27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201607180909123535 Do you know which fish is the impurity SECVPF
ஆரோக்கிய உணவு

எந்த மீனில் மாசு கலந்திருக்கிறது தெரியுமா?

இந்தியாவில் மீன் பிரியர்கள் அதிகமாக வாழும் கொல்கத்தா மக்கள் உடலில் பாதரசத்தின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

எந்த மீனில் மாசு கலந்திருக்கிறது தெரியுமா?
இந்திய கிராம மக்கள் சராசரியாக ஒரு மாதத்துக்கு 269 கிராம் மீன் சாப்பிடுகிறார்கள். நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் 238 கிராம் மீன் சாப்பிடுகிறார்கள். லட்சத்தீவு மக்கள் மாதம் 4 கிலோவுக்கு அதிகமாக மீன் சாப்பிடுகிறார்கள்.

மீனின் வாசம் பல பேருக்குப் பிடிக்காதிருந்தாலும், உணவு என்று எடுத்துக்கொண்டால், நிறைய பேர் விரும்பும்படியான உணவாக மீன்தான் இருக்கிறது. காரணம் இது, அதிக சத்துக்கள் நிறைந்த இயற்கை உணவு.

மீன், அதிக அளவில் புரதச் சத்துக்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு அதிகமாகத் தேவைப்படும் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துப்பொருட்களையும் தருகின்றது.

‘வாரத்துக்கு ஒருமுறையோ, இருமுறையோ மீன் சாப்பிடுவது இருதயத்துக்கும், ரத்த ஓட்ட மண்டலத்துக்கும் மிகமிக நல்லது” என்று அமெரிக்க இருதய ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இருதய பாதிப்புகளைக் குறைக்கக் கூடிய சக்தி மீனுக்கு இருக்கிறது. மீனில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலம் ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கிறது. உடலுக்குள் நோய் இருந்தாலோ, ரணம் இருந்தாலோ, அதை குணப்படுத்தி விடுகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

நூறு கிராம் மீனில் 22 கிராம் புரோட்டின் இருக்கிறது. ஆண்டுக்கணக்கில் மது அருந்தியவர்களுக்கு கல்லீரல் கெட்டுப்போய் சுருங்க ஆரம்பித்துவிடும். கல்லீரல் பாதிக்கப்பட்டு, உடல் எலும்பும் தோலுமாக ஆனவர்களுக்கு புரோட்டின் உணவு மட்டுமே சக்தியைக் கொடுக்கும். உடல் வளர்ச்சி, உடல் செயல்பாடுகளுக்கு புரோட்டின் சத்து இன்றியமையாதது. மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் புரோட்டின் சத்தைவிட, மீன் மூலம் கிடைக்கும் புரோட்டின் சத்து உடலுக்கு நல்லது. பாதுகாப்பானது.

எண்ணெய் நிறைய ஊற்றி தயாரிப்பதற்குப் பதிலாக, ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் மீன் உணவு சிறந்தது. தினமும் 100 கிராம் மீன் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான புரோட்டின் தேவையை ஈடுகட்டிவிடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு ஆணுக்கு 26 கிராம் புரோட்டின் சத்தும், ஒரு பெண்ணுக்கு 22 கிராம் புரோட்டின் சத்தும் தேவைப்படுகிறது. இந்த சத்து உடலில் இருக்கவேண்டிய அளவைவிட குறைந்துவிட்டால், தசைகள் சுருங்கிப் போகுதல், உடல் அதன் வடிவத்தை இழத்தல், உடல் செயல்பாடுகள் முடங்குதல் போன்றவை தோன்றும். மீனில் புரோட்டின் அதிகமாக இருக்கிறது.

கடலில் வாழும் மீனில், கடல் நீரிலுள்ள உப்பின் அளவை விட, அந்த மீனின் உடலிலுள்ள உப்பு குறைவாகத்தான் இருக்கும். நன்னீரில் வாழும் மீனில், அந்த நீரிலுள்ள உப்பின் அளவைவிட, அந்த மீனின், உடலில் உப்பு அதிகமாக இருக்கும்.

மக்கள் தொகையும், விஞ்ஞானமும் வளர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில், பல்வேறு விதத்தில், பல்வேறு விதமான கழிவுப் பொருட்களும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. மக்கள் அறியாமையில் இருப்பதால் அவை எல்லாமே கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. புண்ணிய நதியான கங்கை நீரிலே 48 விதமான மாசுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நீரில் கலக்கும் மாசுப்பொருட்கள் அனைத்துமே, நீரை நம்பி வாழும் மீன்களில் படிகிறது. அது மீன்களை சாப்பிடும் மனிதர்களையும் பாதிக்கிறது.

பெரிய மீன்களை நாம் சாப்பிடும்போது, நமது உடலுக்குள் பாதரசம் புகுந்துவிடுகிறது. பெரிய மீன்கள் நிறைய நாட்கள் வாழும் என்பதால், உயிர்வழிப்பெருக்கம் மூலமாக, பாதரசமும், ஒவ்வொரு உயிரினமாக தாண்டித் தாண்டி, கடைசியில் மனிதனுக்கு வந்து சேருகிறது.

பிரித்துப் பார்க்க முடியாது. மீனின் உடலில் புகுந்த விஷப்பொருட்கள், மீனுக்கு எந்தவித கெடுதியையும் உண்டுபண்ணாது. ஆனால் அந்த மீனை சாப்பிடும் மனிதர்களுக்குத்தான் பாதிப்பை உண்டுபண்ணும்.

இரும்புத்தாது சுரங்கங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், இவைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரிலும், பாதரசச் சுரங்கம், தெர்மாமீட்டர் தொழிற்சாலை, கியாஸ் மீட்டர் தொழிற்சாலை, நாட்டு மருந்துகள் செய்யும் தொழிற்சாலை இவைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரிலும் பாதரசம் கலந்திருக்க வாய்ப்புண்டு. மேற்கூறிய கழிவுநீர் போய்ச் சேரும் இடமாகிய கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றிலும் பாதரசம் சேரும். அது மீனின் உடலுக்குள் சென்று, உணவாக மனித உடலுக்கு வருவது, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

பாதரசம் உடலுக்குள் போனால், வெளியே வரவே வராது. அது உடலின் பல இடங்களில் அப்படியே படிந்து விடும். தொடர்ந்து பாதரசம் உடலுக்குள் போய்க்கொண்டிருந்தால், பின்னாளில் மெதுவாக சிறுநீரகத்தைப் பாதிக்கச்செய்து, செயலிழக்கவைத்துவிடும். இதைத் தொடர்ந்து கல்லீரல், நுரையீரல், நரம்பு மண்டலம் முதலியவற்றையும் பாதிக்கும்.

பாதரசம் மீனின் வயிற்றுக்குள் எப்படி செல்கிறது, தெரியுமா?

தண்ணீரில் மிதக்கும் பொருட்களையும், படிந்துள்ள பொருட்களையும் மீன்கள் ஓடி ஓடி துரத்தி, துரத்தி விழுங்குவது வழக்கம். கழிவு நீர் மூலமாக கலந்துள்ள பாதரசமும் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு திவலை களாக தண்ணீரில் கலந்திருக்கும். எனவே, மிகச்சிறிய மீன்கள் இந்தப் பாதரசத் திவலைகளை விழுங்குகின்றன.

மிகச்சிறிய மீன்கள் தான், இந்தப் பாதரச திவலைகளை முதன் முதலில் விழுங்குகின்றன. பின்னர், இந்த சிறிய மீன்களை, சற்று பெரிய மீன்கள் உணவாக விழுங்குகின்றன. நிறைய சிறிய மீன்களை, ஒரு பெரிய மீன் விழுங்கும்போது, பல சிறிய மீன்களின் உடலிலிருந்து மொத்த பாதரசமும், ஒரு பெரிய மீனின் உடலில் போய்ச் சேருகிறது.

மீன்கள் உடலுக்குள் செல்லும் சாதாரண பாதரசம், ‘மீத்தைல் பாதரசமாக’ மாறிவிடுகிறது. இதுதான் நச்சுப்பொருள்.

‘ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு, தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன்” என்றொரு வசனத்தை, ‘பராசக்தி’ திரைப்படத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேசுவார். அதுபோல நீரில் இருக்கும் மீனுக்கு, நீரில் அழுக்கு எது, நல்லது எது, பாதரசம் எது என்றெல்லாம் தெரியாது. நீரை சுத்தப்படுத்தும் நோக்கத்தில் அது எல்லாவற்றையும் விழுங்கும். அது நல்லது செய்கிறது. மனிதர்களுக்கு அது கெடுதலில் முடிகிறது.

அமெரிக்காவில் 1700 பெண்களிடம் செய்த பரிசோதனையில், பாதரசத்தின் அளவு அதிகமாக அவர்களுடைய ரத்தத்திலும், முடியிலும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கிரீன்லாந்திலும், ஜப்பானிலும் வாழ்கிறவர்களின் உடலில் அமெரிக்கர்களைவிட பாதரசத்தின் அளவு அதிகமாக இருக்கிறதாம்.

இந்தியாவில் மீன் பிரியர்கள் அதிகமாக வாழும் கொல்கத்தா மக்கள் உடலில் பாதரசத்தின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. கொல்கத்தா நகரிலுள்ள ஐந்து மிகப்பெரிய மீன் மார்க்கெட்டுகளில் இருந்து மீன்கள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து சாம்பிள்களிலுமே, இருக்க வேண்டிய அளவுக்கு மேலேயே, பாதரசத்தின் அளவு மீன்களின் உடலில் இருந்துள்ளது. அதன் பின்பே அங்குள்ள மக்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.201607180909123535 Do you know which fish is the impurity SECVPF

Related posts

அவசியம் தெரிந்து ககொள்ளுங்கள் சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள்

nathan

சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்ற தாமரை உணவுகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடிய பழங்கள்!

nathan

ஆலு பன்னீர் கோப்தா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு பால் பிடிக்காதா? இதோ பாலுக்கு இணையான சில உணவுப் பொருட்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்!தினமும் காலையில் ஒரு ஸ்பூன் இத சாப்பிடுங்க! உடலில் அதிசயத்த பாருங்க.

nathan

காலையில் வெல்லம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

நீங்கள் காரம்ன்னு பச்சை மிளகாயை ஓரமா ஒதுக்கறீங்களா? அப்ப இத படிங்க!

nathan

தண்ணீரை சுத்திகரிக்க வாழைப்பழத்தோல்

nathan