வயிறு, வாய், உணவுக்குழாயில் ஏற்படும் அல்சருக்கு முக்கிய காரணம், வயிற்றிலிருந்து உணவுக்குழாய்க்கும், வாய்க்கும், அமிலம் ஏறிவிடுவது தான். இரைப்பை (வயிறு)க்கும், உணவுக்குழாய்க்கும், நடுவே ஒரு வழி வால்வு உள்ளது. இது, வயிற்றிலிருந்து எதுவும் மேலேறா வண்ணம் பார்த்துக் கொள்கிறது.
பலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. இதனால் ஜீரணச்சாறு மேலேறி விடுகிறது. இதைத்தான் எதுக்கலிக்கிறது என்கிறோம். வாயில் பித்த நீர் கரிப்பது போன்ற புளிப்புணர்ச்சி தோன்றும். ஒரு வழி வால்வு தளர்ந்து போனால், இந்த மேலேறும் அமிலப்பிரச்னை வரும். வால்வு கெட்டியாகி விட்டால் மூடிக் கொண்டே இருக்கும். இதை திறப்பது கடினமாகிவிட்டால், உணவுக்குழாயிலிருந்த உணவு, வயிற்றுக்குள் செல்லாது. உணவுக்குழாயின் சுவர்கள் வயிறு, குடல் போன்றவற்றின் சுவர்கள் போல, அமிலத்தை தாங்கும் சக்தியுடையவை அல்ல.
எனவே அவை சிவந்து, கன்றிப்போய் புண்ணாகி விடுகின்றன. குறிப்பாக உணவுக் குழாயின் கீழ்பாகத்தில், பாதிப்பை அதிகம் ஏற்படும். அமிலம் இன்னும் மேலேறி வாய்ப்புண்களை உண்டாக்கி, குரல் வளையத்தையும் தாக்கலாம். குரல் இழப்பு, மாறுதல் ஏற்படலாம். அமிலம் மூச்சுக்குழாயை கூட தாக்கி, நுரையீரலில் தொற்று நோயை உண்டாக்கலாம். உணவுக் குழாய் இந்த அமிலத்தாக்குதலை சமாளிக்க, வயிற்று சுவர்களின் திசுக்கள் போலவே, தனது செல்களை மாற்றிக்கொள்ள முயலும். இதை மெட்டப்பிளாசியா
(Metaplasia) என்பார்கள்.
புண் தோன்ற என்ன காரணம்?
குடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு சிதைந்து விடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்று லைனிங்கில் ஓட்டை ஏற்பட்டு புண்கள் உருவாகும்.
முக்கிய காரணம் அவசரம், டென்ஷன், பதற்றம், கவலை, பொறாமை, காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை உண்டாக்கும். வயிற்று அல்சர்களை தோற்றுவிக்கும் இன்னொரு முக்கிய காரணம் Helicobacterpylori (ஹெலிகோபேக்டர் பைலோரி) என்ற ஒரு வகை பாக்டீரியா. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுகிறது. வயிற்றில் அமிலத்தை நீர்க்க வைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்கி, நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ், அல்சராக மாற இந்த எச்.பைலோரி கிருமிகள் உதவுகின்றன.
அதிக அளவு மது அருந்துதல், புகைபிடித்தல்; தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது, அதிக டீ, காபி குடிப்பது. ஆஸ்பிரின் போன்ற மருந்துகள். ஸ்ட்ரெஸ், டென்ஷன், மனபரபரப்பு, அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல். இவற்றை தவிர்த்தால், வயிற்றில் புண் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
Related posts
Click to comment