29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Evening Tamil News Paper 1338922978
மருத்துவ குறிப்பு

மாரடைப்பு – இருதய வைத்திய நிபுணர்

நமது உடலில் ஓய்வில்லாமல் கடிகாரம் போல் இயங்கும் உறுப்புக்களில் இதயமும் ஒன்று. இவ் இதயத்தைத் தாக்கும் மாரடைப்பானது (Heart Attack) உயிரைப் பறிக்கக் கூடிய அபாயகரமான நோயாகும். இவ் ஆக்கத்தில் நாம் மாரடைப்பு ஏன் ஏற்படுகின்றது? மாரடைப்பிற்கான அறிகுறிகள், சிகிச்சைமுறைகள் மாரடைப்பின் பின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் பற்றி சுருக்க மாக ஆராயவுள்ளோம்.

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்தசைக்கான ஒட்சிசன் நிறைந்த குருதியை முடியுரு நாடிகள் வழங்குகின்றன.முடியுரு நாடிகள் ஏற்படும் கொழுப்புப் படிவுகளாலும் அக்கொழுப்புப் படிவுகளில் ஏற்படும் வெடிப்புகளில் குருதிக்கட்டிகள் படிவதாலும் முடியுரு நாடிக்குழாய்கள் முற்றாக அடைக்கப்படும் போது இதயத் தசைக்கான ஒட்சிசன் நிறைந்தகுருதி இல்லாது போகிறது. இதனால் இதயத்தசை இறப்படைகின்றது. இதுவே மாரடைப்பு ஆகும்.

இதன்போது இதயத்துடிப்பின் போது சுருங்கி விரியும் செயற்பாடு பாதிப்படைகின்றது. இதயத்தசையின் இறப்படையும் பகுதியின் அளவு கூடும் போது இதயத் தொழிற்பாடு குறைவடைந்து இதயப் பலவீனம் ஏற்படு கின்றது. இதனால் இறப்பும் ஏற்படலாம்.

மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன?

  • இடதுபக்க அல்லது நடுநெஞ்சில் ஏற்படும் இறுக் கிப்பிடிப்பது போன்றநெஞ்சுவலி
  •  நெஞ்சுவலியுடன் தாடைகள் இறுகுதல் அல்லது தோற்பட்டையில் ஏற்படும் நோ
  • நெஞ்சுவலியுடன் வியர்த்தல்,வாந்திஎடுத்தல் மூச்சு விடச்சிரமம், தலைசுற்றுதல்,மயக்கம் நெஞ்சு பட படப்பு போன்றன ஏற்படல்
  • நடந்துசெல்லும் போது அல்லது பாரமான வேலை செய்யும் போது திடீரென ஏற்படும் நெஞ்சுநோ
  • நடுநெஞ்சில் ஏற்படும் எரிவு அல்லது மேல் வயிற்று நோ. இது வயிற்றுக் கோளாற்றுடன் சம்பந்தமான தாக இருக்கலாம் என அநேகமான நோயாளிகள் புறக்கணிப்பதுண்டு.

மேற்கூறிய அறிகுறிகளின்றியும் மாரடைப்பு ஏற்படலாம் இது (Silent myocardial infarction) பொதுவாக நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும். அதைவிட சில நோயாளிகள் நெஞ்சுப்பகுதியில் ஏற்படும் தசை நோவை தவறாக மாரடைப்பு என்று எண்ணி வைத்தியர் உதவியை நாடு வதும் உண்டு.

மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணங்கள் எவை?

மாரடைப்புக்கான சரியான காரணங்களைத் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.

இக்காரணங்கள் இருவகையானவை

1) மாற்றமுடியாதகாரணங்கள்.

அதாவது இவை இயற்கையான காரணங்கள். இவை பற்றி நாம் தெரிந்து கொண்டாலும் கூட மாரடைப்பு ஏற் படுவதை எம்மால் தவிர்க்கமுடியாது.

  • ஆணன்கள்
  • வயதானவர்கள் (65 வயது)
  • இதய நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப் பினர்களைக் கொண்டவர்கள் இவர்களுக்கு சாதாரணமான ஒருவரைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

2) மாற்றக்கூடிய காரணங்கள்

இவற்றை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

  • நீரிழிவுநோய் – இவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப் பிடும் போது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம். இவர்கள் மருந்துகளை சரியான அளவில் ஒழுங்காகப் பாவிப்பதாலும் உணவுக்கட்டுப்பாட்டை மேற் கொள்வதாலும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக் கலாம்.
  • அதிகரித்த கொழுப்பின் அளவு இரத்தத்தின் கொழுப் பின் அளவு மரபு வழியாகவும் உணவுப்பழக்கங்களில் கவ னம் செலுத்தாமையினாலும் தைரொயிட்.சிறுநீரகக்கோளாறு கள் போன்ற நோய்களாலும் மதுப்பழக்கத்தாலும் அதிகரிக்கின்றது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.அதிகரித்த கொழுப்பின் அளவு உள்ளவர்கள் சரியான உணவுப்பழக்கவழக்கம்,உடற்பயிற்சி மருந்துகள் உட்கொள்வதன் மூலம் மாரடைப்பைக் குறைக்கலாம்.
  • அதிகரித்த இரத்த அழுத்தம்:- சரியான மருந்துகள் உட்கொள்ளல், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டு, புகைத் தல் மற்றும் மதுப் பாவனையை நிறுத்துதல் மூலம் அதிகரித்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டாக வைத்திருந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
  • அளவுக்கதிகமான மதுபாவனை,புகைப்பிடித்தல் சாதாரண ஒருவரைவிட இவர்களுக்கு இரத்த அழுத்தம் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். புகைத்தல், மதுபாவனையை நிறுத்துதல் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
  • மன அழுத்தம் :- மன அழுத்தம் உள்ளவர்கள் தியானம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
  • அதிக உடற்பருமன்:- எப்போதும் உடல் எடையைக் குறைத்து வைத்திருப்பது மாரடைப்பு மட்டுமல்லாது வேறு உடல் நலப் பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப் பாற்றும். இதனால் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கு நீரிழிவு அதிகரித்த இரத்த அழுத்தம், அதிகரித்த கொழுப்பு உள்ளதா என ஆண்டுதோறும் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலம் கண்டறியப்படாத நோய்களினால் ஏற்படும் மாரடைப்பு வீதத்தைக் குறைக்கலாம்.

மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளதை வைத்தியர் எவ்வாறு இனங்காணுவார்?

  • நோயாளியின் அறிகுறிகள் பூரணநோய் வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலமும் நோயாளியைப் பரிசோதிப் பதன் மூலமும்.
  • ECG எனப்படும் இருதய வரைபுப் பட்டி:- இது மாரடைப்பின் தொடக்கத்தில் மாற்றங்கள் எதனையும் காட் டாது தொடர்ச்சியாக எடுக்கப்படும் போது மாறுதல்களைக் காட்டுவதாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு ஏற்படும் போது ECG இல் உள்ள மாற்றங்களைக் கொண்டே ஆரம்ப சிகிச்சை முறை தீர்மானிக்கப்படும்.
  • இரத்தப் பரிசோதனைகள் :- குறிப்பாக ரொபோனின் -((Troponin-l) இது மாரடைப்பு ஏற்பட்டு 4-6 மணித் தியாலங்களில் அதிகரிக்கும்.
  •  எக்கோ (Echo) பரிசோதனை இதன்மூலம் மாரடைப்பின் போது இருதயத் தசைகள் பலவீனமடைந் துள்ளதா அல்லது இருதயத் தொழிற்பாடு குறைவடைந் துள்ளதா என அறிந்து கொள்ளலாம்.
  •  ETT  எனப்படும் (Treadmill test) இது மாரடைப்பின் பின்னரும் மாரடைப்பு ஏற்படும் முன்னரும் கூட நடக்கும் போது ECG இல் ஏற்படும் மாற்றங்களை வைத்து மேலதிக பரிசோதனையான அஞ்சியோகிராம் பரிசோதனையைத் (Coronary Angiogram) தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • அஞ்சியோகிராம் (Coronary Angiogram) பரிசோதனை இருதயத்திற்கான இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு வீதத்தையும் அடைப்பு காணப்படும் குருதிக் குழாய்களையும் இனங்கண்டு கொண்டு சிகிச்சை முறையை (Angioplasty/CABG) தீர்மானிப்பதற்கு உதவும்.

வைத்தியர் மாரடைப்பின் போது உங்களுக்கு வழங்கும் சிகிச்சைமுறைகள் எவை?

  • இரத்தம் உறைவதனைக் தவிர்க்கக் கூடியமருந்து கள் வழங்கல்.
  • உ-ம் – அஸ்பிரின் (ASprin), குளோ பிடோகிறல் (Clopidogrel)

  • நெஞ்சுவலியைக் குறைக்கும் மருந்துகள் வழங்கல்.
  • உ-ம் — ISMN, GTN

  • இரத்த அழுத்தத்தை சீராக்கும் மருந்துகளும் இருதயத்துடிப்பைக் குறைத்து இருதயத்திற்கான இரத்த வழங்கலை அதிகரிக்கும் மருந்துகளும் வழங்கல்.
  • உ-ம் – கப்ரோபிறில் (Captopril), அடினலோல் (Atenolel)

  • ஒட்சிசன் இருதயப் பலவீனம் ஏற்பட்டவர்களுக்கு பெரிதும் உதவும்.
  • இரத்தகுழாய்களில் உள்ள இரத்தக் கட்டிகளைக் கரைக்கும் (Thromolyis) மருந்துகளைவழங்கல் உ-ம் – ஸ்ரெப்ரோகைனேஸ் (Streptokainese), RTAஇதனால் இரத்தோட்டத்தை இயத்தசை மீளப்பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. நோயாளி ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு எவ்வளவு குறுகியநேர இடைவெளியில் சிகிச்சை பெற வருகின்றாரோ அவ்வளவு இம்மருந்துகள் பயன்படுத்தக் கூடியதாகவும் 12 மணித்தியாலங்களுக்குள் பலனைத் தருவதாகவும் இருக்கும்.
  • ஆரம்ப சிகிச்சையைத் தொடர்ந்து அன்சி யோகி ராம் பரிசோதனையின் பின்னர் அடைப்புகளுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் ஸ்ரெனட் (stent), இடப்படுதலோ (Angioplasty) இருதய சத்திரசிகிச்சை (ABG) செய்யப்படுவதாலோ மீள் குருதியோட்டம் பெறப்ப டும். இதனால் இருதயத் தசைகளுக்கு ஒட்சிசன் நிறைந்த குருதி வழங்கப்படும். இருதயத்தசை இறப்படைதல் தடுக் கப்படும். இதனால் மரணம் தவிர்க்கப்படும்.

மாரடைப்பின் பின்னர் எமது வாழ்க்கை முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்ன?

  • உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம்
  • உணவில் கலோரிகுறைந்த உணவுகளான காய்கறிகள்,விற்றமின்கள், கனியுப்புக்கள், நார்த்தன்மை நிறைந்த உணவுகள், பழங்கள் என்பவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து குறைந்த தாவர எண்ணைய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்,ஆடை நீக்கிய பால் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.  மஞ்சட்கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, நண்டு, இறால் கணவாய், பெரியமின்கள் என்பவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  • மருந்துகளை சரியான அளவில் சரியான முறையில் பாவித்தலும் தவறாது கிளினிக் செல்வதன் மூலம் இரத்த அழுத்தம், இரத்தப் பரிசோதனைகளை கிரமமாகப் பார்த்துக் கொள்வதும் அத்தியாவசியம்.
  • மாரடைப்பினால் ஏற்படும் உடல் உளபாதிப்பை குடும்ப அங்கத்தவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். சிலர் மீதமுள்ள ஆயுள் முழுவதும் பிறரில் தங்கிவாழும் நிலைமை ஏற்படும் போது ஏற்படும் மனச்சோர்வையும் மன அழுத் தத்தையும் நீக்க வைத்தியரின் உதவியையோ அல்லது உளவள ஆலோசகர்களின் ஆலோசனையையோ நாடலாம்.
  • உடற்பயிற்சி செய்வது மாரடைப்பினால் ஏற்படும் இருதயப் பலவீனத்தின் அளவைப் பொறுத்து தீர்மானிக் கப்படும். சாதாரணமாக நோயாளி தனக்கு களைப்பு ஏற்படாத வகையில் ஆரம்பித்து படிப்படியாக வேகத்தையும் நேரத் தையும் அதிகரித்து ஒருநாளில் 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கத்தில் ஏற்படுத்த வேண்டும்.
  • இளவயதில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் சிக்கல்கள் அற்ற மாரடைப்பாயின் 4 கிழமைகளின் பின்னர் உட லுறவை மேற்கொள்ளலாம்.
  • மது பாவனையையும் புகைப்பிடித்தலையும் நிறுத் திக் கொள்ளவேண்டும்.
  • உடற்பருமனை உயரத்திற்கு ஏற்ப குறைக்க வேண்டும்.
  • இருதய சத்திரசிகிச்சை அல்லது ஸ்ரென்ட் (Stent) வைக்கத்தேவையானவர்கள் தமக்கு உரிய சிகிச்சை முறையை உடடியாக தீர்மானிப்பதன் மூலம் மாரடைப்பின் பின்னான மரணத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

Evening Tamil News Paper 1338922978

Related posts

உடல் ஆரோக்கியத்தை காக்க ஆயில் புல்லிங் செய்யுங்க

nathan

வயிறு கோளாறுகளை நீக்கும் ரோஜா ‘குல்கந்து’

nathan

பெண்கள் மார்பக சுய பரிசோதனை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய உதவும் ஓர் புதிய வழி! படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெற்றோராக தயாராகி கொண்டிருபவர்களுக்கான சில முக்கியமான டிப்ஸ்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப கால நீரிழிவிலிருந்து தப்புவது எப்படி?

nathan

சித்த மருத்துவத்தில் கூறப்படும் அழகுக் குறிப்புகள்

nathan

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோர்களிடம் மறைக்கும் 6 விஷயங்கள்!!!

nathan