`ஆள் பாதி… ஆடை பாதி’ என்பது முதுமொழி. இருக்கட்டும்… ஜோராக, அமர்க்களமாக உடை அணிவதால் மட்டுமே ஒருவருக்கு அழகு கூடிவிடுமா? நம் முகமும் சருமமும் கொஞ்சமாவது மிளிர்ந்தால்தானே அந்த ஆடையால் அழகைக்கூட்ட முடியும்? ஒருவருடைய முகத்தை வைத்து அவரின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதைத்தான் `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அப்படிப்பட்ட நம் முகம், சருமம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் 10 ஜூஸ்களையும் பலன்களையும் பட்டியல் இடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஜெயந்தி…
சாத்துக்குடி ஜூஸ்
சாத்துக்குடி, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடியது. பசியை ஏற்படுத்தக்கூடியது. வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸைக் குடித்துவந்தால், நல்ல தீர்வுகாண முடியும். இது செரிமானப் பிரச்னையைச் சரிசெய்யக் கூடியது. வறண்ட சருமத்தினர், கடினமான சருமத்தினர் இருவருக்குமே சாத்துக்குடி ஜூஸ் ஏற்றது.
இதனைத் தொடந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும். முகப்பருக்களில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் தீரும்.
மாதுளை ஜூஸ்
சருமத்தின் சுருக்கத்தைப் போக்கும் சக்தி மாதுளைக்கு உண்டு. மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைத்துக்கொள்ளவும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவவும். தினமும் இப்படிச் செய்தால் தோலில் உள்ள சுருக்கம் நீங்கும்.
`பவர் ஹவுஸ் ஆஃப் பியூட்டி’ என்று அழைக்கப்படும் அளவுக்கு பெருமை வாய்ந்த பழம் மாதுளை. மாதுளம்பழ ஜூஸைத் தொடர்ந்து குடித்துவர, முகம் பொலிவு பெறும். இது ரத்தத்தைச் சுத்திகரிப்பதால், முகம் பளிச்சென்று காணப்படும். மாதுளை முகப்பருக்களையும் குணப்படுத்தும் ஆற்றல்கொண்டது.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படும். இது, இளமைப் பொலிவை நீடிக்க உதவும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளன. எனவே, முகத்தில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கைக் குணமாக்கும். தோல் சுருக்கத்தை நீக்கும். வறண்ட தன்மை நீங்கி, முகம் மென்மையாக மாறும்.
கேரட் ஜூஸ்
கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது, ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவும். இது முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும நோய்களை குணப்படுத்த உதவும். கோடைக் காலங்களில் முகம் கருமையாக மாறுவதைத் தடுக்கும். இதுவும் முகச் சுருக்கத்தை நீக்கி, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.
தக்காளி ஜூஸ்
தக்காளியில் உள்ள லைகோபீன் (Lycopene) என்னும் கரோட்டினாய்டு சருமத்தை விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துக்கொள்ளும். புறஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic acid) முகப்பருக்களை விரட்டும் தன்மைகொண்டது.
இது எண்ணெய் வடியும் சருமத்துக்கு நல்ல தீர்வாக அமையும். தக்காளி ஜூஸ் தொடர்ந்து குடித்துவர முகம் பொலிவு பெறும்; சருமத்தின் பொலிவை அதிகரிக்கும்; சருமத்தில் சுருக்கம் விழுவதைக் குறைக்கும்.
லெமன் ஜூஸ்
எலுமிச்சை ஜூஸ் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. எனவே, சரும நோய்களில் இருந்து பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி உள்ளன. எனவே, இவை முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கும். சருமத்தைப் பொலிவுறச் செய்து இளமையாக வைத்திருக்க உதவும்.
லெமன் ஜூஸைத் தொடர்ந்து பருகிவர, வறண்ட சருமம் மாறி பளபளக்கும். முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் கருவளையம் போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வு தரும்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. எனவே, இது சருமத்தைப் பொலிவாகவும் முகத்தைப் புத்துணர்வோடும் வைத்திருக்க உதவும். இயற்கையாகவே சருமம் மின்னும். சீரான, ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.
இஞ்சி ஜூஸ்
இஞ்சியில் பொட்டாசியம், வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன. இது முகப் பொலிவை அதிகரிக்கும்; சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். மதிய உணவுக்கு பின் தினமும், இரண்டு டீஸ்பூன் அளவு குடிக்கலாம்.
திராட்சைப்பழ ஜூஸ்
திராட்சையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளன. இது சருமத்துக்கு இளமையான தோற்றத்தையும், முகப் பொலிவையும் தரும்.