பாசம், இரக்கக் குணம், பொறுமை போன்றவற்றைப் பெண்ணுக்கான குணங்களாக வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவளையே காரணம் காட்டுகிறார்கள். பெண்ணை வளர விடாமல் அடக்க நினைக்கிறவர்கள், அவளது நடத்தையைப் பற்றிப் பேசி அவளை முடக்கிவிடுகின்றனர்.
ஆனால் பெண்கள் இந்தத் தடைகள் அனைத்தையும் தாண்டி வர வேண்டும். பாரதத்தின் பெருமை, குடும்ப அமைப்பிலும் அதைக் கட்டிக்காக்கிற பெண்களின் கையிலும்தான் அடங்கியிருக்கிறது. அப்படியிருக்கும்போது பெண்கள் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்தால் அது தவறில்லையா? ஆணாதிக்கத்தால் இது நேர்வதில்லை.
பெண்களின் தாழ்நிலைக்கு அவர்களே காரணம். இதற்குப் பொறுப்பேற்பதும் விடியல் காண்பதும் பெண்களின் பொறுப்பு. முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் அவதிப்படப்போவது பெண்கள் தான். எதிலும் ஆண்கள் தப்பித்துக்கொள்ள இந்தச் சமூக அமைப்பும் சதி செய்கிறது. பெண் உரிமைக்குரல் எழுப்பிவிட்டால் அவளைக் கொத்திக் குதறுவது இங்கே வாடிக்கை. அதற்கெல்லாம் பெண்கள் சோர்ந்து போகாமல் சம்பந்தப்பட்ட ஆணையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
பெண்கள் பலவீனமானவர்கள் என்ற நினைப்பிலேயே பலரும் அவளை வசைபாடுகின்றனர். வீட்டிலும் வெளியிலும் பெண் எப்போதும் கண்காணிக்கப்படுகிறாள். தன்னிடம் வல்லுறவு கொண்டவனையே தேடிப்பிடித்து மணந்துகொள்ளும் மனநிலைக்குப் பெண்ணைத் தள்ளுவதும் இந்தச் சமூகம்தான். இந்த அறியாமையிலிருந்து பெண்கள் வெளிவர வேண்டும்.
பெண்கள் மீது குடும்பமும் சமுதாயமும் கொண்டுள்ள அதீத அக்கறையும் அதிகார ஆளுமையுமே ஆண்கள் தப்பிக்கவும் பெண்கள் தலைகுனியவும் காரணம். இந்த மனோபாவம் பிற்போக்குத்தனமானது. பெண்களைப் பற்றி ஆரோக்கியமான பார்வை, சிந்தனை, அணுகுமுறை இல்லாதவரை இந்தக் கேவலங்கள் தொடரத்தான் செய்யும்.