28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ld4370
ஆரோக்கிய உணவு

பாரம்பரிய உணவுகள் நமக்குப் பகைவன் அல்ல!

இன்று டைனிங்டேபிளுக்கு வந்துவிட்டது ‘வெள்ளையனே வெளியேறு’ பிரசாரம்! அரிசி, சர்க்கரை, நெய், உப்பு என வெள்ளை உணவுகளுக்கு தடா போட்டுவிட்டனர் அனைத்து வயதினரும். இது ஆரோக்கியமான போக்கா? வினவினோம் பிரபல டயட்டீஷியன் ருஜுதா திவாகரிடம். அனில் அம்பானி, கரீனா கபூர் போன்ற பிரபலங்களின் டயட்டீஷியனாக செயல்படும் ருஜுதா, சமீபத்தில் சென்னை வந்தபோது சென்னை ஸ்பெஷல் இட்லி வடையை தேங்காய் சட்னியுடன் ருசித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த வண்ணம் நம்மிடம் பேசத் தொடங்கினார்…

“நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு கிடைக்கும் உள்ளூர் உணவுகளையே சாப்பிடுவேன். ஏனென்றால், அந்நாட்டின் பருவநிலைக்கேற்ற உள்ளூர் உணவுகளே நம் உடலுக்கேற்ற இயைபுத்தன்மையைத் தரவல்லது. முன்னோர் கண்டறிந்த பாரம்பரிய உணவு மற்றும் ஆரோக்கிய முறைகளை விட்டு விலகி வருவதை, எதிர்கால தலைமுறையினருக்கு மிகப்பெரிய இழப்பாகவே நான் கருதுகிறேன்.

தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியின் தட்பவெப்பநிலைக்கேற்ற, மிக ஆழ்ந்த ஞானத்தின் அடிப்படையில், அவர்கள் கண்டறிந்த உணவுகளை பலதலைமுறைகளாக பின்பற்றி வந்திருக்கிறோம். அவற்றின் அருமையை உணராமல், மேலைநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றி நம் ஆரோக்கியத்துக்கு நாமே கேடு விளைவிக்கிறோம்” என அப்பளமாகப் பொரிகிற ருஜுதா, நம் பாரம்பரிய உணவின் அருமைகளைத் தொடர்கிறார்…

“உணவு முதல் யாகம் வரை நெய்யை ஏன் நம் கலாசாரத்தில் போற்றினார்கள்? ஏன் அரிசி நம் உணவின் அடித்தளமாக இருந்தது? அறுசுவை உணவை ஏன் வாழை இலையில் வைத்துப் பரிமாறினார்கள்? ஏன் சத்துள்ள முழுமையான உணவை வலியுறுத்தினார்கள்? உணவை ஓர் உயிரோட்டமாக எண்ணிய நம் முன்னோர் பருவத்துக்கேற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண கற்றுக் கொடுத்தார்கள். உணவு சம்பந்தமான அவர்களின் ஆழ்ந்த அறிவை முதலில் கற்றுணர வேண்டும்.

நெய்யின் அருமை தெரியாமல் இவர்கள் இப்படி செய்கிறார்கள். நெய்யில் உள்ள கொழுப்பு அமிலம் உடலின் எலும்பு மூட்டுகளை வலுவடையச் செய்கிறது. சருமம், நகம் மற்றும் கூந்தலை மிருதுவாக்கி மினுமினுக்கச் செய்கிறது. உடலின் இன்சுலின் உணர்திறனில் அருமையாக வேலைசெய்வதோடு, கொழுப்பை எரிக்கவும் செய்கிறது. மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஆன்ட்டி ஏஜிங் ப்ராபர்டிஸ் நெய்யில் மிகுந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பண்பிலும் நெய்க்கு இணையான ஒரு பொருள் இல்லை. ஆனால், கொடுமையைப் பாருங்கள்… பரம்பரை பரம்பரையாக நாம் உபயோகித்த நெய்யை இன்று மேற்கத்திய நாடுகள் ‘White\Clarified butter’ என்ற பெயரில் பேடன்ட் உரிமை வாங்க முயற்சித்து வருகிறார்கள்.

நாமோ அதை வேண்டாம் என ஒதுக்குகிறோம். இதைப்போலவே, பல ஆண்டுகளாக கார்போஹைட்ரேட்டை நம்முடைய எதிரிகளாகச் சித்தரித்து வருகின்றனர். உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும், தசைகளின் கட்டமைப்புக்கும், உடலில் சேரும் கொழுப்பை விரைவாக எரிக்கவும், அரிசி, கோதுமையில் உள்ள கார்போஹைட்ரேட் அவசியமானது. ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக உணவில் உப்பை தவிர்த்து வருகின்றனர். உப்பை அறவே ஒதுக்கக்கூடாது.

ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், உடலின் தண்ணீர் அளவை தக்க வைக்கவும் சோடியம் அவசியம். ப்ரிசர்வேட்டிவ்வாக உப்பு சோ்க்கப்படும் பொருட்களான ஊறுகாய், சிப்ஸ், அப்பளம் போன்றவற்றை அறவே ஒதுக்கிவிடுங்கள். அன்றாட சமையலில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தினாலே போதுமானது. மா, பலா போன்று அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை கட்டாயம் விரும்பி உண்ண வேண்டும்.

இவற்றை ஃப்ருக்டோஸ் அதிகம் என்று ஒதுக்காதீர்கள். இவை நம் நாட்டின் பொக்கிஷங்கள்” என்கிறார் ருஜுதா.
“இருக்கும் இடம் சார்ந்த பருவநிலைக்கேற்ற உணவுகளையே உண்ணுங்கள். இனிப்புடன் கூடிய ஒரு முழுமையான உணவை மகிழ்ச்சியோடு உண்ணுங்கள். உங்களுக்கு ஏற்ற சரியான உணவு எது என உங்கள் மருத்துவரைவிட பாட்டிக்குத்தான் தெரியும்.

‘Eat Local, think global’-இதுவே உணவு மந்திரம்” என்கிற இவரிடம் பேசிய தருணம் ஒரு கல்யாணச் சாப்பாட்டு நிறைவைத் தந்தது. இவரது ‘Don’t Lose Your Mind, Lose Your Weight’, Women And The Weight Loss Tamasha’ மற்றும் ‘Don’t Lose Out, Work Out’ நூல்கள் மிகப்பிரபலமானவை!

– உஷாld4370

Related posts

சூப்பர் டிப்ஸ்! இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

nathan

ஆண்களே உஷார்! மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து!

nathan

அற்புத நன்மைகள் ஏராளம்! 5 நாட்கள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுங்கள்!

nathan

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட, தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்..!

nathan

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவை கொடுக்கலாம் என்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan