தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை.
எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படி
தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.
எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் பயிற்சிகளுக்குச் செல்லலாம்.
முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.
1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம்.
முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.
4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு……..
5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.
6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.
7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைந்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்கையை நிறுத்தி விடாதீர்கள்.
8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.