பல்வேறு விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு மனிதனை மனிதனாக உருவாக்குகின்றன. எனவே, நாம் நமது ‘ஈ.கியூ.’வையும் வளர்த்துக்கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
உங்களின் ‘ஈ.கியூ.’ எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
‘ஐ.கியூ.’ என்றால் ஒருவரின் புத்திசாலித்தனத்தின் அளவு என்று நமக்குத் தெரியும். அதேபோல, ‘ஈ.கியூ.’ என்றால் என்னவென்று தெரியுமா?
‘இன்டெலிஜென்ஸ் கோஷன்ட்’ (ஐ.கியூ.) போல ‘எமோஷனல் கோஷன்ட்’ என்பதன் சுருக்கம்தான் ‘ஈ.கியூ.’
நம்முடைய, நம்மைச் சுற்றி இருப்பவர்களுடைய உணர்வுகள், எண்ணங்களைக் கையாளும் திறனே ‘ஈ.கியூ.’
ஒருவரின் ஆளுமை சிறந்து விளங்க ‘ஐ.கியூ.’ போல ‘ஈ.கியூ.’ வும் அவசியம்.
‘ஐ.கியூ.’வை சில பொது அறிவுச் சோதனைகள் மூலம் அறிந்து விடலாம். நமது ‘ஈ.கியூ.’வை எப்படி அறிவது?
இதோ, சில வழிகள்…
மன்னிப்புக் கோருதல் :
சிறுதவறு நேரும்போதும் அதற்குப் பொறுப்பேற்று, மன்னிப்புக் கோருதல். இன்று ‘ஸாரி’ என்பது சர்வசாதாரணமாகப் பயன் படுத்தப்பட்டு அதன் அர்த்தமே மறைந்துவிட்ட நிலை. அவ்வாறு இன்றி, நாம் செய்த ஒரு தவறை உண்மையாக உணர்ந்து மன்னிப்புக் கோருதல். அது நமது ‘ஈ.கியூ.’ நன்றாக இருக்கிறது என்பதற்கான அடையாளம்.
சுயகேள்வி எழுப்புதல் :
பொதுவாக, பல விஷயங்களில் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்வது அரிதாக இருக்கிறது. நாம் செய்வதெல்லாம் சரி என்ற எண்ணமும், நம்மை நாம் கேள்வி கேட்பது நமது தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும் என்ற கருத்தும்தான் காரணம். ஆனால் நம்மிடம் நாம் நியாயமான கேள்வி எழுப்பிக்கொள்வதற்கும், நம்மை நாம் சந்தேகப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒவ்வொரு செயலின்போதும் சில அத்தியாவசியமான கேள்விகளை நமக்குள் எழுப்பிக்கொள்வதன் மூலம், நம்முடைய ‘ஈ.கியூ.’வை வலுப்படுத்தலாம். இக்கேள்விகள் சுய விழிப்புணர்வை ஏற்படுத்துமே தவிர, நம்மை நாமே சந்தேகப்படச் செய்யாது.
இனிப்பு தடவிய வார்த்தைகள்? :
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது என்றால், மற்றவர்களுடன் எந்தச் சூழலிலும் ஒத்துப்போக வேண்டுமா, எப்போதும் இனிப்பு தடவிய வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால், நல்ல ஈ.கியூ. உள்ளவர், உண்மையைப் பேசத் தயங்குவதில்லை, மற்றவர்களின் குற்றம் குறைபாடுகளை உரியவிதத்தில் எடுத்துச் சொல்லாமல் பின்வாங்குவதில்லை. அவசியமான விஷயங்களை ‘நறுக்’கென்று சொல்வது அவசியம் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
வழிகாட்டுதல் :
நமது உணர்வுகளை சரியாகக் கையாள வழிகாட்டும் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். நாம் நமது உணர்வுகளை சரியாகக் கையாளாமல் கன்னாபின்னாவென்று நடந்துகொள்கிறோம் என்று தோன்றினால், இந்த ஆலோசகர்களின் உதவியை நாடலாம். அவர்களது ஆலோசனையும், வழிகாட்டலும், நமது உணர்வுகளை நல்லவிதமாகக் கையாள மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதா? :
‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்பது எப்போதும் மகிழ்ச்சியான நபராக இருப்பது அல்ல. அதேபோல, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது, எப்போதும் நம்பிக்கையோடு இருப்பது, எப்போதும் மகிழ்ச்சியாக, அமைதியாக, ஊக்கமாக இருப்பதும் அல்ல என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மாறாக, நமக்குள் இயல்பாக எழும் உணர்வுகளை செம்மையாக மேலாண்மை செய்வதுதான் நல்ல ‘ஈ.கியூ.’வின் அடையாளம் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பல்வேறு விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு மனிதனை மனிதனாக உருவாக்குகின்றன. எனவே, நாம் நமது ‘ஈ.கியூ.’வையும் வளர்த்துக்கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.