கண்கள் நமக்கு இன்றியமையாதவை. பார்வை நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. பார்வைத்திறன் நமக்கு மிக அவசியம்.
நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடு
ஒருவரது பார்வைத்திறனுக்கு ஐந்து விஷயங்கள் அவசியம். ஒன்று: கண்களின் ஆரோக்கியம். இரண்டு: கண்ணின் விழித்திரையில் ஏற்படும் பார்வைக் கூர்மைத் திறனின் அளவு. மூன்று: விழித்திரையின் ஆரோக்கியம். நான்கு: விழித்திரையின் செயல்பாடு. ஐந்து: மூளையின் கூர்ந்து அறியும் திறன்..! போன்ற அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும்.
முதலில் பார்வைகுறைபாட்டை கண்டுபிடிக்கிறோம். பின்பு அதை சரி செய்கிறோம். இதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?
கண்ணாடி: காலங்காலமாக பார்வைக் குறைபாட்டை சரிசெய்ய பயன்படுவது கண்ணாடிகள்.
கான்டாக்ட் லென்ஸ்: அழகுக்காகவும், மேக் அப் விஷயங்களுக்காகவும், தொழில் முறைகளுக்காகவும், சவுகரியத்திற்காகவும் இது பயன்படுகிறது. கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் மிகவும் உபயோகப்படுகிறது.
ஆபரேஷன்: பார்வைக் குறைபாட்டை, பார்வை விலகலை ( Refractory error ) அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். ஆனால் இது அதிகம் விரும்பப்படுவதில்லை.
பார்வைக் குறைபாட்டை மேலே சொன்ன முறைகளை வைத்து சரிசெய்துவிடலாம். ஆனால் ஒருவருக்கு வண்ணக்குறைபாடு அதாவது நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடு ( Colour Vision Deficiency ) இருந்தால் அதை சரிசெய்வது என்பது சிரமமான காரியமாகும்.
நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடு தனக்கு இருக்கிறது என்பது பலபேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. எல்லாக் கலர்களும் நமக்குத்தான் தெரிகிறதே என்று சும்மா இருந்து விடுவார்கள். ஆனால் நாலுபேர் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, நிறங்களைப் பற்றி பேசி, பார்த்து, உனக்கு சிவப்பு நிறங்களை கண்டறியும் தெரிகிறதா, எனக்கு தெரியலையே என்று கலந்து பேசும்போது தான் இந்த குறைபாடு தெரியவரும்.
12 ஆண்களில் ஒருவருக்கும், 200 பெண்களில் ஒருத்திக்கும் உலகெங்கும் நிறங்களை கண்டறியும் குறைபாடு ( Colour Blindness ) இருக்கிறது. நிறங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் ஏற்படும் தடுமாற்றம், பெரும்பாலும் குழந்தைப்பருவத்திலிருந்தே இருக்கும். அதோடு பெரும்பாலும் இது தாயிடமிருந்துதான் குழந்தைக்கு வரும். இதுபோக சர்க்கரை வியாதி, மருந்து மாத்திரைகளின் பக்க விளைவு, முதுமை, பன்முகத் திசுக் கடினம் ( Multiple sclerosis ) போன்ற பல காரணங்களினாலும் ‘கலர்களை கண்டறியும் குறைபாடு’ ஏற்படலாம்.
இந்த குறைபாடு உள்ளவர்களும் மற்றவர்களைப் போலவே, எல்லாவற்றையும் துல்லியமாக, கரெக்டாக பார்த்துச் சொல்வார்கள். பார்வையில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால், கலர்களை கண்டறியும் குறைபாடு உள்ளவர்களால் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களும், அந்த நிறங்களிலுள்ள பொருட்களும், வெளிச்சங்களும், விளக்குகளும் சரியாகத் தெரியாது. அவர்களால் இந்த மூன்று வண்ணங்களையும் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது. எந்தக் கலரையும் கண்டுபிடிக்கத் தெரியாதவர்களாகவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெரும்பாலானோருக்கு சிவப்பும், பச்சையும் தான் கண்டு பிடிக்க முடியாமற்போகும். இந்த நிற குறைபாட்டு பிரச்சினையை மிகக் குறைவாக ( Mild ) சற்று அதிகமாக ( Moderate ), ரொம்ப அதிகமாக ( Severe ) என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குப் போகும் மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கலர்களை கண்டறியும் குறைபாடு இருக்கிறது. அது அவர்களுக்கே தெரியாது. அதே நேரத்தில் நிறங்களை கண்டறியும் குறைபாடு உள்ள சுமார் 60 சதவீதம் பேர் தினந்தோறும் இந்தப் பிரச்சினையால் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பார்வைக் குறைபாடு இருப்பவர்களை கண்டுபிடிப்பது சுலபம். கலர்களை கண்டறியும் குறைபாடு இருப்பவர்களை கண்டுபிடிப்பது சிரமம்.
இருட்டில் மனிதர்களுக்கு பார்வை குறைவாகவே இருக்கும். ஆனால் ஆந்தைகளுக்கும், இரவு நேர மிருகங்களுக்கும் கண்கள் நன்றாகத் தெரியும். தவளைகளுக்குக்கூட இருட்டில் கண்கள் நன்றாகத் தெரியும்.
சிவப்பு, பச்சை, நீலம், புறஊதா நிறம் ஆகிய நான்கு நிறங்களை பறவைகளால் பார்க்கமுடியும். ஏனெனில் நான்கு விதமான ஒளிக்கூம்பு செல்கள் ( Cone Cells ) பறவைகளின் கண்களில் இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு 3 விதமான ஒளிக்கூம்பு செல்கள் தான் இருக்கின்றன. ஆக, நம்மைவிட பறவைகள் தங்கள் கண்களால் பார்க்கும் உலகமே வேறு. ஏனெனில் அவைகளுக்கு, நம்மைவிட அதிகப்படியாக புறஊதா நிறங்களும் சேர்ந்து தெரிகிறதல்லவா! நாய்களுக்கு 2 விதமான ஒளிக்கூம்பு செல்கள்தான் இருக்கின்றன.
கண்கள் நமக்கு இன்றியமையாதவை. பார்வை நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. பார்வைத்திறன் நமக்கு மிக அவசியம்.