குழந்தைகளாக இருந்த போது பெற்றோரோடு ஒட்டி உறவாடுபவர்கள் டீன்ஏஜ் பருவத்தை நெருங்கும்போது சற்று விலகிவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு வெளியுலக நட்புகள் அதிகரித்து விடுகிறது. அந்த நட்பையே பெரிதாகவும் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் ஒரு காலகட்டத்தில் பெற்றோரை முழுவதுமாக ஒதுக்கிவிடும் மனநிலைக்கு மாறிவிடுகிறார்கள்.
வெளியுலக அனுபவம் வளரும் பருவத்தினருக்கு தேவைதான். அதற்காக பெற்றோரின் அருகாமை தேவை என்பதை உணர மறந்து விடுவது சரியல்ல, இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு பல பெற்றோருக்கு மனவேதனையை தருவதாக அமைந்திருக்கிறது. பலரின் குறைபாடும் இதுதான். ஏதாவது கேள்வி கேட்டால் ஒன்றை வரியில் பதில் சொல்லி விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் மற்றவர்களின் மணிக்கணக்கில் செல்போனில் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருப்பார்கள்.
இதுநாள் வரை தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரோடு ஒரு சில மணித்துளிகள் செலவழிக்கக்கூட பலருக்கு மனது வருவதில்லை. நேற்று வரை தங்களையே சுற்றி வந்தவர்கள் இன்று பாராமுகமாக ஓடுவது ஏன் என்று தெரியாமல் பல பெற்றோர்கள் குழம்பி போய் விடுகிறார்கள். அதற்கு நட்பு வட்டத்தில் பரிமாறிகொள்ளும் பேச்சு வார்த்தைகளை பெற்றோரிடம் பரிமாறிக் கொள்ள முடியாதது ஒரு காரணம். அவர்கள் வயதுக்கேற்ற விஷயங்களை பெற்றோரிடம் பேச முடியாமல் போகலாம்.
அதனால் தங்கள் உலகம் வேறு. பெற்றோர் உலகம் வேறு என்று பார்க்கிறார்கள். வீட்டை விட வெளியுலகம் அழகாக இருக்கலாம். ஆனால் அங்கே இருக்கும் ஆபத்துக்களை உணர வேண்டும். சிறிது தடம் புரண்டாலும் வாழ்க்கை அதள பாதாளத்துக்கு சென்று விடும். பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் அன்பும், பாதுகாப்பும் எப்போதும் தேவை.
அந்த பாதுகாப்பை வெளியுலகில் யாரும் தந்துவிட முடியாது. எதையுமே எதிர்பார்க்காமல் நம்மை நேசிக்கக்கூடியவர்கள் பெற்றோர் மட்டுமே. அவர்களோடு பேசவும், பொழுதை போக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். அன்போடும், அனுசரணையோடும் அவர்களிடம் பழகுங்கள். அப்படி இருந்தால் உங்கள் வெளியுலக வாழ்க்கை சிறிதும் பாதிப்படையாது.