25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ht44183
ஆரோக்கிய உணவு

கீரை தி கிரேட்: வெந்தயக்கீரை

கோபம் இருக்கும் மனிதர்களிடம்தான் குணம் இருக்கும்’ என்பதைப் போல கசப்பு அதிகம் உள்ள வெந்தயக்கீரையில்தான் அரிய மருத்துவக் குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. வெந்தயக் கீரையை பயிரிடுவதும் சமைப்பதும் மிக எளிது. எளிதாகக் கிடைக்கிற எதற்கும் நாம் அத்தனை சீக்கிரம் மதிப்பளிப்பதில்லை.

வெந்தயக் கீரையும் அப்படித்தான். வாரத்தில் 2 முதல் 3 முறை வெந்தயக் கீரையை, முளைகட்டிய வெந்தயத்தை, வெந்தயப் பொடியை சேர்த்துக் கொள்வோருக்கு ஆரோக்கியம் உத்தரவாதம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.வெந்தயக் கீரையின் மருத்துவக் குணங்களை விளக்கி, அதை வைத்து ருசியான ஆரோக்கியமான 3 சமையல் குறிப்புகளையும் கொடுத்துள்ளார் அவர்.

வெந்தயக் கீரையை மருந்தாகவும் பயன்படுத்தலாம். அதன் விதைகள்… அதாவது, வெந்தயத்தை சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். முளைகட்டிய வெந்தயத்துக்கு மருத்துவக் குணங்கள் இன்னும் அதிகம். உலர்ந்த வெந்தயக்கீரைக்கு தனி மணமும் குணமும் உண்டு. கசூரி மேத்தி என்கிற உலர் வெந்தயக் கீரை வட இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிப்பதுண்டு.

மருத்துவக் குணங்கள்

1. ரத்தக்கொழுப்பை குறைக்கிறது

கொழுப்பைக் குறைப்பதில் வெந்தயக் கீரைக்கு வேறு எந்தக் கீரையும் நிகராவதில்லை என்கின்றன ஆய்வுகள். குறிப்பாக எல்டிஎல் எனப்படுகிற கெட்ட கொழுப்பை குறைக்கும் குணம் இதற்கு உண்டு. உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு வகை கொழுப்புகளை உடல் உறிஞ்சிக் கொள்வதைத் தடுக்கும் Steroidal saponins அதிகம் கொண்டது இந்தக் கீரை.

2.இதய நோய் பாதிப்புகளை குறைக்கிறது

வெந்தயக் கீரையில் உள்ள இயற்கையான கரையும் தன்மையுடைய நார்ச்சத்தான கேலக்டோமன்னன் (Galactomannan) இதய ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள அதிக அளவிலான பொட்டாசியம், ரத்த அழுத்தத்துக்கும் இதயக் கோளாறுகளுக்கும் காரணமாகிற சோடியத்தின் விளைவுகளைத் தவிர்த்து இதய நலம் காக்க உதவுகிறது.

3. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது

நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயமாகவோ, வெந்தயக் கீரையாகவோ உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தில் உள்ள கேலக்டோமன்னன் ரத்தத்தில் சர்க்கரை அளவு சேரும் வேகத்தைக் குறைக்கிறது. வெந்தயக் கீரையில் உள்ள அமினோ அமிலமானது இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

4. செரிமானத்தை சீராக்குகிறது

நார்ச்சத்தையும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளையும் அதிக அளவில் கொண்டதால் நச்சுகளையும் கழிவுகளையும் வெளியே தள்ளி, செரிமானத்தை சீராக்கச் செய்கிறது வெந்தயக் கீரை. அஜீரணத்துக்கும் வயிற்றுவலிக்கும் வெந்தயம் சேர்த்த டீயை மருந்தாகக் கொடுப்பதுண்டு. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் வெந்தயக் கஷாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மருந்தாக எடுத்துக் கொண்டால் நிவாரணம் பெறலாம்.

5. நெஞ்செரிச்சலைத் தவிர்க்கிறது

தினமும் உணவில் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உணவு எதுக்களித்துக் கொண்டு வருகிற பிரச்னையும் நெஞ்செரிச்சலும் குணமாகும். வெந்தயத்தில் உள்ள கொழகொழப்புத் தன்மையானது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதியை மூடி, வயிற்று எரிச்சல் மற்றும் உபாதைகளை விரட்டச் செய்கிறது. வெந்தயத்தின் கொழகொழப்புத் தன்மையை முழுமையாகப் பெற அதைத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து உண்பது சிறந்தது.

6. எடைக்குறைப்புக்கு உதவுகிறது

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தின்பதன் மூலம் அதிகப்படியான எடை குறையும். வெந்தயத்தின் நார்ச்சத்தும், ஜெல் போன்ற அதன் சிறப்புத் தன்மையும் வயிற்றை நிறைத்து அதீதப் பசியைக் குறைத்து, குறைந்த அளவே சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். அதன் விளைவாக எடை குறையும்.

7. காய்ச்சலுக்கும் தொண்டைக் கரகரப்புக்கும் மருந்தாகிறது

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, அதில் வெந்தயப் பொடி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல் தணியும். தொண்டைக் கரகரப்பும் இருமலும்கூட குணமாகும்.

8. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கட்டாய உணவு வெந்தயம். அதிலுள்ள Diosgenin தாய்ப்பால் சுரப்பைத் தூண்டி அதிகரிக்கச் செய்யக்கூடியது.

9. சுகப்பிரசவத்துக்கு உதவுகிறது

பிறப்புறுப்புப் பகுதிகளைத் தளரச் செய்து சுகப்பிரசவம் நடக்க உதவும் தன்மைகளைக் கொண்டது வெந்தயம். பிரசவ வலியைக் குறைக்கக்கூடியது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக்கொண்டால் அது கரு கலையவோ, குறைப்பிரசவம் நிகழவோ காரணமாகி விடும்.

10.மாதவிடாய் கோளாறுகளை சரியாக்குகிறது

பி.எம்.எஸ். எனப்படுகிற மாதவிலக்குக்கு முன்பான உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளை விரட்டக் கூடியது வெந்தயம். மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சந்திக்கிற உடல் சூடாவது, மனநிலைத் தடுமாற்றங்கள் போன்றவற்றையும் இது விரட்டக்கூடியது. மாதவிடாய், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். வெந்தயக்கீரையை சமைக்கும் போது கூடவே தக்காளி சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்தானது முழுமையாகக் கிடைக்கச் செய்ய முடியும்.

11. மார்பக அழகுக்கு உதவுகிறது

வெந்தயத்திலும் வெந்தயக்கீரையிலும் உள்ள ஈஸ்ட்ரோஜென் மாதிரியான தன்மை, மார்பகங்களை ஓரளவுக்குப்பெரிதாக்க உதவுகிறது. ஹார்மோன்களை சமநிலையில் வைக்கச் செய்கிறது.

12. பெருங்குடல் புற்றுநோய் வராமல் காக்கிறது

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் அதன் வழவழப்புத் தன்மை உடலின் நச்சுகளை வெளித்தள்ளிவிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

13.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் ஏற்படுகிற கொப்புளங்கள், எக்சீமா எனப்படுகிற சரும நோய் போன்றவற்றை சரியாக்குகின்றன. சருமத்தில் உள்ள தழும்புகளையும் போக்குகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்த விழுதில் ஒரு சுத்தமான துணியை முக்கி, முகத்தில் சிறிது நேரம் வைத்திருந்து எடுப்பது சருமத் தழும்புகளை விரட்டியடிக்கிற எளிய சிகிச்சை.

வெந்தயம் சேர்த்துத் தயாரித்த ஃபேஸ்பேக்குகள் பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை விரட்டக் கூடியவை. வெந்தயம் வேக வைத்த தண்ணீரை ஆற வைத்து முகம் கழுவ உபயோகிக்கலாம் அல்லது வெந்தய விழுதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறிக் கழுவலாம். இவை எல்லாமே சரும அழகை மேம்படுத்தும்.

14. கூந்தல் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது

வெந்தயத்தை முறையாக உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும். தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை ஊற வைத்து, தினமும் இரவில் அந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து காலையில் குளித்து வந்தால் கூந்தல் உதிர்வது கட்டுப்படும். பொடுகையும் விரட்டும்.

ஹெல்த்தி ரெசிபி

மேத்தி-மஷ்ரூம் பீஸ்

என்னென்ன தேவை?

வெந்தயக்கீரை-2கட்டு, பச்சைப்பட்டாணி – ஒன்றரை கப், காளான் – 200 கிராம், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 4, பட்டை – 1 துண்டு, வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய தக்காளி – கால் கப், தயிர் – கால் கப், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, முந்திரி விழுது – அரை கப், கசகசா விழுது – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, ஏலக்காய், பட்டை தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும். இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து மீண்டும் வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். தயிர் சேர்த்து வதக்கவும். அடுத்து முந்திரி விழுது, கசகசா விழுது சேர்த்து நன்கு கிளறவும். ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் காளான் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் ஆய்ந்து, சுத்தப்படுத்திய வெந்தயக் கீரை சேர்த்து இன்னொரு கொதி விட்டு, இறக்கவும்.

மேத்தி பனீர்

என்னென்ன தேவை?

வெந்தயக்கீரை – 1 கட்டு, தக்காளி (பொடியாக நறுக்கியது) – 3, பனீர் – 200 கிராம், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 3, இஞ்சி – 1 துண்டு, பூண்டு- 4 பல், பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கவும். பிறகு சுத்தம் செய்த வெந்தயக்கீரை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து அரைக்கவும். அந்த விழுதை கீரையில் சேர்க்கவும். மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். 2 நிமிடங்கள் கொதித்ததும் கால் கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். பனீர் துண்டுகளை சிறிது உப்பும், மஞ்சள் தூளும் கலந்த தண்ணீரில் லேசாக கொதிக்கவிட்டு, தண்ணீரை வடிகட்டி, பனீரை மட்டும் கிரேவியில் சேர்க்கவும். மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கரம் மசாலா தூவவும். சப்பாத்தி உடன் சூடாகப் பரிமாறவும்.

மேத்தி ஆலு பராத்தா

என்னென்ன தேவை?

வெந்தயக்கீரை – 2 கட்டு, கோதுமை மாவு – 2 கப், கடலை மாவு – 2 கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – 4, சீரகம் – 1 டீஸ்பூன், தயிர் – கால் கப், கரம் மசாலா – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள்- தேவைக்கேற்ப, உப்பு- தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் – தேவைக்கு, ஆம்சூர் தூள் (உலர்ந்த மாங்காய் தூள்) – அரை டீஸ்பூன், நெய்- 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நெய்யை சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அது வெடித்ததும் சுத்தம் செய்து, ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக்கீரையையும் மஞ்சள் தூளையும் சேர்க்கவும். ஈரம்போக 3 நிமிடங்களுக்கு வதக்கவும். அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் உப்பு, கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மிளகாய் தூள், ஆம்சூர் தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த மசாலாவை வெந்தயக் கீரையில் சேர்த்து, மாவையும், தயிரையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, இரு புறமும் வாட்டி, தயிருடன் பரிமாறவும்.
ht44183

Related posts

வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய்

nathan

மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..

nathan

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

nathan

உங்களுக்கு தெரியுமா கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan

பழங்களை கொண்டாடுவோம்! துரித உணவை மறப்போம்… .

nathan

இந்த உணவுகள் எல்லாம் ஆரோக்கியமானதா இருந்தாலும் நீங்க அடிக்கடி சாப்பிடக் கூடாது! ஏன் தெரியுமா?

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணமாகவில்லையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan