கூடுமானவரை விட்டுக்கொடுத்து வாழ முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்றுகொள்ளுங்கள்.
விவாகரத்தை தடுக்க முடியுமா?
முடியும்! திருமணத்திற்கு பிறகு தம்பதியருக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் எழுவது சகஜம்தான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும். அப்படி அல்லாமல் கருத்து மோதல்கள் வாக்குவாதமாக மாறி பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சமாதானப்படுத்த முன்வரவேண்டும். அவர்களுடைய வாழ்க்கை அனுபவமும், அறிவும் நிச்சயம் பிரச்சினைகளை தீர்த்து வைக்க உதவும்.
அதையும் தாண்டி தம்பதியருக்குள் தீர்க்க முடியாத அளவிற்கு பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்தால் இருவரும் சிறிது காலம் பிரிந்திருக்கலாம். அப்போது நல்லது, கெட்டதை சிந்தித்து பார்த்து தங்களை சீர்திருத்திக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வரும். அப்படியும் முடியாவிட்டால் வேறு வழியின்றி விவாகரத்து முடிவை நாடலாம். போராடி விவாகரத்து பெற்று விட்டால், அதன் பின்பும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.
இந்த அல்லல்களில் இருந்து தப்பிக்க நினைத்து இன்று பலர் திருமணமே செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். மனம் ஒத்துப்போனால் திருமணம். இல்லையென்றால் நல்லபடியாக விலகிக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். ஆனால் அப்படி வாழ்க்கையை ஆரம்பித்து பின்பு திருமணம் செய்து கொண்டவர்களும் விவாகரத்தை நாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் அப்படி ஒரு தொடர்பு.
அவசரப்பட்டு விவாகரத்திற்காக அலைந்து திரிந்து வாழ்க்கையை இழந்த பல பேர் இருக்கிறார்கள். ‘ஒரு காலத்தில் விவாகரத்தானது பெண்களின் வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இப்போது அப்படி இல்லை. ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற கருத்தும் மேலோங்கி வருகிறது.
கூடுமானவரை விட்டுக்கொடுத்து வாழ முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்றுகொள்ளுங்கள். தேவையற்ற விவாதம், வீண்பழி, மன அழுத்தம், கொந்தளிப்பு இவையெல்லாம் இல்லாமல் அமைதியாக விவாகரத்து பெற இது உதவும்.