நோய்க்கான மூன்று காரணிகளில் பித்தத்தையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம். தலைவலி வந்தாலும், தலைமுடி நரைத்தாலும் பித்தம்தான் காரணம் என்று பரவலாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று பித்தத்தை நோயின் அடையாளமாகவே சொல்லும் வழக்கமும் இருக்கிறது. உண்மையில் பித்தம் என்பது என்ன? ஆங்கில மருத்துவம் இதை எப்படிப் பார்க்கிறது? கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவரான ஆர்.பி.சண்முகம் விளக்குகிறார்.
”கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கிற ஒருவகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கிறோம். நம்முடைய செரிமானத்துக்கு உதவும் இன்றியமையாத பணியை இந்த பித்த நீர்தான் செய்கிறது. முக்கியமாக, அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும் போதெல்லாம், அதற்கேற்றவாறு பித்த நீரும் அதிகமாக சுரந்து நம் செரிமானத்துக்கு வழி வகுக்கிறது. இந்த பித்த நீர் சுரப்பு ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தும் வேறுபடும்.
ஒரே அளவில் இருக்காது. சிலருக்கு பித்தநீர் குறைவாக சுரக்கும்; ஒரு சிலருக்கு அதிகமாக சுரக்கும்” என்கிறவரிடம், பித்தம் அதிகமானால் பிரச்னையா என்ற சந்தேகத்தைக் கேட்டோம்.”பித்தநீர் அதிகமாக சுரப்பதால் பெரிய பிரச்னை எதுவும் கிடையாது. உடலுக்குத் தேவையான அளவில் பித்த நீர் சுரக்காத பட்சத்தில்தான் பிரச்னை ஏற்படும். இதை பித்தநீர் சுரப்பு குறைவு என்று சொல்வதைவிட, பித்தப்பையில் சேகரிக்கப்படும் பித்தநீர் சிறுகுடலை அடையாத நிலை என்று சொல்லலாம்.
இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை அதிகம் உண்பது, மருந்துகள் எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்குப் பிறவியிலேயே கல்லீரல் பாதிப்பின் காரணமாகவும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். பித்தம் குறையும் இந்த நிலையைத்தான் நாம் உடனடியாகக் கவனிக்க வேண்டும்” என்கிற டாக்டர், அதற்கான அறிகுறிகளையும் கூறுகிறார்.”கொழுப்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது செரிமானமாவது தாமதமாகும், வயிறு உப்புசம் ஏற்படுவதுபோல் தோன்றும், குமட்டலும் இருக்கும்.
இந்த 3 அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. இல்லாவிட்டால், மஞ்சள் காமாலையிலிருந்து சிரோசிஸ் என்ற கல்லீரலின் முக்கியமான பாதிப்பு வரை சிக்கல்களை ஏற்படுத்திவிடும். கல்லீரல் தொடர்பான மற்ற நோய்களும் இதனால் ஏற்படலாம்” என எச்சரிக்கிறார் டாக்டர் சண்முகம்.