26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201609120947207562 one sided love murder reason SECVPF
மருத்துவ குறிப்பு

ஒருதலைக்காதலால் நடக்கும் கொலைகளுக்கு காரணம்

காதல்… அது நல்லக் காதலாக இருந்தாலும் சரி; அல்லது கள்ளக்காதலாக இருந்தாலும் சரி… அல்லது ஒரு தலைக்காதலாக இருந்தாலும் சரி… கைகலப்பு-அடிதடி என்று ஆரம்பித்து சில சமயங்களில் கொலையில் போய் முடிந்து விடுகிறது.

ஒருதலைக்காதலால் நடக்கும் கொலைகளுக்கு காரணம்
பருவ வயதை எட்டியதும், உடலுக்குள் ‘ஹார்மோன்’கள் செய்யும் ரகளையின் விளைவு.

இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். ஆனால் எந்த உயிரினமும் தன்னால் நேசிக்கப்படும் சக உயிரினத்தை கொல்வது இல்லை.

காதல் போட்டியில் குறுக்கே வரும் எதிரியை வீழ்த்த போராடி உயிர்த்தியாகம் செய்யுமே தவிர, தன்னால் நேசிக்கப்படும் பிராணிக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்ளும்.

ஆனால் அதிகபட்சமாக ஆறறிவு படைத்த மனிதன்தான், தன்னால் நேசிக்கப்படுபவளையே கொல்லும் படுபாதக செயலை சில சமயங்களில் செய்து விடுகிறான்.

தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற தன்னலம்-ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாத மனநிலை-விரக்தி-கோபத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், கொலையில் போய் முடிகிறது.

தமிழ்நாட்டில் சமீப காலத்தில் நடந்த சில சம்பவங்களை பார்க்கும் போது, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுகிறது.

குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். வெளியே சென்ற மகள், சகோதரி பத்திரமாக வீடு திரும்பும் வரை மனஉளைச்சலில் அல்லாடுகிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மென்பொருள் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது, விழுப்புரத்தில் பள்ளி மாணவி நவீனாவை விரும்பிய வாலிபர் அவளது வீட்டுக்குள் புகுந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு அவளை கட்டிப்பிடித்து எரித்துக் கொன்றது, தூத்துக்குடியில் தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்த ஆசிரியை பிரான்சினாவை வெட்டி சாய்த்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது, கரூரில் என்ஜினீயரிங் கல்லூரியில் வகுப்பறையில் இருந்த மாணவி சோனாலி உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டது, திருச்சி பிச்சாண்டார் கோவிலில் கல்லூரி மாணவி மோனிகாவை கத்தியால் குத்திவிட்டு என்ஜினீயர் விஷம் குடித்தது… என்று நீண்டு வரும் காதல் வன்முறை சம்பவங்களின் பட்டியல், இளைய சமுதாயம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்பி இருக்கிறது.

சமீப காலத்தில் இதுபோன்று நடந்த பெரும்பாலான காதல் கொலைகள் ஒருதலைக்காதலால் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாகவே இருக்கின்றன.

சில இளைஞர்களுக்கு, அழகான பெண்கள் யாரையாவது பார்த்துவிட்டால் உடனே காதல் வந்துவிடுகிறது.

காதல் நினைவுகளை மனதில் வளர்த்து, கற்பனையில் குடும்பம் நடத்தி, யதார்த்தத்தை மறந்து மயக்க உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெண் தன்னை நேசிக்கிறாளா? என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் அவள் பின்னாலேயே சென்று காதலை வெளிப்படுத்தி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். அவள் அந்த நபரை நிராகரித்தாலோ, தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று கூறிவிட்டாலோ, அதுவரை மனதில் கட்டி வைத்திருந்த காதல் மாளிகை சரிந்து உள்ளம் நொறுங்கி விடுகிறார்கள்.

இப்படி ஏமாற்றத்துக்கு உள்ளாகுபவர்களில் பலர் அதிர்ச்சிக்கு ஆளானாலும், பின்னர் மனதை தேற்றிக் கொண்டு வேறு பாதையில் வாழ்க்கை பயணத்தை தொடருகிறார்கள்.

ஆனால் சிலர், ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி முரட்டுக்காதலர்களாக மாறி, “எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்ற வெறி கொண்டு வன்முறை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.

இரு பக்கமும் கூர்மையான வன்முறை என்ற அந்த ஆயுதம், சம்பந்தப்பட்ட அந்த இருவரின் வாழ்க்கையையும் அழித்து விடுகிறது அல்லது முடமாக்கிவிடுகிறது.

இது மட்டும்தானா?… அவர்களுடைய குடும்பத்தையும் துயரத்தில் தள்ளி தவிக்க விடுகிறது.

ஒருதலைக்காதல் வயப்படும் இளைஞர்களின் இத்தகைய விபரீத போக்கு, சமுதாய ரீதியிலான உளவியல் பிரச்சினையாக விசுவரூபம் எடுத்து வருகிறது. அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு உரிய மன நல ஆலோசனைகள்வழங்கி நல்வழிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? யார்-யாருடன் பழகுகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தலைக்காதல் போன்ற விவகாரங்களில் சிக்கி இருப்பதை அறிந்தால் அவர்களுக்கு உரிய முறையில் புத்திமதி சொல்லி திருத்த வேண்டும்.

காதல் பூ போன்றது-புனிதமானது. அது தானாக மலர வேண்டும்.

பழம் தானாக கனிந்தால்தான் ருசிக்கும். புகை போட்டோ, ரசாயன கல் வைத்தோ பழுக்கும் பழம் சுவைக்காது.

மிரட்டியும், உருட்டியும் காதலை பெற முடியாது. அப்படி பெற, காதல் என்ன மாமூல் பணமா?

வளர் இளம் பருவத்தில் வருவதை எல்லாம் காதல் என்ற பட்டியலில் சேர்த்துவிட முடியாது. பருவ வயதில் உடல் மீது ஏற்படும் பாலின ஈர்ப்பு அது. தான் சொல்வதே சரி; செய்வதே சரி என்று நினைக்கும் வயது அது. சரி-தவறு, நல்லது-கெட்டது தெரியாத இரண்டும்கெட்டான் வயது அது.

யாராவது ஒரு பெண்ணை இதயத்தில் குடியேற்றிவிட்டால், அவள்தான் உலகம் என்ற முடிவுக்கு வரும் பொல்லாத பருவம் அது. பெற்று, சோறூட்டி வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் கூட அப்போது ஒரு பொருட்டாக தெரியமாட்டார்கள்.

படிக்கிற வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாததால் ஏற்படும் பக்க விளைவுதான் இந்த விடலைப்பருவ காதல்.

நீ விரும்பும் கிளியை விட உன்னை விரும்பும் குரங்கே மேல் என்பார்கள்.

எனவே கிளி கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதை விட, நம்மை நேசிக்கவும் இன்ப-துன்பங்களில் பங்கு கொள்ளவும் ஒரு ஜீவன் இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைவதும், திருப்திகொள்வதும் தான் உத்தமம்.

வாழ்க்கை பயணம் ஒரு பேருந்துடன் முடிந்து விடுவது இல்லை. ஒரு பேருந்தை தவறவிட்டு விட்டால் அடுத்து வரும் பேருந்தில் ஏறி பயணத்தை தொடர்வது இல்லையா? அதுபோல்தான் காதலும். ஒரு காதல் கைகூடவில்லை என்றால் அத்துடன் வாழ்க்கை முடிந்து விடுவது இல்லை.

விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைப்பதை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காதல் கைகூடாத கோபத்தில் தன்னல வெறியில் ஒருவன் கையில் கத்தியை எடுத்தால், அவனால் நேசிக்கப்பட்டவள் குத்துப்பட்டு ஒரே நாளில் இறந்து போகலாம். ஆனால் அவனும், அவனது குடும்பமும் ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். இரு குடும்பங்களிலும் மகிழ்ச்சி-நிம்மதி தொலைந்துவிடும்.

எனவே பெருந்தன்மையுடன், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்திவிட்டு, வாழ்க்கை பயணத்தை தொடர்வதுதான் ஆத்மார்த்தமான-உண்மையான காதலுக்கு அழகு.

காதல், திருமணத்துக்கு முன்பு தான் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. திருமணத்துக்கு பின் மனைவியை காதலிப்பது அலாதியான சுகம்.

காதலில் தோற்று, பின்னர் திருமணமாகி குழந்தைகள் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நெஞ்சில் பாரமாக அழுத்திக் கொண்டிருக்கும் காதல் தோல்வி, காலப்போக்கில் மேகக்கூட்டம் போல் கலைந்து காணாமல் போய்விடும்.

சில ஆண்டுகளுக்கு பிறகு பழைய நினைவுகளை அசை போட்டால், காதல் என்ற பெயரில் எவ்வளவு கோமாளித்தனங்களையெல்லாம் செய்து இருக்கிறோம் என வேடிக்கையாக தோன்றும்.

காலம் ஒரு சிறந்த மருந்து. அது எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல சகலரோக நிவாரணி.

வாழ்க்கை என்ற அழகான பூந்தோட்டத்தில் அம்மா-அப்பா, அண்ணன்-அக்காள், தம்பி-தங்கை, பெரியப்பா-சித்தப்பா, மாமா-அத்தை என்று எத்தனையோ ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களும், நண்பர்களும், நலம் விரும்பிகளும் உள்ளனர்.

அந்த பூந்தோட்டத்தில் காதல் ஒரு செடி அவ்வளவுதான். ஆனால் அந்த செடி மட்டுமே தோட்டமாகிவிடாது. அந்த செடி இல்லாவிட்டால் நறுமணமும், மகிழ்ச்சியும் தரக்கூடிய எத்தனையோ செடிகள் அந்த பூந்தோட்டத்தில் உள்ளன. ஒரு செடி அழிந்துவிட்டது என்பதற்காக, தோட்டத்தையே நிர்க்கதியாக்குவதை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது.

காதல் ஒரு ஓவியம். அதை வரையத் தெரிந்தவன் புத்திசாலி. வரையத் தெரியாதவன் அதிர்ஷ்டசாலி என்று சொல்வார்கள்.

இந்த விஷயத்தில் ஒருவன் புத்திசாலியாகவும் இருக்கலாம் அல்லது அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம்.

ஆனால் காதல் கைகூடவில்லை என்பதற்காக காதலியை அழிப்பதும், தன்னை அழித்துக்கொள்வதும் துரதிர்ஷ்டமான செயல். இது சம்பந்தப்பட்ட இருவரை மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களையும், குடும்பத்தினரையும், உறவினர்களையும் பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கும்.

தவறு செய்யும் முன் இவர்களையெல்லாம் ஒரு முறை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தால், மனச்சலனம் விலகி தெளிவு பிறக்கும்.

“தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான்.

உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான்.

இந்த இரண்டையும் அறிந்தவன் துன்பப்படமாட்டான்” என்று பகவத் கீதை சொல்கிறது.

கீதையின் பாதையில் சென்றால் மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்; வாழ்வும் சிறக்கும்.

காதல்… அது நல்லக் காதலாக இருந்தாலும் சரி; அல்லது கள்ளக்காதலாக இருந்தாலும் சரி… அல்லது ஒரு தலைக்காதலாக இருந்தாலும் சரி… கைகலப்பு-அடிதடி என்று ஆரம்பித்து சில சமயங்களில் கொலையில் போய் முடிந்து விடுகிறது.

சினிமாவின் தாக்கமா?

தமிழ்நாட்டில் எல்லா விஷயங்களிலுமே சினிமாவின் தாக்கம் இருக்கும் போது, காதலில் மட்டும் அது இல்லாமல் போய்விடுமா என்ன?

பாகவதர் காலத்து சினிமாக்களில் காதலனும் காதலியும் அன்பே, பிராணநாதா என்று அழைத்து மகிழ்வார்கள். நெருங்கி பேசுவது கூட அபூர்வம்தான்.

அதன்பிறகு அத்தான், கண்ணே, அன்பே என்று அழைத்து, ஊறுகாயைப் போல் தொட்டு மகிழ்ந்தார்கள்.

இப்போதெல்லாம் வாடா, போடா என்று அழைக்கும் அளவுக்கு காதல் மிகவும் நெருக்கமாகி தயிர்சாதம் சாப்பிடுவது போல் காட்சியில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.

சினிமாக்களில், தான் விரும்பிய காதலி தனக்கு கிடைக்காமல் போனால், காதலன் தாடி வளர்த்துக் கொண்டு தத்துவப்பாடல் பாடிக்கொண்டு திரிந்த காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது.

இப்போது வரும் சில படங்களில் காதல்கள் முரட்டு காதலாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. கதாநாயகி காதலிக்க மறுக்கிறாளா.. விடாமல் அவளை விரட்டு… கெஞ்சி கூத்தாடி காலில் விழுந்தாவது காதலை ஏற்றுக்கொள்ளச் செய். அதற்கும் அவள் மசியவில்லை என்றால், பழிவாங்க தயாராகி விடு… என்பது போன்ற காட்சிகளை அமைக்கிறார்கள்.

இதுபோன்ற காட்சிகள், நாட்டில் வேலைவெட்டி இல்லாமல் திரியும் பலரை உசுப்பேற்றுகிறது. தன்னுடைய தகுதி, அந்தஸ்து போன்றவற்றை மறந்து, யாராவது அழகான பெண் பின்னாலேயே அலைந்து அவள் வாழ்க்கையையும் நாசப்படுத்தி, தங்களின் பொன்னான வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

நாட்டில் நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுகிறோம் என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். சினிமாவைப் பார்த்துத்தான் பல இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இது… முதலில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற பட்டிமன்ற விவாதம் போல் உள்ளது. 201609120947207562 one sided love murder reason SECVPF

Related posts

ஆண்மை குறையாமல் இருக்க, முருங்கைப்பூ எப்படி பயனளிக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்கான 9 விஷயங்கள்

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

nathan

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

தொிந்துகொள்ளுங்கள்! மரணத்தை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!

nathan

Healthy tips.. தொண்டைப்புண், தொண்டை வலிக்கு முக்கிய தீர்வு.

nathan

வேதனை தரும் மூட்டு வலியை சந்திப்பவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!

nathan

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்

nathan