மெனோபாஸ் நிலையை நோக்கி பெண்கள் பயணிக்கும் காலகட்டம். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இந்த வயதில் வரலாம் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
மெனோபாஸ் காலகட்டத்தில் அதிகளவில் பெண்களை தாக்கும் நோய்கள்
தற்போது அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரத்தில், தவறான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவதால் 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு, உடல் நலம் மற்றும் மனநல பிரச்சனைகள் வரத்தொடங்குகின்றன. 35 வயதைத் தாண்டிய பெண்கள், தங்கள் உடலின்மீது அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பதால் வைட்டமின் டி கிடைக்காது.
உடற்பயிற்சி இன்மை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தொடர்ந்து டி.வி பார்ப்பது போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். தனிமை உணர்வும் தலை தூக்கும். மன அழுத்தம் காரணமாக சர்க்கரை நோய், சர்க்கரை நோய் காரணமாக மனஅழுத்தம் எனச் சுழற்சியாகத் தொடர்வதால், ரத்த அழுத்தம், இதய நோய்கள், நரம்பியல் பிரச்சனைகள், ஸ்ட்ரோக் ஆகிய உடல் உபாதைகளும் உடன் சேர்ந்துகொள்கின்றன.
வேலைக்குச் செல்லும் பெண்கள், காலை உணவைத் தவிர்ப்பதும், மதியம் குறைவாகச் சாப்பிடுவதும், இரவில் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டன. இதனால், வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது. எலும்புகள் தேய்மானம் அடையும். இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வரும். அல்சைமர் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
மேலும், இந்த வயதினர் மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருப்பதால், மனநலக் குழப்பங்களும் சேர்ந்துகொண்டு பெண்களைப் பாடாய்ப்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க, உடற்பயிற்சி, சத்தான உணவுகள், வாழ்வியல் மாற்றம் ஆகியவை மூலம் பெண்கள் 40 வயதில் ஏற்படும் அவதியைத் தவிர்க்க முடியும்.