பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. இங்கே மிகவும் வித்தியாசமான பன்னீர் குல்சாவின் செய்முறை குறிப்பை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா
தேவையான பொருட்கள்:
மைதா அல்லது கோதுமை மாவு – 3 கப்
சர்க்கரை – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 5 டீஸ்பூன்
பால் – 1 கப்
உப்பு
ஸ்டப்பிங்கிற்கு :
பன்னீர் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சாட் மசாலா – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
செயல்முறை :
* பன்னீரை துருவியது போல் நன்றாக உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.
* ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
* மற்றொரு பாத்திரத்தில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாவில் ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவை ஒரு மென்மையான மெல்லிய ஈரத் துணி கொண்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
* ஒரு பெரிய கிண்ணத்தில் உதிர்த்து வைத்த பன்னீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா போன்றவற்றை நன்கு கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.
* ஒரு உருண்டை மாவை எடுத்து ஒரு தடித்த வட்டுவாக தேய்க்க வேண்டும். வட்டத்தை மிகப் பெரியதாக செய்ய வேண்டாம்.
* இப்போது நீங்கள் தயாராக வைத்துள்ள ஸ்டப்பிங் பொருட்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.
* அதன் பின்னர் ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வடிவமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருட்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும்.
* இப்பொழுது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் குல்சாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். அடுப்பில் இருந்து குல்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிது வெண்ணெய் தடவ வேண்டும்.
* இப்பொழுது உங்களுக்கான பன்னீர் குல்சா பரிமாறத் தயாராக உள்ளது.
* நீங்கள் குல்சாவை நான்கு துண்டுகளாக வெட்டி, அதை உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சாப்பிடலாம்.