மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் தற்போது போலி முட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் போலி முட்டைகள்
மனிதன் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களில் தொடங்கிய போலி தயாரிப்புகள் தற்போது உணவுப்பொருட்களையும் விட்டுவைக்கவில்லை. அரிசியில் தொடங்கி தற்போது முட்டையில் வந்து போலி தயாரிப்புகள் நிற்கின்றன.
அன்றைய காலம்தொட்டு ஊட்டச்சத்துக்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோழி முட்டையை அதிகஅளவில் விரும்பி உண்ணும் வேளையில் தற்போது கோழி முட்டையிலும் போலிகள் உருவாகி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீன முட்டை என்ற பெயரில் மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் இந்த போலி முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன.
தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ள சீன போலி முட்டைகளின் வெள்ளை கருவிற்கு பதிலாக ஸ்டார்ச், ரெசின், சோடியம், ஆல்கனேட் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் கருவிற்கு பதிலாக ஆர்கானிக் அமிலம், பொட்டாசியம், ஜெலட்டின், கால்சியம் குளோரைடு, பென்சாயிக் அமிலம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் நிறத்தினை பெறுவதற்காக செயற்கை நிறங்கள் பூசப்படுகின்றன.
மேலும், முட்டையின் ஓட்டு பகுதி இதற்காக வடிவமைக்கப்பட்ட அச்சுகள் மூலம் தயாரிக்கப்பட்டு அதன் மீது இயற்கையாக தெரிய வேண்டும் என்பதற்காக கோழியின் கழிவுகளை பூசி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சாதாரண முட்டையை விட போலி முட்டை பளபளப்பாக இருக்கும். போலி முட்டைகளை உடைத்து பல நாட்கள் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாது. மேலும், முட்டையை உடைக்கும்போது மஞ்சள் கரு உடையாமல் சிந்தாமல் சிதறாமல் வெளிவரும்.
நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போது போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுவதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும் வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுகிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
அண்டை நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த போலி முட்டைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக புழக்கத்தில் வந்து மக்களின் உடலுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கேரளாவில் இதுபோன்ற சீன முட்டைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழகத்திலும் இதுபோன்று போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவி உள்ளது.