சிலருக்குக் காலையில் எழுந்ததுமே வயிற்றைக் கிள்ளுவது மாதிரி இருக்கும். கிடைக்கிற எதையாவது எடுத்துச் சாப்பிட்டு, பசி போக்குவது அவர்கள் வழக்கமாகவும் இருக்கும். பசி எடுக்காமலேயே எதையாவது சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வெறும் வயிற்றில் இப்படிக் கண்டதையும் சாப்பிடுபவர்கள் கவனிக்க..! இப்படிச் சாப்பிடும் உணவுகள் ஒருவேளை நமக்கு நன்மை அளிக்கலாம். மாறாக, வேறு பிரச்னைகளையும்கூட ஏற்படுத்திவிடலாம். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை…. கூடாதவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்!
வெறும் வயிற்றில்
எதைச் சாப்பிடலாம்?
கோதுமையில் தயாரான உணவு… சிறப்பு!
காலைக் கடன்களை முடித்து, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்த பிறகு, டிஃபனுக்கு நல்ல தேர்வு கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பூரி, தோசை முதலியன. சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள பாசிப் பருப்பில் செய்த `தால்’ கூடுதல் சிறப்பு. நம் உடலுக்கு நாள் முழுக்கத் தேவையான புரோட்டீன், வைட்டமின்கள், இரும்புச்சத்து அத்தனையும் கிடைக்கும்.
கேழ்வரகு கூழ்… கேடு தராது!
`ராகி’ என சொல்லப்படும் கேழ்வரகின் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். எடைக் குறைப்புக்கு உதவும்; சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கொழுப்பைக் குறைக்கும். கேழ்வரகில் புரோட்டீன்களும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. ரத்தசோகை தீர்க்க உதவும். செரிமானத்துக்கு நல்லது. பிறகென்ன… கேழ்வரகு கூழை மருத்துவர் ஆலோசனையுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
முட்டைக்குச் சொல்லலாம் வெல்கம்!
வேக வைத்த முட்டையை, காலை டிஃபனோடு சாப்பிடுவது அவ்வளவு நல்லது. முட்டையின் வெள்ளைப்பகுதியில் உள்ள அதிகமான புரதச்சத்து, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைத் தூண்டும். அதோடு, அன்றைய தினத்துக்கு நமக்குத் தேவையான கலோரிகளும் கிடைத்துவிடுவதால், மேலும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை வரவழைக்காது.
தர்பூசணிக்கு தலை வணங்கலாம்!
வெறும் வயிற்றில் தாராளமாகச் சாப்பிடலாம். நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்களை அழிக்கும் தன்மையுள்ளது; வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. நம் ஆரோக்கியம் காக்கக்கூடிய நீர்ச்சத்துள்ளது தர்பூசணி. எல்லா நாட்களிலும் தர்பூசணி கிடைப்பதில்லை என்பதால், கிடைக்கும் நாட்களில் வாங்கிப் பயன்படுத்தலாம்.
கோதுமை பிரெட்டுக்கு `ஓ’ போடலாம்!
கிரீன் டீ, கோதுமை பிரெட் ஸ்லைஸ் இரண்டு… காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட அருமையான காம்பினேஷன். கோதுமை பிரெட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும், குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டும் நம் உடலுக்கு சக்தி தருபவை. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்கச் செய்பவை.
எதைச் சாப்பிடக் கூடாது!
பேக்கரி ஐட்டங்கள் வேண்டாமே!
முதல் நாள், `ஈவினிங்க் ஸ்நாக்ஸுக்கு ஆகும்’ என வெஜிடபுள் பஃப்ஸ், எக் பஃப்ஸ் போன்ற எதையாவது வாங்கிவைத்திருப்போம். அவற்றில் ஒரு பகுதி சாப்பிடாமல் மீதமாகியிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும், உண்ண வேண்டும் என்கிற வேட்கையைத் தூண்டுவிதத்திலும்கூட அவை இருக்கலாம். சிலருக்கு, முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு, `இவை வீணாகிப் போய்விடுமே’ என்கிற கவலை வரும். அதனாலேயே, காலையில் அதை வெறும் வயிற்றில் உள்ளே தள்ளுவதற்குத் தயாராக இருப்பார்கள். பேக்கரியில் தயாராகும் இதுபோன்ற மாவுப் பண்டங்களில் `ஈஸ்ட்’ சேர்ப்பார்கள். அது, நம் வயிற்று ஒழுங்கை பாதிக்கும்; எரிச்சலை ஏற்படுத்தும்; வாயுத்தொல்லையை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.
ஸ்வீட்ஸுக்குச் சொல்லலாம் ‘நோ’!
சிலருக்கும் இனிப்போடு அன்றைய நாளைத் தொடங்குவது பிடிக்கும். அதற்காக, லட்டில் தொடங்கி ராஜஸ்தான் ஹல்வா வரை, விதவிதமாகப் பொளந்துகட்டுவார்கள். உண்மையில், வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடாமல் நாளைத் தொடங்குவதே, அன்றைய தினத்தை இனிமையாக்கும் என்பதை மனதில் கொள்க. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், வெறும் வயிற்றில் நாம் எடுத்துக்கொள்ளும் இனிப்புகளில் இருக்கும் சர்க்கரை, உடலின் இன்சுலின் சுரப்பைக் கடுமையாகப் பாதிக்கும்; அது கணையத்துக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, சர்க்கரைநோய் தொடங்கி பெரிய உடல்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எச்சரிக்கை.
தயிர், யோகர்ட்… தவிர்க்கவும்!
`முதல் நாள் ராத்திரியே உறைக்கு ஊற்றி, காலையில் தயிரில் லேசாக சர்க்கரை தூவி, ஜில்லுனு சாப்பிடுற சுகம் இருக்கே. அது அலாதியானது’ என்கிற ரகமா நீங்கள்? தயிரோ, யோகர்ட்டோ தவிர்த்துவிடுங்கள் பாஸ்… குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஏனென்றால், இதில் கொழுப்பைக் கூட்டும், சர்க்கரையை சேர்க்கும் காரணிகள் உள்ளன. நல்ல குணங்கள் சில இருந்தாலுமே, டயட்டில் இருப்பவர்களுக்கு யோகர்ட், தயிர் வெறும் வயிற்றில் வேண்டவே வேண்டாம்.
தக்காளிக்குத் தடை போடலாம்!
`சமையலறைக்குப் போனோமா, ஒரு தக்காளியை நறுக்கித் துண்டுகளைச் சாப்பிடுவோமா…’ என வெறும் வயிற்றில் அமிலம் கரைப்பவர்களும் நம்மில் உண்டு. ஆம்… இது உண்மையும்கூட. தக்காளி நல்லதுதான். அது வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பல கூட்டுப்பொருட்கள் (Ingredients) நிறைந்தது, மறுப்பதற்கில்லை. ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்திவிடும். இது தொடர்ந்தால், கேஸ்ட்ரிக் அல்சர் வரை வந்து அவதிப்பட நேரிடும்.
வாழைப்பழம்
காலையில் ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்துப்போட்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவர்களுக்காக ஒரு செய்தி… வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்; இதய நோய்களை வரவழைத்துவிடும்.