பெண்களே மழைக்காலம் தொடங்கிவிட்டது. வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
பெண்களே வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள்
கட்டமைப்புகளுக்கு வெயில் கால பராமரிப்புகள் ஒரு விதமாக இருக்கிறது என்றால், குளிர் காலத்திற்கான பராமரிப்புகள் வேறு விதமாக இருக்கிறது. பெரும்பாலானோர் வீடுகளுக்கு ஏதாவது சிக்கல்கள் வந்தால் மட்டுமே பராமரிப்புகளை செய்ய வேண்டும் என்ற மன நிலையில் இருப்பதை கட்டிட பொறியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது சிக்கலின் தன்மையை அதிகப்படுத்துவதோடு, பராமரிப்புக்கான செலவுகளும் அதிகமாகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சாதாரணமாக உண்டாகும் சிறு விரிசல்கள், ஓதம், மழை நீர் தேங்குவது போன்ற பாதிப்புகளாலும் கட்டிடங்கள் பாதிப்படைகின்றன. உடல் நலம் கருதி நாம் ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ செய்து கொள்வது போன்று வீடுகளுக்கும் சரியான கால அளவுகளில் பராமரிப்புகளும், பரிசோதனைகளும் முக்கியம். அதன் மூலமாக செலவுகளின் அளவு குறைகிறது என்று கட்டிட பொறியாளர்கள் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும்.
பராமரிப்பிற்கான ‘டிப்ஸ்’
1. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மழை நீர் வடிகால் குழாய் அடைப்பு மற்றும் மேல்மாடிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
2. ‘சன் ஷேடு’ மற்றும் ‘போர்டிகோ’ ஆகியவற்றில் உள்ள மழைநீர் வடிகால் குழாய்களை பெரிய அளவாக இருக்கும்படி மாற்றிவிடலாம்.
3. வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் சுவர் பூச்சு மற்றும் மேல்தள அமைப்பு ஆகியவற்றுக்கு ‘ஒயிட் சிமெண்ட்’ போன்றவற்றால் ‘பெயிண்ட்’ அடிக்கலாம். அதன்காரணமாக சுவரில் உள்ள சிறு துளைகள் அடைபட்டு விடும். பிறகு அதற்கு மேலாக ‘எமல்ஷன் பிரைமர்’ இரண்டு முறைகள் அடிப்பது சிறப்பு.
4. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ‘ரீ-பெயிண்டிங்’ செய்வதோடு, ‘எக்ஸ்டீரியர் எமல்ஷன்’ ஒரு ‘கோட்’ அடிப்பதும் கட்டிடத்தின் ஆயுளை அதிகமாக்கும்.
5. முதல் தளத்தில் அமைக்கப்படும் ‘பாத்ரூம்’ சுவர்களில் கட்டாயமாக நீர் தடுப்பு பூச்சு செய்ய வேண்டும். இதனால் நீர்க்கசிவு பாதிப்புகள் தளத்தை பாதிக்காது.
6. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சுவர்களில் விரிசல்கள் உள்ளதா..? என்று கவனிக்கவேண்டும். விரிசல்கள் இருப்பின் அவற்றை ‘அக்ரிலிக் கிராக் பில்லர்’ கொண்டு தக்க முறையில் பட்டி பார்த்து, ‘பெயிண்ட்’ அடித்து விடலாம்.
7. ‘பாத்ரூம் டைல்ஸ் ஜாயின்ட்களில்’ சாதாரண ‘ஜாயின்ட் பவுடர்’ மூலம் ‘பேக்கிங்’ செய்யாமல் ‘எபாக்சி ஜாயின்ட் பில்லர்’ மூலம் ‘பேக்கிங்’ செய்வதுதான் சிறப்பானது.
8. பழைய கட்டிடத்தின் இணைப்பாக புதிய கட்டிடம் கட்டும்போது பொதுவாக உண்டாகும் ‘ஜாயின்ட் விரிசல்கள்’ வராமல் தடுக்க ‘வாட்டர் ப்ரூப் கெமிகல்களை’ பயன்படுத்தலாம். விரிசல்கள் ஏற்கனவே இருந்தால் ‘சீலண்ட்’ கொண்டு பூசி அடைக்கலாம்.
9. கட்டிடத்தின் மேல் தளத்தில் பதிக்கப்பட்ட ஓடுகளின் ‘ஜாயின்ட்கள்’ சரிவர அடைக்கபட்டுள்ளதா..? என்று மழைக்கு முன்னதாகவே பார்ப்பது அவசியம். சுவர்களில் ‘பெயிண்டிங்’ செய்யும் போது ஓடுகளின் மேல் ‘வாட்டர் புரூப் எக்ஸ்டீரியர் பெயின்ட்’ செய்யலாம்.
10. வடிகால் நீர்க்குழாய்கள் 125 அடி அல்லது 150 அடிகளுக்கு ஒன்று என்ற அளவில் அமைப்பது நல்லது.
11. ஜன்னல் மற்றும் கதவு நிலைச்சட்டங்களில் ஏற்படும் விரிசல்களை சரி செய்ய ‘சிலிகான் சீலன்ட்’ கொண்டு அடைக்கலாம்.
12. மேல்நிலை நீர்த்தொட்டியில் நீர்க்கசிவு இருப்பின் ‘வாட்டர் ப்ரூப் கோட்டிங்’ தருவதன் மூலமாக சரி செய்யலாம்.