உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம்.
காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள்
காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு, உடல் வலி, பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம்.
கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கீழாநெல்லி,
மிளகுப்பொடி,
பனங்கற்கண்டு.
கீழாநெல்லியின் இலை, தண்டு, காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என உணவுக்கு முன்பு 5 நாட்கள் வரை குடித்துவர காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் ஏற்படும் உடல் வலி, வாய் கசப்பு சரியாகும்.
கீழாநெல்லி ஈரல் நோய்களுக்கு முக்கிய மருந்தாக விளங்குகிறது. மஞ்சள் காமாலையை போக்க கூடியது. எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் கீழாநெல்லி தேனீரை எடுக்கலாம்.
நிலவேம்பை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
அதிமதுரப் பொடி, சுக்குப்பொடி, சீரகம். கால் ஸ்பூன் அதிமதுர பொடி, கால் ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிது சீரகம் ஆகியவற்றுடன் நிலவேம்புவின் இலை, தண்டு போன்றவை ஒருபிடி அளவுக்கு சேர்க்கவும்.
இதனுடன் ஒருபிடி அளவுக்கு பற்பாடகம் இலை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை குடித்துவர காய்ச்சல் குணமாகும். இதை பெரியவர்கள் 50 மில்லி வரை எடுக்கலாம்.
இதை குடித்துவர காய்ச்சல் குறையும், உடல் வலி, வாய் கசப்பு, வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
மிகுந்த கசப்பு சுவையுடைய நிலவேம்பு காய்ச்சலை குணப்படுத்த கூடிய தன்மை கொண்டது.
துளசி இலையை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
துளசி, மிளகுப்பொடி. துளசி இலைகளை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சம அளவு மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை சுண்டைக்காய் அளவுக்கு உருண்டைகள் செய்து வெயிலில் காய வைக்கும்போது மிளகு அளவுக்கு வரும். காலை, மாலை, இரவு வேளைகளில் தலா 2 மாத்திரைகள் சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.