சீனி’ எனப்படும் வெள்ளைச் சர்க்கரையை விட, வெல்லம் நல்லது என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். வெல்லம் ஏன் நல்லது என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம்.
சர்க்கரையை விட வெல்லம் நல்லது
ஏன் வெல்லம் நல்லது? இதோ, இந்தக் காரணங்களால்தான்…
* வெல்லம், எடையைக் குறைக்க உதவும் ஒரு நல்ல உணவு. இதில் உள்ள பொட்டாசியம், உடலில் நீர் தங்குவதைக் குறைத்து உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுகிறது. நமது உணவில் வெல்லத்தைச் சேர்ப்பதன் மூலம் இனிப்பை உட்கொண்டாலும், உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
* வெள்ளைச் சர்க்கரையைப் போல வெல்லம் நேரடியாக உடனடியாக ரத்தத்தில் கலக்காமல் நீண்ட நேரம் சக்தியைத் தரக்கூடியது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக உயர்வது தடுக்கப்படும்.
* சளித்தொல்லை, இருமலால் அவதிப்படுபவர்கள் வெல்லத்தை வெந்நீரில் அல்லது டீயில் கரைத்து அருந்தலாம்.
* வெல்லம் உடலின் நொதிகளை ஊக்குவித்து, ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
* இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பிற உணவுப்பண்டங்களைப் போலல்லாமல் வெல்லம் கல்லீரலைச் சுத்தம் செய்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கல்லீரலை பலமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உணவில் வெல்லம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துகள், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் வலிகளையும் சரிப்படுத்தும்.
* வெல்லம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், வயிற்றை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுவதால் பல்வேறு நோய்களைத் தடுத்து கோடைகாலத்துக்கு ஏற்ற உணவுப் பொருளாக உள்ளது.
* ரத்தத்தில் தேவையான அளவு சிவப்பணுக்களைப் பராமரிக்க உதவுவதன் மூலம் வெல்லம் உடல் சோர்வடைவதைத் தடுக்கிறது.
* ஓரளவு வெல்லத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது, ரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்ய உதவும்.
* வெல்லத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் கனிமச் சத்துகளும் இயற்கை எதிர்வினைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன. வெல்லம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.
* வெல்லத்தில் நிறைந்திருக்கும் அதிக அளவு மக்னீசியம் உட்பொருள், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
* வெல்லத்தின் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அமிலங்களின் அளவை சரிவரப் பராமரிக்க உதவுவதால் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்க வழிசெய்கிறது.