மதுவை அருந்தும் பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.
கர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
‘ஆல்கஹால்’ நிரம்பிய மதுவை அருந்தும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.
ஆண்கள் வீதிக்கு வந்து குடித்தால், பெண்களில் பலர் வீட்டிலேயே குடிக்கிறார்கள். உயர்ந்த அந்தஸ்திலுள்ள பல பெண்களும், ‘பார்ட்டி’ என்று வரும்போது, ‘குடிக்க’ ஆரம்பிக்கத் தொடங்கி, அதற்குப் பழகி, பிறகு அடிமையாகி விடுகிறார்கள்.
கூலி வேலை பார்ப்பவர்களோ, வேலை பளுவின் காரணமாக ஏற்படும் உடல்வலி, அசதியைப் போக்க குடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். காரணங்கள் எதுவாக இருந்தாலும், சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் இன்று பெண்களில் பலரும் குடிக்கிறார்கள். அது மட்டும் உண்மை.
அதே போல, பெண் ‘கர்ப்பமாகி விட்டால்’ குடித்தால் என்னவாகும் என்பது தான் பிரச்சினை!
கர்ப்பமான பெண்கள் ஏற்கனவே மதுவிற்கு அடிமையாகி இருந்தால் அதைத் தவிர்க்க முடியாமல் குடிப்பதுண்டு. சில குடும்பங்களில் கர்ப்பமாகும் போது ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி ஆகிய தொந்தரவுகளைப் போக்குவதற்காகக் குடிப்பார்கள். இது பிரசவத்திற்கு முன்பும் உண்டு. பிரசவமான பிறகும் உண்டு.
‘ஆல்கஹால்’ மனித உடலில் பல்வேறு வினைகளை உண்டு பண்ணி விளைவுகளை ஏற்படுத்துவதால், அதையும் ஒரு மருந்தாகத் தான் மருத்துவரீதியில் கருத வேண்டியுள்ளது. பல்வேறு திரவ மருந்துகளிலும், பசியைத் தூண்ட ‘ஆல்கஹாலை’ குறிப்பிட்ட அளவிற்கு சேர்ப்பது உண்டு. எனவே, இவற்றைப் பருகுவதாலும் கர்ப்பமடைந்த பெண்ணின் ‘கரு’ பாதிக்கப்பட்டு விடும்.
ஆக, கர்ப்பமடைந்த பெண்கள் இன்று மது (ஆல்கஹால்)வினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். மது, மாதுவினால் ஆபத்து ஏற்படும் என்பார்கள். ஆனால், இங்கோ மதுவினால் மாது ஆபத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள்.
மது, பல வகைகளில் மனித உடலைப் பாதிக்கிறது. குடலை பாதித்து ‘புண்களை’ ஏற்படுத்துகிறது. மூளை, நரம்பு மண்டலங்களை பாதிக்கிறது. இரத்த செல்களைப் பாதிக்கிறது. கணையம், கல்லீரல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இப்படி கர்ப்பிணியின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும் போது, இவை ஒட்டுமொத்தமாக அவளது உடலை பாதித்து கருவையும் பாதிப்படையச் செய்கிறது! அது மட்டுமல்லாமல் ‘ஆல்கஹால்’ தனியாகவும் கருவையும் பாதிக்கிறது.
கர்ப்பம் தரிக்கும் முன்பாக பெண் மது அருந்தினால், அவளுக்கு ‘மாதவிடாய்’ ஏற்படுவதே சரியாக ஏற்படாது. கருத்தரிப்பே நடக்காமல் பல பெண்களும் ‘மலடி’யாகிவிட வாய்ப்புகள் உண்டு. கர்ப்பம் தரித்த பிறகு மது அருந்தினால் பெண்களுக்கு ‘கருச்சிதைவு’ ஏற்படும்.
‘சிசு ஆல்கஹால் பாதிப்பு’ என்றே இந்த பாதிப்பிற்கு (FETAL ALCOHOL SYNDROME) பெயர் வைத்துள்ளார்கள்.
இந்த பாதிப்பினால், முகம் விகாரமாக இருக்கும். ‘எனாமல்’ உருவாகாத பல்லுடன் குழந்தை பிறக்கும். இதய அறை சுவர்களுக்கிடையே ஓட்டை உருவாகி இருக்கும். மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும். தலை சிறியதாக இருக்கும். மூளை பாதிக்கப்பட்டு, அறிவுத்திறன் குன்றியதாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும், எந்த ரூபத்திலும் மதுவை நாடாமல் இருக்க வேண்டும்.