கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லதா. இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும். எப்போது அதன் தேவை அவசியம் என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை
கண்களை அழகாக்க, இன்று விதவிதமான காஸ்மெட்டிக் லென்ஸ்கள் வந்துவிட்டன. பார்வையை மேம்படுத்த லென்ஸ்கள் பொருத்திய காலம் போய், அழகுக்காக லென்ஸ்கள் பொருத்தும் காலம் வந்துவிட்டது. கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லதா. இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும். எப்போது அதன் தேவை அவசியம் என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.
பார்வைக் குறைபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் லென்ஸ்களில் ஹார்டு, சாஃப்ட், செமி சாஃப்ட் என மூன்று வகைகள் உள்ளன. இதில், 90 சதவிகிதத்தினர் சாஃப்ட் ரக லென்ஸுகள்தான் பயன்படுத்துகின்றனர்.
ஆரம்ப காலங்களில் ஒரு வருடத்துக்குப் பயன்படுத்தக் கூடிய லென்ஸ்கள் மட்டுமே இருந்தன. தற்போது, தினமும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டெய்லி டிஸ்போசபிள் (Daily disposable) லென்ஸ்கள், ஒரு மாதம் வரை பயன்படுத்தும் லென்ஸ்கள் எனப் பலவகைகள் வந்துவிட்டன.
பார்வைக் குறைபாட்டுக்காகக் கண்ணாடி அணிவது பல வருடங்களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடி அணிவதைச் சிலர் அசெளகரியமாகவும் கருதுவார்கள். அவர்கள் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம்.
அதேபோல ஒருவர், மிக அதிகமான `பவர்’ கொண்ட கண்ணாடி அணியும்போது, கண்ணாடி மிகத் தடிமனாகவும் பார்வை, தெளிவு இல்லாமலும் இருக்கும். எனவே, கண்ணின் பவரானது 4-க்கும் மேல் அதிகரித்து உள்ளவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் அவசியமாகிறது.
இரண்டு கண்களும் வெவ்வேறு பவராக இருந்தால், அப்போது கான்டாக்ட் லென்ஸ் தேவை கட்டாயம். இதனை அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.
கான்டாக்ட் லென்ஸ்களை நாம் பார்வைத்திறன் மேம்படவும் அழகுக்காகவும் பொருத்திக்கொள்கிறோம். முறையாகப் பயன்படுத்தும்போது, எந்தப் பாதிப்போ, பக்கவிளைவுகளோ இல்லை. ஆனால், உரியமுறையில் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிவதே நல்லது.
பராமரிக்கும் முறை
காலையில் லென்ஸ் அணிவதற்கு முன்னர், கைகளை நன்றாகக் கழுவவேண்டியது அவசியம். லென்ஸ் அணிந்துகொண்டு கண்களைக் கசக்கக் கூடாது. பயன்பாடு முடிந்ததும் கழற்றிப் பாதுகாக்க வேண்டும்.
தினமும் லென்ஸைக் கழற்றி வைக்கும்போது, அதற்கு எனப் பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட சொல்யூஷனைக் கொண்டு கழுவ வேண்டும்.
ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும்போதும், லென்ஸ் பாக்ஸில் ஒருமுறை பயன்படுத்திய சொல்யூஷனைக் கீழே ஊற்றிவிட்டு, புது சொல்யூஷனைப் பயன்படுத்த வேண்டும்.
கான்டாக்ட் லென்ஸ் அணிந்தபடி தூங்கக் கூடாது; முகம் கழுவக் கூடாது; அதுபோல், அழவும் கூடாது.
கான்டாக்ட் லென்ஸைப் பொருத்திக்கொண்டு வெளியில் செல்லும்போது சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் நேரடியாகக் கண்ணில் படாதவாறு பாதுகாக்க வேண்டியதும் மிக முக்கியமானது.
குறிப்பாக, பைக் ஓட்டும்போது, தூசு, புழுதிகளில் இருந்து கான்டாக்ட் லென்ஸைப் பாதுகாக்க ஹெல்மெட் அல்லது கண்ணாடி கண்டிப்பாக அணிய வேண்டும்.
லென்ஸை அதன் ஆயுள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கும் மேல் பயன்படுத்தினால், தொற்று, எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டு, கண்களைப் பாதிக்கப்படும்.
லென்ஸை அதற்குரிய பெட்டியில் வைக்க வேண்டும். லென்ஸைக் கழுவும் சொல்யூஷன் உபயோகிக்கும் கால அளவை மறக்காமல் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. ஆனால், 12 மணி நேரத்துக்கு மேல் லென்ஸைப் பயன்படுத்துவதைக் குறைப்பது, கண்களுக்கு நல்லது.
கண் எரிச்சல், கண் சிவத்தல், பார்வையில் பிரச்சனை போன்றவை உண்டானால், உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். அவசியப்பட்டால், லென்ஸை மாற்ற வேண்டும்.