25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201606280744300884 Exhibit those who stress activities SECVPF
மருத்துவ குறிப்பு

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

மன அழுத்தம் என்பது இல்லாமல் இன்றைய வேகமாக உலகில் யாராலும் இருக்க முடிவதில்லை. காரணம் சூழ்நிலை தாக்குதல்கள்.

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்
20 சதவீத நோய்கள் மன அழுத்தத்தினாலேயே ஏற்படுகின்றன என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பலவித நோய் தாக்குதல்களுக்கு இன்று மருத்துவத்தில் தீர்வு உண்டு. இது விஞ்ஞானத்தின் முன்னேற்றம். வருமுன் காப்பதற்கும் பல தீர்வுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைதான் தடுப்பு ஊசிகள், சத்து மாத்திரைகள், உணவு முறைகள், சுகாதாரச் சூழ்நிலை என உருவாயின. ஆயினும் மக்கள் அதிகமாக நோய் வாய்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
இன்னும் சொல்லப் போனால் இளைய சமுதாயம் அதிகம் நோய்வாய்படுகின்றது. அதிக தலைவலி என்று சொல்லாத இளைய சமுதாயம் குறைவு. டென்ஷன் என்ற சொல், குழந்தைகளின் முதல் சொல் ஆகிவிட்டது. 30 வயதிற்குள் மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. எந்த துறையில் இருப்போரும் மன அழுத்தத்துடனேயே இருக்கின்றனர்.

இன்றைய சூழல் இருக்கும் நிலை என்ன? அதிக எதிர்பார்ப்புகள் அநேகரிடத்தில் இருக்கின்றது. வேலை கொடுப்பவரும் அதிகம் எதிர்பார்க்கிறார். வேலை செய்பவரும் அதிகம் எதிர்பார்க்கிறார். இதனால் இருவருக்குமே ஏமாற்றம் ஏற்படுகின்றது. இதே நிலை தான் பெற்றோர்கள், பிள்ளைகள் உறவிலும் உள்ளது. நடக்க முடியாத ஒன்றினை நடக்க வேண்டும் என்ற பிடிவாதம் பலரை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடுகின்றது.

மிக ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் நல்ல நிலையில் இருக்கும் அநேகருக்கும் சரி, சாதாரணமானவர்களுக்கும் சரி பணமே பத்தவில்லை. ஏழைகளின் நிலையினை என்ன சொல்வது? யாருமே ஆரோக்கியமான பேச்சுகளை பேசுவதில்லை. பண்பான பேச்சுகள் பஞ்சமாகி விட்டது. உரத்த குரலில் தடித்த வார்த்தைகளில் எங்கும் எதிலும் சண்டைதான். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையினை அலுவலகத்திலேயே வாழ்ந்து முடித்து விடுகின்றான். சுகவாசிகளை காணும் கடும் உழைப்பாளி நொந்து விடுகின்றான்.

இவையெல்லாம் மனிதனை மனஅழுத்தம் உடையவனாக ஆக்கி விடுகின்றது. இந்த மன அழுத்தமே உடலில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. சிறிது மனஅழுத்தம் இல்லாவிடில் மனிதன் முழு சோம்பேறி ஆகி விடுவான். நேரத்திற்கு எழ வேண்டும். நேரத்தில் செய்ய வேண்டும், கடமைகளை ஆற்ற வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி அளவான மன அழுத்தத்தினை கொடுக்கவே செய்யும்.

இந்த மனஅழுத்தம்

* ஐம்புலன்களை கூராக்கும்.
* சக்தி கூடும், வேகம் கூடும், கவனிப்பு கூடும்.
* சவால்களை ஏற்கச் செய்யும்.

டி.வி. பார்த்தல், விளையாட்டில், பொழுது போக்கில் மனஅழுத்தமே இல்லை. பரீட்சையில் மனஅழுத்தம் உண்டு. ஆனால் இந்த மனஅழுத்தம் சக்தி எல்லையைத் தாண்டும் பொழுது அது ஆபத்தாகிறது. உடனே

* அட்ரினல், கார்டிசால்ஹார்மோன் சுரக்கும்.
* இருதயம் தடதடவென அடித்துக் கொள்ளும்.
* ரத்த கொதிப்பு கூடும்.
* மூச்சு வேகமாகும்.
* தன் உயிரையும் காத்து, பிறர் உயிரையும் காப்பர்.

ஆக மனஅழுத்தம் சற்று கூடும் பொழுது சிறிது நேரம் அமைதியாய் மூச்சு விடுங்கள். நமது வேகஸ் நரம்பு ஐம்புலன்களோடு சம்பந்தப்பட்டது. ஆக ஒருவரை சற்று அமைதிப்படுத்திக் கொள்ள அறியும் பொழுது உடல் நலம் எந்த விதத்திலும் பாதிப்பு அடையாது. நம்மால் அமைதியின் மூலமே பல செயல்களை சாதிக்க முடியும் என்பதனை உணர வேண்டும். மனஅழுத்தமுடை யோருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள்.

* அதிகமாக வியர்க்கும்
* முதுகு வலி இருக்கும்
* நெஞ்சு வலி இருக்கும்
* தாய், தந்தையருக்கு அதிக மனஉளைச்சல் இருந்தால் குழந்தைகள் அதிகம் குண்டாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
* சதை பிடிப்பு, சதை வலி
* அடிக்கடி தலைவலி
* இருதய நோய்
* உயர் ரத்த அழுத்தம்
* நோய் எதிர்ப்பு சக்தி இன்மை
* நகம் கடித்தல்
* நரம்பு துடிப்பு
* உடலில் ஊசி குத்துவது போன்ற உணர்வு
* தூக்கம் சரி வர இன்மை
* வயிறு சரியின்மை
போன்றவை இருக்கும்.
மனஅழுத்தம் உடையோர் வெளிப்படும் மன பாதிப்புகள்
* கோபம்
* படபடப்பு
* சோகம்
* சோர்வு
* பாதுகாப்பின்மை போல் உணர்தல்
* எரிச்சல்
* கவனமின்மை ஆகியவை ஆகும்.

மனஅழுத்தம் சிறிய, பெரிய என எந்த செயலானாலும் ஏற்படும். ஒருவருக்கு சாதாரணமாகத் தெரியும் ஒரு வேலை மற்றொருவருக்கு சுமையாகத் தெரியும். ஆயினும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் சில பொதுவான காரணங்கள் உள்ளன.

* குடும்ப பிரச்சினைகள்
* பணப்பற்றாக்குறை
* தீரா நோய்
* வேலை பளு, வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை
* நேரமின்மை
* அடிக்கடி இடம் மாற்றும் வேலை
* உறவுகளில் கசப்பு
* கருச்சிதைவு
* தாய், தந்தை ஆகும் பொழுது அந்த திடீர் பொறுப்பு
* நெரிசலான போக்குவரத்தில் அடிக்கடி செல்வது
* வேலை இழத்தல்
* பக்கத்து வீட்டின் அதிக சத்தம் (சண்டை, பைக், கார் சத்தம்)
* நெரிசலான சூழ்நிலை கொண்ட வீடு
* கர்ப்பம்
* உத்யோக ஓய்வு

பொதுவில் கர்ப்ப காலத்தில் தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையை பாதிக்கும். அக்குழந்தை பள்ளியில் மற்ற குழந்தைகளால் சீண்டி தொந்தரவு செய்யப்படும். அக்குழந்தை தைரியமின்றி, தன்னம்பிக்கை இன்றி இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

* அதிகம் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
* மிகவும் குறைவாக சாப்பிடுவார்கள்.
* உணவுக்கு ஏங்குவார்கள்.
* திடீரென கோபத்தில் கத்துவார்கள்.
* குடி பழக்கம் ஏற்படும்.
* சமூகத்திலிருந்து ஒதுங்குவார்கள்.
* அடிக்கடி அழுவார்கள்.
* உறவுகளில் பிரச்சினை இருக்கும்.

மனஅழுத்தத்தினை சரிவர கவனியாது விட்டு விட்டால் அது தொடர் அழுத்தம் ஆகிவிடும். இந்த பாதிப்பு உள்ளவர்களைப் பார்த்தால்
எதையுமே நெகடிவ் எனப்படும் எதிர் மறையாகத்தான் பார்ப்பார்கள். (உதாரணம்) வெளியில் போனால் விபத்து நிகழும் என்பார்கள்.

* எதற்கெடுத்தாலும் பயம் என்பார்கள்.
* வேகமாகப் பேசுவார்கள்.
* எண்ண ஓட்டம் மிக வேகமாக இருக்கும்.
* சதா கவலை மட்டும்தான் இவர்கள் வாழ்க்கையாகி விடும்.
* எக்ஸிமா போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படும்.
* தனிமை படுத்தப்பட்டது போல் உணர்வார்கள்.
* எதையும் தவறாகவே புரிந்து கொள்வார்கள்.
* மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு உடையவர்களாக இருப்பார்கள்.

நடக்க முடியாத ஒன்றை நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் உள்ள நடைமுறை உண்மையை இவர்களால் உணரவே முடியாது. மன அழுத்தம் இல்லாதிருக்க நீங்களே உங்களுக்குச் செய்து கொள்ள வேண்டிய உதவிகள்.

மன அழுத்தம் என்பது இல்லாமல் இன்றைய வேகமாக உலகில் யாராலும் இருக்க முடிவதில்லை. காரணம் சூழ்நிலை தாக்குதல்கள். நீங்கள் வேலைக்குச் செல்பவரோ, வீட்டில் இருப்பவரோ, வயதானவரோ, இள வயதோ மன அழுத்தம் நீங்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை. மனதிற்கும் நம்மை அளிக்கின்றன. மன அழுத்தம் நீங்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.

எளிதான உடற்பயிற்சி, நடைபயிற்சி, அதையாவது செய்யுங்கள். குழந்தைகளுக்கு நீச்சல், ஓட்டம், சைக்கிள் போன்றவற்றினை இப்பொழுதிலிருந்தே நன்கு பழக்கி விட்டீர்கள் என்றால் மன அழுத்தம் என்ற பாதிப்பின் பிடியில் அவர்கள் சிக்க மாட்டார்கள்.

* வேலையை பிரித்துக் கொடுங்கள். ‘அனைத்துமே நான் செய்தால் தான் சரியாக இருக்கும்’ என சொல்லி எல்லா வேலைகளையும் தலை மேல் இழுத்து போட்டு திணறுபவர் ஏராளம். இவ்வாறு செய்வதால் உடல், மனம் இரண்டும் சோர்ந்து விடும். வேலையும் சீராக முடியாது. அவரவர் வேலையை அவரவரை செய்ய விடாது தானே செய்வதும் தவறே. ஆக வேலையினை பிரித்துக் கொடுங்கள். மற்றவர்களையும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்.

* கடுமை இல்லாத கண்டிப்பு இருக்க வேண்டும். இதன் பொருள் என்ன? ஒருவர் சற்று ஏமாந்தவர் போல் இருந்தால் அனைவரும் எல்லா வேலைகளையும் அவர் மீதே திணிப்பர். ஆகவே ‘முடியாது’ என்பதனையும் ‘உங்களுக்கு வேலை கூடுதல்’ என்பதனையும் கடுமை இல்லாத வார்த்தைகளால் கண்டிப்பாக சொல்லி விடுங்கள்.

* குடி பழக்கமும், புகை புழக்கமும் மன அழுத்தத்தினை கூட்டவே செய்யும். அநேகரும் மன அழுத்தம் தீர குடி பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். புகை பிடித்தல், டென்ஷன் ஏற்பட்டவுடன் முதல் தீர்வாக செய்வர். இவை இரண்டும் ஒருவரை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். இதனை அடியோடு நீக்குவதே மன அழுத்த தீர்வாகும்.

* இதே போல் காபி குடிப்பதும். அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உடையோர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவர். அதிக காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றே அதனை கை விடுங்கள்.

* சத்தான உணவு: பழங்களும், காய் கறிகளும் மன அழுத்தம் நீக்கும் மிக சிறந்த உணவுகள். அதிக எண்ணெய், மசாலா உணவுகளை கண்டிப்பாய் தவிர்த்து பழங்களையும், காய்கறிகளையும் உண்ணுங்கள்.

* நேரம்: எதனையும் நேரப்படி முறையாகச் செய்யுங்கள். விடிய விடிய கண் விழிப்பது, பகலில் தூங்குவது, பாதி ராத்திரி உண்பது, காலை பட்டினி கிடப்பது போன்று தாறுமாறான வாழ்க்கை முறைகள் காலப் போக்கில் மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

* மூச்சுப் பயிற்சி: யோகா பயிற்சி முறையில் மன அழுத்தம் இன்றி இருப்பதற்கான சில மூச்சு பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

* மனம் விட்டு பேச சில நல்ல உறவுகள், நட்பு அவசியம்.

* தியானம், யோகா, மன இறுக்க தளர்ச்சி பயிற்சி முறைகள் அனைவருக்குமே அவசியம்.

* மிக அதிகமான பாதிப்பு இருந்தால் மருத்துவ உதவியும் அவசியம்.201606280744300884 Exhibit those who stress activities SECVPF

Related posts

கர்ப்பம் தரித்து இருப்பதை அறிந்து கொள்ள உதவும் வழிமுறைகள்

nathan

நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்

nathan

PCOS எனும் கருப்பை நீர்க்கட்டிக்கு அக்குபஞ்சரில் தீர்வு!!

nathan

உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது ? அதைத் தடுப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்…

nathan

கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள்

nathan

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக மலடாக்கும் அன்றாட விஷயங்கள்!

nathan

வீட்டு வைத்தியம் …!

nathan