ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, பாதாம் ஹரிரா என்னும் பானம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த பானத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முற்றிலும் பாதாம் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படுவதால், இது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.
மேலும் இந்த பானத்தை நோன்பு காலத்தில் மட்டுமின்றி, தினமும் கூட குடித்து வரலாம். இதனால் உடல் ஆரோக்கியம் தான் மேம்படும். சரி, இப்போது அந்த பாதாம் ஹரிராவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்: நெய் – 1 டீஸ்பூன் மைதா – 1 டேபிள் ஸ்பூன் பால் – 1 லிட்டர் பாதாம் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ – சிறிது சர்க்கரை – 1/4 கப் உலர் பழங்கள் மற்றும் ரோஜாப்பூ இதழ்கள் – சிறிது (அலங்கரிக்க)
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் மைதா சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு அதில் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாதாம் பவுடர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அதில் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது உலர் பழங்களையும், சிறிது உலர்ந்த ரோஜாப்பூ இதழ்களையும் சேர்த்து அலங்கரித்து, சூடாக பரிமாறினால், பாதாம் ஹரிரா ரெடி!!!