இங்கிலாந்தில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர். கடையின் ஊழியரான மிஸ்டர் K-யிடம் வருகிறார் வாடிக்கையாளர். (மிஸ்டர் எக்ஸ்தான் கோமாளியாச்சே. நாம இந்த கேரக்டருக்கு K-ன்னு பேர் வெச்சுப்போம்!)
மிஸ்டர் K
வாடிக்கையாளர்: ‘மிஸ்டர்.. எனக்கு அரைக்கிலோ வெண்ணெய் வேணும்’
மிஸ்டர் K: ‘ஸாரி சார். இங்க ஒரு கிலோ பேக் மட்டும்தான் இருக்கு. அரைக்கிலோ இல்லை’
‘பரவால்லப்பா… பாதி கட் பண்ணிக்குடு’
‘அப்படியெல்லாம் தரமாட்டாங்க சார். பேக் கட் பண்ணவெல்லாம் முடியாது. ஒரு கிலோதான்’
‘ப்ச். நான் கஸ்டமர் கேட்கறேன். முடியாதுன்ற? போய் மேனேஜர்கிட்ட கேட்டுட்டுச் சொல்லுப்பா’
மிஸ்டர் K கடுப்பாகிறான். ‘யார்றா இவன் கோமாளி’ என்ற கோபத்துடன், திரும்பி, மேனேஜர் அறை நோக்கி நடக்கிறான்.
சாத்தப்பட்டிருந்த அறையைக் கையால் தள்ளித் திறந்து உள்ளே அமர்ந்திருந்த மேனேஜரிடம் கேட்கிறான்:
‘சார்… நம்ம கடைல வெண்ணெய் அரைக்கிலோவா பிரிச்சு தர்றதில்லதானே? ஒரு லூசு வந்து அரைக்கிலோதான் வேணும்னு ஒரே டார்ச்சர் பண்றான் சார்’
சொல்லிவிட்டுப் பார்க்க – மேனேஜரின் பார்வை – தன்னைத் தாண்டி, தனக்குப் பின்னால் நிலைத்திருப்பதைக் கவனிக்கிறான். திரும்பிப் பார்க்கிறான். அங்கே இவன் முதுகுக்கு அரையடி தள்ளி அந்த வாடிக்கையாளர் நின்று கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னாலேயே வந்திருக்கிறார் அவர் என்பதை உணர்ந்து கொள்கிறான் மிஸ்டர் கே. சட்டென்று மீண்டும் அதே குரலில், கொஞ்சமும் தயங்காமல் மேனேஜரைப் பார்த்துச் சொல்கிறான்:
‘நல்லவேளை சார்.. இந்த ஜெண்டில்மேனும் அரைக்கிலோ வேணும்னு கேட்கறாரு.. ரெண்டு பேருக்கும் பிரிச்சுக் குடுத்துடவா?’
அவன் சமாளித்துவிட்டதை உணர்ந்த மேனேஜர், ‘சரி.. போய்க் குடுத்துட்டு இங்க வா’ என்கிறார்.
அந்த வாடிக்கையாளருக்கு அரைக்கிலோ வெண்ணெயை விற்றுவிட்டு மேனேஜர் அறைக்குள் நுழைகிறான் மிஸ்டர் K.
‘நீ அந்த கஸ்டமரைத்தான் லூசுன்ன. அவர் பார்க்கறார்னதும் டக்னு பேச்சை மாத்தி சமாளிச்சுட்ட. வாய் ஜாஸ்திடா உனக்கு. ஆனாலும் சமாளிச்சுடற. எந்த ஊரு உனக்கு?’
‘மெக்சிகோ சார்’
‘மெக்சிகோவா…. நல்ல ஊராச்சே.. அந்த ஊரை விட்டு ஏண்டா இங்க வந்த?’
‘ப்ச்.. என்ன சார் ஊரு. ஊர்ல பாதி பேர்தான் ஃபுட்பால் ரசிச்சு வாழ்க்கைய வாழ்ந்துட்டிருப்பாங்க. பாக்கி ஆளுக பூரா காசுக்காக என்ன தொழில் வேணாலும் பண்ற ஆளுக’
‘என்னப்பா இப்டி சொல்ற? என் பொண்டாட்டிகூட மெக்சிகோதான்’
டக்னு கேட்டான் நம்மாளு: ‘அப்டியா சார்.. ஃபுட்பால்ல எந்த டீமை சப்போர்ட் பண்ணுவாங்க சார்?’
உடனே, இங்கிலாந்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருந்தனவா, அதில் மிஸ்டர் K என்பவர் வேலை செய்தாரா, மெக்சிகோவில் ஃபுட்பால் ஃபேன்ஸ் இருக்கிறார்களா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்காதீங்க. இந்தக் கதைல மிஸ்டர் K சமாளிச்சதை மட்டும் கவனிங்க. அவனுக்கு இருந்ததுதான் Presence of Mind. சமயோசிதம். நம்ம ஊர்ல அதுக்கு சரியான உதாரணம் பீர்பால்!
இந்த சமயோசிதம் நம்ம எல்லாருக்கும் மிக மிக மிக அவசியமான ஒண்ணு. படிக்கற பள்ளி, கல்லூரி, பணி புரியும் அலுவலகம், குடும்பம்னு இந்த Presence of Mind அதிகம் இருக்கறவங்க மத்தவங்களை விட ஒரு படி முன்னே இருப்பதை கவனிச்சிருப்பீங்க. ‘அவன் எப்படியாச்சும் சமாளிச்சுடுவாண்டா’ என்று நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கறவங்கள்ல யாரையாவது ஒருத்தரைப் பத்தி நினைச்சிருப்பீங்கள்ல.. அந்த ‘அவனு’க்கு நிச்சயம் இந்த சமயோசித புத்தி அதிகம் இருக்கும்.
சரி, இந்த சமயோசித புத்தியை எப்படி வளர்த்துக்கறது?
1. கவனித்துக் கேளுங்கள்
கவனித்தல்
வீடோ, பள்ளி / கல்லூரியோ, அலுவலகமோ உங்ககிட்ட பேசறதை கூர்ந்து கவனிங்க. சும்மா வெற்றுத் தகவல் பகிர்தல்ன்னாலும் சரி… அவங்க சொல்றதை கூர்ந்து, கவனிச்சு, உள்வாங்கிக் கேளுங்க. புரியலைன்னா, ‘என்ன சார்?’ அப்டினு திரும்பக் கேளுங்க. அப்படிக் கேட்டாலே.. நீங்க கவனிச்சுக் கேட்கறீங்கனு அவங்க புரிஞ்சுகிட்டு இன்னும் தெளிவா பேசுவாங்க. அப்படி கவனிச்சுக் கேட்கற பழக்கம் குறைஞ்சா… நஷ்டம் நமக்குத்தான் பாஸ்!
2. ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யப் பழகுங்கள்
Multi Tasking
ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டாஸ்க்-குகளை செய்யப் பழகுங்கள். ஒரு வேலையைச் செய்றப்ப, முடிஞ்சுபோன ஒரு வேலையைப் பத்தியோ, அடுத்து முடிக்க வேண்டிய வேலையைவோ நினைச்சுட்டிருக்கறது, செய்யற வேலையை பாதிக்கும். என்னடா.. மாத்தி சொல்றேன்னு பார்க்காதீங்க. அப்படி பாதிக்காம இருக்கப் பழகணும்! Multi Tasking! இதைப் பழகிட்டவங்களுக்கு சமயோசிதப் புத்தி வளருதாம்பா!
3. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்க
emotional
முக்கியமான விவாதம், பேச்சு இந்த மாதிரியான நேரங்கள்ல உணர்ச்சிவசப்படாதீங்க. ‘Proffessional ஆ எடுத்துக்கப்பா.. Emotional ஆகாதே’ இதைக் கேட்காதவங்க கம்மி. இந்தத் திறன், நம்மை சமயோசிதமா யோசிக்கவைக்க மிக அவசியம். ஒரு விஷயம் நடக்கறப்ப எமோஷனலா அதை எதிர்கொண்டோம்னா, அங்க சமயோசிதம் செயல்படறது ரொம்ப கம்மி.
4. முதலில் முடிக்கவேண்டிய வேலைகளுக்கு முன்னுரிமை
முன்னுரிமை
ஒரே வார்த்தைல சொல்லணும்னா, Prioritize. இன்னைக்கு இத்தனை வேலை இருக்கு. இது இதை, இப்பப்ப முடிக்கறோம்னு ஒவ்வொரு நாளையும் தொடங்குங்க. இருக்கற 24 மணிநேரத்துக்கும் ஷெட்யூல் போட்டு வேலை செய்யாதீங்க. இன்னைக்கு முடியாது, இதை நாளைக்குப் பார்த்துக்கலாம்னா, அடுத்த நாள் ஷெட்யூல்ல வைங்க. மேக் இட் சிம்பிள்!
5. ப்ரேக் ப்ளீஸ்!
Break
ரொம்ப ஸ்ட்ரெஸ் இருந்தா, அது நிச்சயம் மூளையைப் பாதிக்கும். இதை ஆராய்ச்சி சொல்லுதுன்னெல்லாம் சொல்லவே தேவையில்லாத அளவுக்கு எல்லாரும் உணர்ந்திருப்பீங்க. ஸ்ட்ரெஸ்ஸா உணர்றப்ப ஒரு ப்ரேக் எடுத்துக்கோங்க. அது அஞ்சு நிமிஷம் மொட்டை மாடில உட்கார்ந்து வெட்ட வெளியை ரசிக்கறதா இருக்கலாம்.. அஞ்சு நாள் லீவு போட்டு அக்கடானு ஊர் சுத்தறதா இருக்கலாம்.. உங்க மைண்டை ஸ்ட்ரெஸ் இல்லாம பார்த்துக்க வேண்டியது.. நீங்க.. நீங்க மட்டும்தான்! குறைந்த பட்சம் அங்க இங்கனு நடக்கறதாவது அவசியம்.
6. பிடிச்ச விஷயத்தை விடாதீங்க.
வேலைகள் தவிர்த்து உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் செய்வதை எந்தக் காரணம் கொண்டும் விடாதீங்க. கிடார் வாசிக்கறதோ, பயணம் மேற்கொள்வதோ எதுவாக இருந்தாலும் அப்பப்ப பண்ணிடுங்க. இது மற்ற நாட்களுக்கான உற்சாகத்தைக் குடுத்து, முதல் 4 பாய்ண்ட்ஸ் வளர வழி வகுக்கும்.
இவைகள் போக, நீங்க நீங்களா இருக்கறது, அந்தக் கணத்துல வாழ்றதுனு சில ஆழமான விஷயங்களும் சமயோசித புத்தி வளர ரொம்ப உதவுமாம். அதெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல இந்த ஆறையும் கடைபிடிக்க ஆரம்பிப்போம். நாமளும் மிஸ்டர் K மாதிரி Presence Of Mindல கில்லி ஆகி, வெறிக்கொடியைத் தொடுவோம்!