ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். அதனை செய்யும் முறை, எந்த நேரம் செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆரோக்கிய வாழ்வை விரும்பும் அனைவருக்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். மேலும் அதனை செய்யும் முறை, எந்த நேரம் செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உடலில் சக்தி வேண்டும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால், சக்தியின்மையால் தலைச்சுற்றல் வரும். எனவே, பயிற்சி தொடங்கும் முன் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, பழங்கள் அளவோடு சாப்பிட்ட பின் செய்தால், உடல் சோர்வடையாது, உடல் வலுப்பெறும்.
தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். பயிற்சியைத் தொடங்கும் முன் உடல் உறுப்புகளை சிறிதுநேரம் அசைக்க வேண்டும். இது பயிற்சியை எளிதாக்கும்.
உடல் எடையை உடனே குறைக்கக் கூடாது. அதிக எடை உள்ளவர்கள் மாதம் 5 கிலோவுக்குமேல் குறைக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதுதான் சிறந்தது. உடற்பயிற்சியை முறைப்படி அறிந்து செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு உடல் தகுதியாய் உள்ளதா என்று அறிந்து செய்யுங்கள். இல்லையென்றால் காலப்போக்கில் அது சில நோய்கள் ஏற்படவும் காரணமாக இருக்கும்.
பயிற்சியின்போது தண்ணீர் அறவே குடிக்காமல் இருக்கக் கூடாது. நாக்கு உலரும்போது ஒரு வாய் தண்ணீர் பருக வேண்டும். பயிற்சி முடிந்து 15 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.
முடிந்த அளவு திறந்தவெளியில் காற்றோட்டமாக உடற்பயிற்சி செய்தல் நன்மை தரும். வயல், தோட்டம் இருப்பின் அங்கு உழைப்பது மிகச் சிறந்தது. ஓடுதல், நீந்துதல், நடத்தல் போன்றவை மிகச் சிறந்தவை.