மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன என்று தெரியும்.
தூக்கம் ஏன் அவசியம்?
மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன என்று தெரியும்.
அதுபற்றி கூடுதல் விவரங்களை அறிவோமா…
‘அடினோசின்’ என்ற வேதிப்பொருள் நமது ரத்தத்தில் அதிகமாகச் சுரக்கும்போது தூக்கம் கண் இமைகளை இழுக்கிறது. நாம் தூங்கியதும் அடினோசின் சுரப்பு முற்றிலும் குறைகிறது.
மேலும் நாம் தூங்கும்போதுதான் நம்முடைய மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது.
தூக்கம் என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும், அதில் பல நிலைகள் உள்ளன.
விழி இயக்க உறக்கத்தில், கண்களில் விழிகள் மட்டும் இங்கும் அங்குமாக இயங்கியவாறு இருக்கும்.
மேலும் இந்நிலையில், இதயத்துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம் போன்றவை அதிகமாக இருக்கும். கனவுகள், இந்நிலையில்தான் தோன்றுகின்றன.
அடுத்து, விழி இயக்கமற்ற உறக்கத்தில், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசித்தல் போன்றவை குறைவாக இருக்கும். மேலும் மூட்டுகளில் உள்ள தசை நாண்களின் உடனியக்கத்தன்மை குறைகிறது.
நாம் உறக்கத்தில் இருக்கும்போது அரைகுறையாய் தொலைபேசியில் பேசுவது, அலாரம் அடித்தால் அதை நிறுத்திவிட்டு தூங்குவது போன்றவை நினைவுகள் இல்லாத தூக்கம் ஆகும்.
மது, காபி அருந்தியவர்கள், மூக்கடைப்புக்கு போடப்படும் சில மாத்திரைகள், மருந்துகள் சாப்பிட்டவர்கள், மன அழுத்தத்துக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள், அதிகமாக புகை பிடிப்பவர்கள், உடலில் நிக்கோடின் அளவை அதிகமாக்கும் வகையில் புகை பிடிப்பவர்கள் போன்றவர் களுக்கு லேசான தூக்கமே ஏற்படும்.
பிறந்த குழந்தைக்கு 16 முதல் 20 மணி நேரமும், வளரும் குழந்தைகளுக்கு 10 முதல் 12 மணி நேரமும், ஆண்களுக்கு 6 மணி நேரமும், பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் அவசியம்.
நம்முடைய மூளை நரம்புகள் சரியாக வேலை செய்வதற்கு தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். தூக்கமின்மையால் நாம் பல வகையான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரும்.
தூக்கக்குறைவால் அசதி, கவனக்குறைவு, ஞாபகமறதி, மன உளைச்சல் ஆகியவை ஏற்படும். குழந்தைகளுக்கு போதிய தூக்கமின்மையால் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தூக்கமின்மையால் புரத உற்பத்தி குறைந்து, முகத்தின் பொலிவு குன்றுகிறது.
தொடர்ச்சியாக தூக்கம் கெடும்போது, ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம், நோய் எதிர்ப்புத்திறன், பசி குறைவு, உடலின் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல், இதய பாதிப்பு, கல்லீரல், குடல் நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, உறக்கத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிப்போம்.