நண்பர் வீட்டில் ஆங்காங்கே கள்ளி மற்றும் கற்றாழை செடிகள் வைத்திருக்கின்றனர். பொதுவாக இந்தச் செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது என்பார்களே… கள்ளிச் செடிகள் வைப்பதால் என்ன பயன்?
கள்ளி கற்றாழைத் தோட்ட ஆலோசகர் ராஜேந்திரன்
முள் இருப்பதுதான் இந்தச் செடிகளை பலரும் விரும்பாததற்குக் காரணம். ரோஜாவில்கூடத்தான் முள் இருக்கிறது. ஆனால், அதை யாரும் வெறுப்பதில்லையே… இன்னும் சொல்லப் போனால் கள்ளிச் செடிகளில் உள்ள முட்களைவிட, ரோஜாச் செடிகளின் முட்கள்தான் ஆபத்தானவை. முள் உள்ள செடிகளை வீட்டுக்குள் வளர்க்கக்கூடாது என்பது ஒருவிதமான மூட நம்பிக்கை. மற்றபடி அத்தகைய செடிகளில் உள்ள முட்கள் வீட்டில் உள்ள குழந்தைகளையோ, பெரியவர்களையோ குத்திக் காயப்படுத்தும் என்பதால்தான் பலரும் தவிர்க்கிறார்கள்.
கள்ளி, கற்றாழை செடிகள் தண்ணீர் ஊற்றும் போது ஒரு வடிவத்துக்கும் தண்ணீர் இல்லாத போது ஒரு வடிவத்துக்கும் மாறக்கூடியவை. சிலவகையான கள்ளிச் செடிகள் தண்ணீரை தமது இலைகளில் உள்ள துவாரங்களில் சேமித்து, பத்திரமாக மூடி வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது உபயோகித்துக் கொள்ளும். இந்தச் செடிகளுக்கான பராமரிப்பு மிக மிகக் குறைவு.
கள்ளி, கற்றாழைச் செடிகள் என்றாலே ஆகாதவை என்றில்லை. அவற்றில் நல்லது செய்யக்கூடிய வகைகளும் நிறைய உள்ளன. உள்ளுக்கு சாப்பிடக் கூடிய வகைகளும் உள்ளன. உதாரணம் சோற்றுக் கற்றாழை. அதன் மருத்துவம் மற்றும் அழகுத்தன்மைகளைப் பற்றிப் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. அதுபோல மூலிகைத் தன்மைகளைக் கொண்ட கள்ளி, கற்றாழை ரகங்கள் நிறைய உள்ளன. சுவையான பழத்தைக் கொடுக்கும் செடிகள் உள்ளன.
அழகுக்கான செடிகள் என்று பார்த்தால் ஆயிரம் வகைகள் உள்ளன. வெளிநாடுகளில் ஏக்கர் கணக்கில் கள்ளி, கற்றாழைச் செடிகளை விளைவித்து ஆல்கஹால் தயாரிப்புக்குப் பயன்படுத்துகிறார்கள். சில வகையான கள்ளி, கற்றாழைச் செடிகளில் அரை மீட்டர் முதல் முக்கால் மீட்டர் அளவுக்குப் பூக்களும் மலரும்.