வேலைகளை தொடரவேண்டும். அப்போதுதான் பெற்றோர் அவர்களது வேலையை கவனிப்பதுபோல் நாமும் நமது வேலையை செய்யவேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரும்.

சிறந்த லட்சியங்களை குழந்தைகள் மனதில் விதையுங்கள். அந்த லட்சியங்களை அடைய அவர்களுக்கு வழிகாட்டுங்கள். திட்டமிட்டால் மட்டும் போதாது. கடுமையாக உழைத்தால்தான் வெற்றிகளை பெறமுடியும் என்று கூறி, கடுமையாக உழைக்க கற்றுக்கொடுங்கள்.

அறியாத பருவத்திலே குழந்தைகளிடம், ‘வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் பணம்தான் முக்கியம்’ என்று கூறிக்கொண்டிருக்காதீர்கள். சிறுவயதில் அப்படி கூறி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் பெரியவர்களாகி, அம்மா, அப்பாவை தவிக்க விட்டுவிட்டு பணத்தை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெற்றோர்களாகிய உங்கள் நிலையும் நாளை அப்படியாகிவிடக்கூடாது. அதனால் உறவுகளை மதிக்க கற்றுக் கொடுங்கள். அன்புக்கு அடிபணியும் பக்குவத்தை உருவாக்குங்கள். பணம் மட்டுமல்ல நல்ல மனமும் வேண்டும் என்று கூறுங்கள்.
201702200957324160 Guide children to achieve goals SECVPF

Related posts

வியர்வை நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க சிறந்த வழிகள் இதோ….

sangika

கண்ணின் இமை, திடீரென இழுப்பு வந்ததுபோல் துடித்த அனுபவம் உங்களுக்கு நேர்ந்ததுண்டா?

nathan

மகளுக்கு ஒவ்வொரு அம்மாவும் முக்கியமாக சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் ?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண் குழந்தை பிறக்க அட்டவணை – தாய்மார்கள் அதிகம் தேடும் விஷயங்களில் ஒன்று

nathan

வேம்பாளம் பட்டை தீமைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

அப்படி என்ன ஸ்பெஷல்? தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால்

nathan

பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்

nathan

இதோ உடனடி தீர்வு.!! 30 வயதிலேயே நரம்பு தளர்ச்சியால் அவதிபடுகின்றீர்களா.!?

nathan