சிறிய குழந்தைகளுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும்தான் மீன்களை சாப்பிடக்கொடுப்பதில் அதிக கவனம் வேண்டும்.
பாதரசம் எந்தெந்த மீன்களில் அதிகளவு இருக்கிறது தெரியுமா?
நீங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து மீன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் ரத்தத்தில் PCB விஷப்பொருள் அதிகமாக இருக்கக்கூடும். அது ரத்தத்தில் அதிகமாக இருந்தால் உங்களுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். அரை மணி நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது ஞாபகத்துக்கு வர ஒரு மணி நேரம்கூட ஆகலாம்.
பூமிக்கு வடிகால் கடல்தான். எனவே பூமியில் உருவாகும் அனைத்து விதமான கழிவுகளும் கடலில் போய் சேருகின்றன. அதனால் அனைத்துவிதமான நச்சுப் பொருட்களும், நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களும், ரசாயனக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு இருக்கிறது. ‘எதையுமே கெட்டுப்போக விடாது, அப்படியே பாதுகாக்கும் குணம் உப்புக்கு உண்டு’ என்ற சொல்லுக்கு ஏற்ப, தன்னிடம் வந்து சேருகின்ற கழிவுகளையும், விஷப்பொருட்களையும்கூட கடல் நீர் அப்படியே பாதுகாத்து வைக்கிறது. கடல் நீரில் வாழும் மீன்கள் அந்த விஷப்பொருட்களையெல்லாம் விழுங்கி, தன்உடலில் பாதுகாக்கிறது.
எவ்வளவு அடர்த்தியான ரசாயனக்கழிவுகள் கடல் நீரில் இருந்தாலும், அவற்றை உட்கொண்டு தனது உடலிலும், கொழுப்பிலும் தேக்கி வைக்கக்கூடிய சக்தி மீன்களுக்கு உண்டு. பாதரசம் மட்டும்தான் மீன்களின் உடலில் தேங்கியிருக்கும் விஷப்பொருள் என்று நினைத்துவிட வேண்டாம். பாதரசத்தை போன்று பல விஷப் பொருட்கள் கடல் நீரில் இருக்கின்றன. அதன் வழியாக அதில் வாழும் மீன்களின் உடலிலும் சேருகின்றன. மீன் பெரிதாக வளர வளர அதனுடைய உடலில் சேரும் விஷப் பொருட்களின் அளவும் அதிகமாகிக் கொண்டே வரும். அந்த மீன்களை எவ்வளவு பதப்படுத்தினாலும், எவ்வளவு கொதிக்கவைத்து சமைத்தாலும் சில விஷப்பொருட்கள் அதில் இருந்து நீங்குவதில்லை.
சுமார் 5000 வகையான கடற்பாசிகள் ( Algae ) கடலில் உள்ளன. அதில் 70 வகையான கடற்பாசிகள் மனித உடலுக்கு கேடு செய்பவை. கடலிலுள்ள மீன்கள் அந்த விஷ கடற்பாசிகளையும் விழுங்கத்தான் செய்கின்றன.
வழக்கமாக மீன் சாப்பிடுபவர்களின் உடலுக்குள் PCB ( Poly Chlorinated Biphenyls ) என்ற செயற்கை ரசாயனப்பொருள் கழிவு சேரும்.
PCB ஆபத்தான ரசாயனப்பொருளாகும். இது புற்று நோய், குழந்தையின்மை, தாம்பத்திய உறவு பிரச்சினைகள், மூளை செயல்பாடுகளை மந்தமாக்குதல் போன்றவைகளை செய்யும்.
தொழிற்சாலைகள் இப்போது நிறைய உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவைகளில் சிலவற்றில் பாதரசத்தைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த தொழிற்சாலைகளில் உள்ள கழிவு நீர் மூலம் பாதரசமும் கடலில் கலக்கிறது. அதனுடைய உபபொருளான மீதைல் பாதரசமும் ( Methyl Mercury ) கலந்துவிடுகிறது.
உலகில் பசிபிக் கடல் ( Pacific Ocean ) தான் மிகப்பெரியது. ‘கடலிலே பெருங்காயத்தைக் கரைத்த மாதிரி’ என்று சொல்வது போன்று கடலில் கலக்கும் பாதரசத்தின் அளவு குறைவுதான். ஆனாலும் அது ஆபத்தானது.
பாதரசத்தின் உபபொருளான மீதைல் மெர்க்குரி கடலுக்கடியில் இருக்கும் கடற்பாசிகளால் ( Aìgae ) உள்ளிழுக்கப்படுகிறது. அந்த கடற்பாசிகளை சிறிய வகை மீன்கள் அதிகமாக உண்ணும். அதனால் மீதைல் மெர்க்குரி கடற்பாசி மூலமாக மீனிடம் போய் சேர்ந்து விடுகிறது. அது மீனின் உடலிலிருந்து கழிவாக வெளியேறும் வாய்ப்பு மிக குறைவு. அப்படியே வெளியே வந்தாலும், அது மிகமிக மெதுவாகத்தான் நடக்கும். மீதைல் மெர்க்குரி சுலபமாகக் கரையக்கூடிய பொருளல்ல. முதலில் அது மீனின் வயிற்றில் படிந்து, பின்பு மீன் முழுவதும் பரவும்.
அதிக காலம் வாழக்கூடிய மீன்களின் உடலிலும், மனிதன் அதிகமாக சாப்பிடக்கூடிய மீன்களின் உடலிலும், பாதரசக் கழிவு அதிக அளவில் புகுந்துவிடுகிறது. திமிங்கிலம் ( Bowhead Whale ), சுறாமீன் ( Greenland Shark ), கோய்மீன் ( Koi Fish ) ஆகியவை சுமார் 200 ஆண்டு காலம் வாழ்ந்ததாக பதிவுகள் இருக்கின்றன. அவை போன்று அதிக காலம் வாழும் மீன் இனம் இன்னும் நிறைய இருக்கின்றன. அவை எல்லாமுமே சிறிய மீன்களை டன் டன்னாக விழுங்கியிருக்கும். அதனால் அவைகளின் உடலிலும் பாதரசம் சேருகிறது.
உலகில் சுமார் 32000 மீன் வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ரஷிய நாட்டைச் சேர்ந்த ‘பெலுகா ஸ்டூஜெரான்’ ( Beluga Stugeron Fish ) என்கிற மீன், திமிங்கிலம், சுறாமீனை அடுத்து, அதிக நீளமும், அதிக எடையும் கொண்டது. பல்லாயிரம் வகைகள் இருந்தாலும் நமக்கு தெரிந்தது 50 வகைகள்தான். இதைத்தான் மாற்றி மாற்றி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். புதுவகை மீன்களை சாப்பிட்டு பார்க்க நமக்கு பயம் வரும். ஏன்என்றால் விஷத்தன்மை கொண்ட புதிய வகை மீன்களை சாப்பிட்டு ஒருசிலர் இறந்திருக்கிறார்கள்.
கடல் மீன்களின் பாதரசம் இருப்பதுபோல, பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களிலும் சிலவகை ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மீன் பண்ணைகளில் வியாபாரத்துக்காக வளர்க்கப்படும் மீன்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கிறார்கள். சத்து மருந்துகளும், எதிர்ப்பு சக்தி மருந்துகளும் கொடுக்கிறார்கள்.
காலா, கிழங்கா போன்ற நன்னீரில் தண்ணீரில் வாழும் மீன்களுக்கு அதிக கிராக்கி உண்டு. அதிக அளவில் விற்பனையாகும் இந்த மீன்களை ‘சால்மன்'( Salmon ) மீன் என்று வெளிநாடுகளில் அழைப்பதுண்டு. தேவையான அளவு இந்த மீன்கள் பிடிக்கப்படுவதில்லை. அதனால்தான் மவுசு அதிகரிக்கிறது.
சால்மன் மீன்கள் அமெரிக்காவில், மீன் பண்ணைகளில் நிறைய அளவில் வளர்க்கப்படுகின்றன. பண்ணைகளில் வளர்க்கப்படும் இந்தப் பெரிய சால்மன் மீன்களுக்கு, மனிதர்கள் வாங்காத சில சிறிய மீன்கள் உணவாகப் போடப்படுகின்றன. 5 கிலோ சிறிய மீன்களை உணவாகப் போட்டால், 1 கிலோ சால்மன் மீன்தான் கிடைக்கும்.
‘கடல் வாழைக்காய்’ என்று அழைக்கப்படும் மீன்களில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. கூடவே கடலில் கலக்கும் கழிவுகளால் விஷங்களும் இருக்கின்றன. அதனால் அதிக கழிவுகள் கலக்காத மீனை பார்த்து வாங்கி சாப்பிடுங்கள்.
பாதரசம் எந்தெந்த மீன்களில் இருக்கிறது தெரியுமா?
சுறா ( Shark ), தலப்பத்து ( Sword Fish), சுரை ( Tuna ) போன்ற பெரிய மீன்களின் உடலில் பாதரசம் அதிக அளவில் இருக்கும். கலவா ( Grouper ), கொடுவாய் ( Sea Bass ), கீரை மீன் ( Tuna Yellow ) போன்றவைகளிலும் ஓரளவு இருக்கிறது. ஆனாலும் குறைந்த அளவில் மட்டுமே இந்த வகை மீன்களை சாப்பிடவேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளும், கர்ப்பிணிப்பெண்களும் கண்டிப்பாக சாப்பிடுவதை தவிர்த்துவிடவேண்டும்.
கெண்டை ( Times ), பன்னா ( Cod ) , கடல் இறால் ( Lobster ), கொண்டல் ( Snapper ), பாஸ் ( Bass ) முதலிய சில வகை மீன்களில் பாதரசத்தின் அளவு மற்ற பெரிய மீன்களைவிட சற்று குறைவாக இருக்கிறது. ஆகவே இந்த வகை மீன்களை மாதத்துக்கு இருமுறை சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளும், கர்ப்பிணிப்பெண்களும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
சங்கரா, வெளவால் ( Pomfret ) , நெத்திலி ( Anchovies ), விரால், கெளுத்தி, ஆற்று நண்டு, ஏரி நண்டு, காணாங்கெளுத்தி, சிப்பி ( Oyster ), காலா, மத்தி, சிறிய இறால், ஊசி கனவா, கரி மீன், கிழங்கா போன்ற சிறிய வகை மீன்களின் உடலில் பாதரசத்தின் அளவு மிக குறைவாகவே இருக்கிறதாம். எனவே இந்த சிறிய வகை மீன்களை குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் ஓரளவு சாப்பிடலாம்.
சிறிய குழந்தைகளுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும்தான் மீன்களை சாப்பிடக்கொடுப்பதில் அதிக கவனம் வேண்டும். ஏனெனில், குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சியை பாதரசம் பாதித்துவிடக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள்கூட, கடல் மீன்களை சாப்பிடுவதற்குப் பதிலாக, அவரவர் வசிக்கும் பகுதிகளிலுள்ள ஓடும் நீரிலுள்ள சிறிய மீன்களை சாப்பிடுவது நல்லது.