ஜப்பானிய மக்களைக் கண்டால், அவர்களின் இளமையான தோற்றம் மற்றும் ஆரோக்கியமான உடலைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவோம். அதுமட்டுமின்றி, உலகிலேயே நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றால் அது ஜப்பானியர்கள் தான்.
அதிலும் ஜப்பானைச் சேர்ந்த ஆண் குறைந்தது 80 வயது வரையும், பெண் 86 வயது வரையும் வாழ்கின்றனர். ஜப்பானியர்கள் இவ்வளவு இளமையான தோற்றத்துடன், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்களும், உணவு முறைகளும், எண்ணங்களும் தான் முக்கிய காரணம்.
சரி, இப்போது ஜப்பானிய மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ரகசியம் என்னவென்று பார்ப்போம்.
மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மருத்துவம் ஜப்பானிய மக்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு அல்லோபதி மருத்துவத்தை அதிகம் பின்பற்றுவதில்லை, மாறாக மூலிகைகளைக் கொண்டு குணமாக்கும் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய மருத்துவத்தையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் அவர்களின் உடல் வலிமையுடன் உள்ளது.
மீன் ஜப்பானிய மக்கள் இறைச்சியை விட மீனைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, நோய்களின் தாக்கம் அதிகம் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்கின்றனர். மேலும் இறைச்சியை உட்கொள்வதன் மூலம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். ஆனால் மீனில் அப்பிரச்சனை இல்லாததால், இதய நோயால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை.
சுகாதாரத்தில் அதிக கவனம் உலகிலேயே ஜப்பான் மிகவும் சுத்தமான நாடு. ஜப்பானியர்கள் நோய்கள் தம்மை தாக்காதவாறு தங்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குவார்கள். மேலும் ஏதேனும் சிறு ஆரோக்கிய பிரச்சனை என்றால் கூட அதிக அக்கறை எடுத்து விரைவில் குணமாக்கிவிடுவார்கள். அதுமட்டுமின்றி ஜப்பானில் உள்ள நூலகத்தில் புத்தகத்தை திருப்பி கொடுக்கும் போது, புற ஊதா தொழில் நுட்பத்தின் மூலமாகக் கிருமிகளை அழித்து பின் வாங்குவார்கள் என்றால் பாருங்கள்.
காய்கறிகள் ஜாப்பானியர்கள் உணவில் காய்கறிகள் இல்லாமல் இருக்காது. அவர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு காய்கறியையாவது தவறாமல் அன்றாடம் சாப்பிடுவார்கள். குறிப்பாக காய்கறி சாலட்டை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கட்டாயம் உட்கொள்வார்கள். இதனால் அவர்களின் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் இருந்து, அதன் மூலம் புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் தாக்காமல் தடுக்கும்.
தினமும் உடற்பயிற்சி ஜாப்பானியர்கள் தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். குறிப்பாக கராத்தே, யோகா மற்றும் மனம், உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். மேலும் எவ்வளவு வயதானாலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் தவிர்க்கமாட்டார்கள்.
அளவுக்கு அதிகமாக உண்பதில்லை ஜப்பானியர்கள் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பதோடு, உணவு எவ்வளவு சுவையாக இருந்தாலும் அளவாக மட்டுமே உட்கொள்வார்கள். மேலும் எப்போதும் வயிறு முற்றிலும் நிறையும் அளவு உணவை உட்கொள்ளமாட்டார்களாம்.
எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள் ஜாப்பானில் பணி ஓய்வுக்காலம் என்பதே இல்லையாம். மேலும் எவ்வளவு வயதானாலும், தனது வயதாகிவிட்டது என்று சோர்ந்திருக்கமாட்டார்களாம். எந்நேரமும் சுறுசுறுப்புடன் ஏதேனும் வேலை செய்து கொண்டே இருப்பார்களாம்.
வாழ்க்கையை ரசித்து வாழ்வார்கள் ஜாப்பானிய மக்கள் தங்களின் வாழ்க்கையை ரசித்து வாழ்வார்கள். மேலும் எதற்காகவும் மனம் உடைந்து போகாமல், தைரியமாக பிரச்சனையை எதிர்த்து நின்று முடிவு காண்பார்கள். முக்கியமாக எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார்கள். இதுவே இவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காரணம்.
ஆரோக்கியத்தின் மீது அக்கறை ஜாப்பானியர்கள் தன் உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்று உணர்ந்தால், உடனேயே மருத்துவரை சந்தித்துவிடுவார்கள். அவர்களுக்கு நாம் ஓர் பிரச்சனையை உணர்ந்து அதனை உடனே சரிசெய்யாவிட்டால் தான் குணப்படுத்துவது கடினம் என்று தெரியும். ஆகவே அவர்கள் தவறாமல் சீரான இடைவெளியில் உடலை பரிசோதித்துக் கொள்வார்கள். சொல்லப்போனால் உலகிலேயே ஜாப்பானில் தான் சிறந்த சுகாதார வசதி உள்ளது.