கோடை வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் முக்கியமாக முகப்பரு வருவதோடு, கரும்புள்ளிகளும், வலிமிக்க கொப்புளங்களும் வரும். இதனைத் தடுக்க கோடையில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் மாலை வேளையில் வீட்டிற்கு வந்ததும் ஒருசில பொருட்களைக் கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும்.
அப்படி செய்வதால் வெளியே வெயிலில் சுற்றி அழுக்குகள் படிந்து கருமையாக ஆரம்பிக்கும் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம். மேலும் சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம். சரி, இப்போது அந்த நேச்சுரல் ஸ்கரப்களைப் பற்றி பார்ப்போமா…
ஸ்ட்ராபெர்ரி
ஒரு சிறிய பௌலில் ஒரு கையளவு ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு, கையால் பிசைந்து, பின் அதனைக் கொண்டு முகத்தில் தடவி 6 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த பால் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் கோடையிலும் சரும பொலிவு மேம்பட்டு காணப்படும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சித்தன்மை, கோடையில் சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும். அதற்கு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாகவும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.
வால்நட்ஸ்
உங்களுக்கு கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் அதிகம் உள்ளதா? அப்படியெனில் இந்த ஸ்கரப்பை முயற்சி செய்யுங்கள். அதற்கு இந்த வால்நட்ஸை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
பால்
தினமும் இரவில் பாலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமம் பொலிவோம், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, முகம் பிரகாசமாக காணப்படும்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் கொண்டு தினமும் காலையிலும், மாலையிலும் முகத்தை துடைத்து எடுத்தாலே, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று இருக்கும்.
கற்றாழை
மாலையில் வீட்டிற்கு வந்ததும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.