28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
mosquito 3117464f
மருத்துவ குறிப்பு

மரபு மருத்துவம்: கொசுக் கடி – தப்பிக்க இயற்கை வழி

கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு’ என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல்ல முடியாது. காரணம் சமீபகாலமாகச் சிறிய கொசுக்கள் மிகப் பெரிய வேலையையும் திறம்படச் செய்துகொண்டிருக்கின்றன. சாதாரணக் காய்ச்சல் தொடங்கி டெங்கு, ஜிகா வரை உண்டாக்கும் மிகப் பெரிய காரணியாகச் சின்னஞ்சிறு கொசு உருமாறி இருக்கிறது. சில மாதங்களுக்கு மட்டும் தலை காட்டாமல் ஓய்வெடுத்துவிட்டு, பெரும்பாலான மாதங்களில் ஊரெங்கும் கொசுக்கள் ஒயிலாக வந்துகொண்டிருக்கின்றன.

கொசுக்களை அழிக்கக் கொசுவர்த்திச் சுருள், லிக்விடேட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும்போது, அவற்றிலுள்ள வேதியியல் பொருட்கள் காரணமாகத் தலைவலி, நுரையீரல் தொந்தரவுகள் உருவாகுவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு. இன்னும் சில வீடுகளில் எலி, கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் தெளிப்பான்களை, கொசுக்களை அழிக்க வீடு முழுவதும் தெளிக்கும் ‘புத்திசாலித்தனம்’ உயிரைப் பறிக்கும் அளவுக்கும் கொண்டு செல்லலாம். சரி, கொசுக் கடியிலிருந்து தப்பிக்க இயற்கை அமைத்துக் கொடுத்த வழிமுறைகள் என்ன?

வாசனை குளியல்

குளிக்கும்போது, நீரில் வாசனை அதிகம் தரும் கற்பூரவல்லி, கறிவேப்பிலை, துளசி, செம்பருத்தி இதழ்கள், எலுமிச்சை இலைகள், உலர்ந்த நெல்லி போன்றவற்றைக் கலந்து குளிக்கலாம். புதினா, திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி உடலில் தேய்த்த பின்னர் குளிக்கலாம். ‘நலங்கு மாவு’ போன்ற மணம்மிக்க இயற்கை குளியல் பொடிகளைப் பயன்படுத்துவதும் சிறந்தது. இயற்கையாக உடலில் வாசனை கமழும்போது கொசுக்கள் கடிப்பதற்குத் தயக்கம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலை, மாலை என இருவேளை நீராடி, உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது.

மூலிகை புகை

வீட்டுக்கு முன் வேப்பிலை, நொச்சி, மாவிலை, மா மரத்தின் பூக்களைக் கொண்டு புகை போடலாம். கிராமங்களில் பின்பற்றப்படும் இந்த முறை மனிதர்களோடு சேர்த்து, கால்நடைகளையும் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றும். மாலை வேளையில் வீட்டு அறைகளில் சாம்பிராணியோடு உலர்ந்த வேப்பிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலைகளைக் கொண்டு சிறிது நேரம் புகை காட்டலாம். அந்தக் காலத்தில் அரண்மனை விருந்தினர்களை வரவேற்க, அகில்கட்டை புகைதான் முதல் தேர்வு. வாய்ப்பு இருந்தால் அகில்கட்டை புகையூட்டி, வீடுகளைத் தூய்மைப்படுத்தலாம்.

வசம்பு சுட்ட கரி, தர்ப்பைப்புல், எலுமிச்சை புல், மா இலை / பூ, வேப்பிலை, நொச்சி, தேங்காய் சிரட்டை போன்றவற்றை ஒன்றாகக் கலந்து புகை போடலாம் அல்லது இவற்றை நீர்விட்டு அரைத்து வில்லைகளாக வைத்துக்கொண்டும் புகை போடலாம்.

வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க வேதியியல் கலவை நிறைந்த வாசனை திரவியங்களுக்குப் பதிலாக, சந்தனக் கலவையைப் பயன்படுத்துவது சிறந்தது. கற்பூரம், எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து அறைகளில் தெளிக்கலாம். சித்த மருந்தான கற்பூராதி எண்ணெயை லேசாக உடலில் தடவிக்கொண்டால், கொசுக்கடியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். காடுகளில் வாழும் மக்கள், கொசுக்கடி மற்றும் பாம்பு கடியிலிருந்து தப்பிக்க வேப்பெண்ணெயைத் தங்கள் உடலில் தடவிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

கொசு கடித்துவிட்டால்.

வீட்டைச் சுற்றிச் சுகாதாரமான சூழலை உண்டாக்குவது, தேவையற்ற இடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். கொசு வலை அமைப்பதும் பாதுகாப்பான உத்தி.

கொசு கடித்த பின் உண்டாகும் அரிப்புக்கு அருகன் தைலம், குங்கிலிய வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத் தடவலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குப் புண் ஏற்படாமல் இருக்க இந்த முறை நிச்சயம் உதவும்.

கொசு விரட்டும் தட்டான்கள்

தட்டான்களும் பறவைகளும் நம்மருகே வாழ்வதற்கான சூழல் இருந்தபோது, கொசுக் கூட்டம் நம்மைச் சுற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏனென்றால், தட்டான்களுக்கும், சில பறவைகளுக்கும் முக்கிய உணவே கொசுதான். கொசுக்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டதற்கு நம் சுற்றுச்சூழல் சீரழிக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இனிமேலாவது, இயற்கையாகக் கொசுக்களை விரட்டும் கொசுவிரட்டி மூலிகைகளைப் பயன்படுத்திக் கொசுக்களின் ஆதிக்கத்தைத் தடுப்போம்!mosquito 3117464f

Related posts

உங்களுக்கு தெரியுமா தாய் காரம் அதிகமான உணவை சாப்பிட்டால் தாய்ப்பால் காரமாக இருக்குமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…புகைப்பிடிப்போரின் அருகில் கர்ப்பிணிகள் இருந்தால், அது குழந்தையை எப்படி பாதிக்கிறது?

nathan

லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே!

nathan

தெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா? அதை போக்க இதை செய்தால் போதுமே

nathan

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இந்த 4 உணவுகளை உடனே சாப்பிடுங்கள்

nathan

பாதிப்புக்கள் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

nathan

உடலுக்குத் தேவை அமில கார பரிசோதனை முறை

nathan

பரவும் பன்றிக் காய்ச்சல்… வருமுன் காக்க இயற்கை வழிமுறைகள்!

nathan

சூப்பரா பலன் தரும்!! இருமலில் இருந்து உடனடி தீர்வு பெற எளிய டிப்ஸ்…

nathan