தாமரையின் பூ, தண்டு, கிழங்கு, விதை போன்றவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்ற தாமரை உணவுகள்
தாமரை ஆன்மிக மலராக போற்றப்படுகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இது பூக்கும். இதற்கு சூரியநட்பு, கமலம், அரவிந்தம் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
தாமரையின் பூ, தண்டு, கிழங்கு, விதை போன்றவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. தண்டை உலரவைத்து வற்றலாகவும், விதையை பக்குவப்படுத்தி சமையலுக்கு ஏற்றவாறும் விற்பனை செய்கிறார்கள். உடல் வெப்பத்தினால் ஏற்படும் கோளாறுகளை தணிப்பது தாமரை பூ சார்ந்த உணவுகளின் தனித்தன்மை. இவை உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் சூட்டை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். இதய நோய்களை கட்டுப்படுத்தும். இதய தசைகளை வலுப்படுத்தி, ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை நீக்கும்.
உடல் சூடு ஏற்படும்போது வறட்டு இருமல், சீதக்கழிச்சல், மூல நோய் போன்றவை தோன்றும். மாதவிடாய் காலத்தில் உதிரப் போக்கும் அதிகமாக இருக்கும். இவை அனைத்திற்கும் தாமரை பூ சிறந்த உணவு. காய்ச்சல், ஒவ்வாமையையும் குணமாக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மையும் இதற்கு இருப்பதாக சமீபகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாமரை தண்டுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதன் மேல் தோலை சீவி விட்டு உணவு வகைகளில் சேர்க்கவேண்டும். இதனை வற்றலாக தயாரித்து மக்கள் ருசிக்கிறார்கள்.
தாமரை கிழங்குக்கு ஈரல் நோய்களை குணப்படுத்தும் சக்தியிருக்கிறது. குறிப்பாக ஈரலில் படிந்துள்ள கொழுப்பை இது நீக்குகிறது. இதிலும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின் மற்றும் தாது சத்துக்களும் உள்ளன. புண்களை ஆற்றும் சக்தியும் இருக்கிறது. சிறுநீரக நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவு. தாமரை கிழங்கின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி உணவில் பயன்படுத்தலாம். கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையை குறைக்கும். உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்ற உதவும்.
சீனா, ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் தாமரைத் தண்டு மற்றும் கிழங்கு அதிக அளவில் உணவாக பயன்படுத்தப்படுகிறது. அவைகளில் சூப், வறுவல், பொரியல், சாலட் போன்றவைகளை தயார் செய்து சுவைக்கிறார்கள். பதப்படுத்தப்பட்டும் இது உணவில் சேர்க்கப்படுகிறது. நம் நாட்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பரிய உணவாக தாமரை கிழங்கு திகழ்கிறது.
தாமரை விதை உடலுக்கு சக்தியளிக்கக்கூடியது. அதில் புரத சத்து நிறைந்திருக்கிறது. நல்ல கொழுப்பை உடலில் அதிகரிக்கும். மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தை தரும். தாமரை விதையை பொடிசெய்து ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டால், தாது சக்தி அதிகரிக்கும். கிழக்காசிய நாடுகளில் விதையில் கேக், பிஸ்கெட், ஊட்டச்சத்து மாவு மற்றும் இனிப்பு வகைகளை தயார் செய்து சுவைக்கிறார்கள்.
தாமரை பூ இதழ்களும், கிழங்கும் உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடிய தைலங்களில் சேர்க்கப் படுகிறது. அதனை தேய்த்து குளித்தால் உடல் சூடு நீங்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கான மருந்துகளும், இதய பலத்திற்கான மருந்துகளும் தாமரையில் இருந்து தயாராகிறது.
வெண் தாமரையாதி சூரணம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிறந்த மருந்து. இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.