குண்டாக இருப்பதற்கு இன்றைய வாழ்க்கை முறை மட்டும் காரணமில்லை. நாம் நினைத்தேயிராத சில அம்சங்களும் நம் உடல் எடை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைகிறது. அவை எவை, அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்ப்போம்.
பிரச்சினை 1 – உணவுகளைத் தவிர்ப்பது: குண்டாக இருக்கிறோமே என்று நினைத்து உணவுகளைத் தவிர்க்காதீர்கள்; முக்கியமாக காலை உணவை! உங்களைக் கட்டுப்படுத்துவது மூளை. மூளை இயங்குவதற்கு குளுகோஸ் தேவை. காலை உணவைத் தவிர்ப்பதன் மூலம், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. இதனால் உங்கள் வேலைகளில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போகும்.
அதுமட்டுமன்றி, உங்கள் மூளையின் செயற்பாட்டில் குளறுபடிகள் ஏற்படுவதால், ஒரு கட்டத்துக்கு மேல் அதிகமான உணவுகளை உட்கொள்ளும்போதும் மூளை உங்களை எச்சரிப்பதில்லை. அதுவும் இரவு வேளைகள் என்றால் உணவுகளை ஒரு கை பார்த்து விடுகிறீர்கள். உண்ட களைப்பு உந்தித் தள்ள உடனே உறங்கவும் சென்றுவிடுகிறீர்கள். இதுபோன்ற தவறான பழக்க வழக்கங்கள் உங்களது உடலை மேலும் பருமனாக்கிவிடுகிறது.
தீர்வு: காலை உணவைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, அளவாக உண்ணுங்கள். உணவு உண்ணும்போது குறைவாக உண்ணவேண்டும் என்ற விதிமுறை எதையும் எற்படுத்திக்கொள்ளாதீர்கள். போதும் என்று தோன்றும்போது எழுந்து விடுங்கள்.
பிரச்சினை 2 – விரைவாக உண்பது: விரைவாக உண்பதால், விரைவாகவே பசி உணர்வும் தோன்றும். மேலும், விரைவாகச் சாப்பிடுவதனால் வயிறு நிரம்பினால் கூட சாப்பிட்ட உணர்வே தோன்றாது. எனவே, சாப்பிட்டாலும் பசி உணர்வு இருப்பது போலவே இருக்கும்.
தீர்வு: ஆற அமர உணவை வாயிலிட்டு, சற்று நேரம் அதை வாயில் வைத்து அரைத்தபின் விழுங்குவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால், நீண்ட நேரம் சாப்பாட்டுக்கு முன் அமர்ந்தபடி இருப்பதாலும், நீண்ட நேரம் வாயில் உணவு தங்கியிருப்பதாலும் குறைவான உணவிலேயே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதனால் மூளையானது, ‘சாப்பிட்டது போதும். எழுந்திரு’ என்று உங்களுக்குக் கட்டளையிட்டுவிடும். (இது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.) மேலும், உணவைப் பரிமாறிக்கொண்டு, உணவின் முன் ஐந்து முறை மூச்சை ஆழமாக உள்ளெடுத்து வெளிவிடுங்கள். இதன்மூலம், குறைவான உணவை உண்டாலும் திருப்தியான உணர்வைத் தரும்.
பிரச்சினை 3 – வார இறுதி நாட்களில் அதிகமாக உண்பது: விடுமுறை நாட்களில் நீங்கள் நீங்களாக இருக்க மாட்டீர்கள். அந்த நாட்களில் கிடைத்ததையெல்லாம் உண்பீர்கள். (வார இறுதி நாட்களில் தான் பீஸா ஹட்களும், கேஎஃப்சிக்களும் நிரம்பி வழிகின்றன.) இதனால், ‘லெப்டின்’ என்ற, உங்கள் பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் ஹோர்மோன் பாதிக்கப்படுகிறது. இதனால், விடுமுறையின் பின்னரும் கூட அதேபோன்ற உணவுகளை உடல் எதிர்பார்க்கத் தொடங்குகிறது. விடுமுறை நாட்கள் முழுவதும் நீங்கள் கட்டுப்பாடின்றிச் சாப்பிடும் உணவு, ஒரு வாரத்தின் ஏழு நாட்களுக்குத் தேவையான உணவில் 30 சதவீதம் என்பதை அறிவீர்களா?
தீர்வு: வாரத்தில் ஒரு விடுமுறை நாளன்று, ஒரு வேளை மட்டும் உங்கள் உணவுப் பழக்கத்துக்கு சுதந்திரம் கொடுங்கள். இதன்மூலம், வாரம் முழுவதும் சீரான உணவு உங்களுக்குக் கிடைப்பதை உறதிசெய்யலாம்.
பிரச்சினை 4 – உப்பு நிறைந்த உணவை உண்பது: அளவுக்கதிகமான சோடியம் உப்பை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் நம்மையறியாமலேயே அதிகமாக உண்ணத் தொடங்குகிறீர்கள். சோளப் பொரி சாப்பிடுவது முதல், வறுத்த கடலை வரை அனைத்துமே அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களே!
தீர்வு: வழக்கத்திலும் குறைவாக உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால், இரண்டே வாரங்களில் அதன் சுவையை உங்கள் நா அறியத் தொடங்கிவிடும். பொழுதுபோக்கின்போதும், குறைவான உப்பு அடங்கிய நொறுக்குத் தீனிகளுக்கு மட்டுமே இடம் கொடுங்கள். உணவில் போட எடுக்கும் உப்பை, ஒரு முறை மேசையில் தட்டிவிட்டுப் போடுங்கள். இதன் மூலம் உப்பின் அளவைக் குறைக்க முடியும். மேலும், உணவைச் சமைத்த பின் அதன் மேல் உப்பைத் தூவும் பழக்கத்தை மூட்டை கட்டி வைத்து விடுங்கள்.
பிரச்சினை 5 – மது அருந்துதல்: நீங்கள் ஒரு வாரத்தில் அருந்தும் பியர், வைன், சாராயம் உள்ளிட்ட மதுசாரம் நிரம்பிய பானங்களின் அளவைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வார இறுதியில் பார்த்தால் உங்களுக்கே அது அதிர்ச்சியைத் தரும். இரண்டு பியர்களை அருந்தும் ஒருவருக்கு 2000 கலோரிகள் அதிகப்படியாகச் சேர்ந்துவிடுகின்றன. இது, ஏறக்குறைய ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவைப்படும் கலோரிகளை விடச் சற்று அதிகம். இதைக் குறைப்பதற்கு இரண்டு மணிநேரம் தொடர்ச்சியாக ஓட வேண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தீர்வு: வேறென்ன? மதுப் பழக்கத்தை விடுவதுதான்! ஒரே ஒரு வாரம் உங்கள் மதுப் பாவனையைத் தற்காலிகமாகவேனும் நிறுத்தி வையுங்கள். அதற்கு முன்னதாக உங்கள் உடல் எடையையும் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு வாரத்தின் இறுதியில் மீண்டும் உங்கள் உடல் எடையைப் பரீட்சித்துப் பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
பிரச்சினை 6 – தொலைக்காட்சி பார்க்கும்போது உண்பது: தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து உண்பவர்கள், மற்றவர்களை விட 300 கலோரிக்கும் அதிகமான உணவை உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தொலைக்காட்சியை அதிகமாகப் பார்ப்பவர்களிடம் உடல் உழைப்பு குறைவாகவே இருக்கிறது. இவ்வாறானவர்கள் மற்றவர்களை விட மூன்று மணிநேரம் குறைவாக உறங்குவதாகவும், மறுநாள் நொறுக்குத் தீனிகளாக 200 கலோரிகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.
தீர்வு: தொலைக்காட்சி பார்க்க விரும்புபவர்கள், அதற்கு முன்னதாக நீண்ட தூரம் நடைபயிற்சி மேற்கொண்டு விட்டு வாருங்கள். வசதிப்பட்டவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் அதேநேரம், வீட்டிலேயே உடற்பயிற்சி சாதனங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஒரு குறித்த நேரத்துக்கு நித்திரைக்குச் செல்வதையும் தொடர்ச்சியாகக் கடைப்பிடியுங்கள்.