பெண்கள் மென்மையானவர்கள், எதிர்த்துப் பேசத் தயங்குபவர்கள், வன்மத்தில் ஈடுபடாதவர்கள் என்று ஒரு மாயவலையை உருவாக்கி வைத்துள்ளது இந்தச் சமூகம். ஆண் செய்யும் தவறு அவனை மட்டுமே பாதிக்கும். பெண் செய்யும் தவறு தலைமுறையையே பாதிக்கும் என்ற கருத்து காலக் காலமாய் வலுவாகச் சொல்லப்பட்டதன் விளைவே இது.
பெண் தவறு செய்து விடுவாளோ என்ற சந்தேகமே அவளை எப்போதும் கண்காணிக்கச் சொல்கிறது. விளைவு? அவளின் ஒவ்வொரு செயலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. என்னதான் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேறினாலும் அனைத்து இடத்திலும் ஆண்களின் சதவீதம் அதிகம். அப்படி இருக்கும்போது தங்கள் இனத்தை எப்படி விட்டுக் கொடுப்பார்கள்? இதுவே தவறு செய்பவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது.
தங்கள் தவறுகளை மறைத்து, பெண்கள் மீது பழி போடுகிறார்கள். ஆண் – பெண் உறவு சார்ந்த அனைத்திலும் எப்போதுமே தராசு முள் பெண் பக்கமே கீழிறங்குகிறது. தராசுக் கோல் ஆண்களின் கையில்தானே இருக்கிறது! அறிவு சார்ந்து அவள் தன் பணியில் எவ்வளவுதான் முன்னேறினாலும், சந்தேகக் கண்ணோட்டத்திலேயே இந்தச் சமூகம் அவளை அணுகுகிறது.
பெண் மட்டுமே கலாச்சாரச் சீர்கேட்டுக்குக் காரணம் என்று சித்தரிக்கப்படுகிறது. குடும்பம், குழந்தைகளைக் கவனிப்பது அவளுடைய கடமை மட்டுமே என வலியுறுத்தப்படுகிறது. ஆண்கள் தங்கள் மனதை விசாலமாக்கத் தேவையில்லை. மனது என்று ஒன்று தங்களுக்கு இருக்கிறது என்று உணர்ந்தாலே போதும்.

Related posts
Click to comment