பப்பாளிப்பழம் மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இதில், ஜீரணத்தை தூண்டும் சக்தி இருப்பதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழம் சாப்பிடுவது நல்லது.
பப்பாளி குடல் நோய்களை குணமாக்குவதோடு, மலச்சிக்கல், மூல நோய் மற்றும் ரத்த ஒழுக்கு, நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடியது. காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு மலச்சிக்கல் பிரச்னையே வராமல் பார்த்துக்கொள்ளும்.
பப்பாளிப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு அடிக்கடி பப்பாளிப்பழம் கொடுத்து வந்தால் அவர்களது உடல்வளர்ச்சி நன்றாக இருக்கும். கூடவே பல், எலும்பு போன்றவை வலுப்பெறும். பிரசவமான பெண்கள் பப்பாளிக்காய் பொரியல், கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால், நன்றாக பால் சுரக்கும். இதே பப்பாளிக்காயை சாப்பிடுவதன்மூலம் உடலில் தேவையற்ற சதைகள் குறையும்.
ஆக, பப்பாளிப்பழம் மருத்துவக்குணம் நிறைந்தது என்பது நமக்குத்தெரியும். பப்பாளி மரத்தின் இலையிலும் நிறைய மருத்துவக்குணங்கள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.
பப்பாளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் நீரையும், வெந்த இலையையும் நரம்புத்தளர்ச்சி, நரம்பு வலி உள்ள இடங்களில் ஊற்றி வந்தால் வெகுவிரைவில் குணமாகும். இதேபோல், பப்பாளி இலையை தீயில் வாட்டி நரம்புத்தளர்ச்சி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுப்பதாலும் நிவாரணம் பெறலாம். இலையை நசுக்கி வீக்கம், கட்டி உள்ள இடங்களில் கட்டி வர குணம் கிடைக்கும். இலை மட்டுமல்லாமல் இலைக்கொழுந்தையும் இதேபோல் அரைத்து பற்று போட… வீக்கம் குணமாவதோடு ஆறாத புண்கள் ஆறும்; குதிகால் வீக்கம் சரியாகும். பப்பாளி இலையை வேப்பெண்ணெய் விட்டு வதக்கி உடல்வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் குணம் கிடைக்கும்.
பப்பாளி இலைச்சாறு மலேரியா மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி இலையில் விட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கின்றன. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது. நோய் பாதிப்பு உள்ளவர்கள் புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் தினமும் 4 முறை அருந்தி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.