வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுத்தால், அவர்களின் மூளை நன்கு செயல்படும். அத்தகைய வெண்டைக்காளை சற்று வித்தியாசமாக ராஜஸ்தான் ஸ்டைலில் ஃப்ரை செய்து கொடுத்தால், உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு அந்த ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 20
உள்ளே வைப்பதற்கு… கடலை மாவு – 1 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மாங்காய் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு… எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
செய்முறை: முதலில் ஒரு பௌலில் ‘உள்ளே வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வெண்டைக்காளின் முனைகளை நீக்கிவிட்டு, இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீளவாக்கில் வெட்டி அதன் நடுவே அந்த பேஸ்ட்டை வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெண்டைக்காயை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து, நன்கு மொறுமொறுவென்று வரும் வரை கிளறி இறக்கினால், ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை ரெடி!!!