28.1 C
Chennai
Tuesday, Jan 21, 2025
p20a
எடை குறைய

உடல்பருமன் அறுவைசிகிச்சை அழகா? ஆபத்தா?

அதீத உடல் பருமனைக் குறைக்க மட்டும் அல்ல… ‘மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்’ என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோய் முதலான பல்வேறு நோய்களையும் தடுக்க இன்று பரிந்துரைக்கப்படும் சிகிச்சையாக மாறிவிட்டது ‘பேரியாட்ரிக் சிகிச்சை.’

‘உடல் எடையைக் குறைக்க இந்த அறுவைசிகிச்சை செய்வது சரியா, யார் எல்லாம் இந்த அறுவைசிகிச்சையை செய்துகொள்ளலாம்?’ என்று உடல்பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற மூத்த அறுவைசிகிச்சை நிபுணர்களில் ஒருவரான ராஜ்குமார் பழனியப்பனிடம் கேட்டோம்.

”உலக சுகாதார நிறுவனம் (WHO), சர்வதேச உடல்பருமன் மற்றும் மெட்டபாலிக் குறைபாடு அறுவைசிகிச்சை அமைப்பு (IFSO), சர்வதேச டயாபடீஸ் கூட்டமைப்பு (IDF) ஆகிய மூன்றும் இணைந்து பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை யாருக்குச் செய்யலாம் என்று வரைமுறை வகுத்துள்ளன. உடல்பருமன் அறுவைசிகிச்சை என்பது அழகுக்காகச் செய்யப்படும் ஓர் அறுவைசிகிச்சை கிடையாது. உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக, சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் என பல சிக்கல்கள் உருவாகி, ஆரோக்கியமான உடற்பயிற்சி, டயட் மூலம் உடல் எடை குறைக்க முடியாது, இனி ஆரோக்கியமாக உயிர்வாழ வேண்டும் என்றால் அறுவைசிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.”

p20a

“யார் உடல்பருமன் அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம்?”

”உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும், இதனை பி.எம்.ஐ என்ற முறையில் அளவிடுகிறார்கள். பி.எம்.ஐ பொதுவாக 18.5 முதல் 25-க்குள் இருப்பதே ஆரோக்கியமானது. பி.எம்.ஐ 40-க்கு மேல் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக இந்த அறுவைசிகிச்சை செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது. பி.எம்.ஐ அளவீடு 35-க்கு மேல் இருந்தால், உடற்பயிற்சி, டயட் மூலம் குறைக்க முடியாத சூழ்நிலை இருந்தால், தாராளமாக இந்த அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். பி.எம்.ஐ 32.5 -35க்கு்ள் இருப்பவர்கள் சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு என வேறு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் மட்டும் இந்த அறுவைசிகிச்சையை செய்துகொள்ளலாம்.

பொதுவாக 32.5 – 40-க்குள் பி.எம்.ஐ இருப்பவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்யலாம் என்றாலும்கூட, அவர்களுக்கு அவசரமாக உடனே செய்தே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதிப்போம். அப்படி ஒரு நிலை இல்லை என்றால், உடற்பயிற்சி, டயட் மூலமாக ஆறு மாதங்களுக்கு எடை குறைகிறதா எனக் கண்காணிக்கப்படும். உடல் எடை குறையவே இல்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே உடல்பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம் எனப் பரிந்துரைக்கப்படும். மிகவும் சிக்கலான நிலையில் இருப்பவர் எனில், அதாவது உடல் பருமனால் கட்டுக்கடங்காத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஸ்லீப் ஆப்னியா, மூட்டு வலி, போன்ற பிரச்னைகளோடு உடல் பயிற்சி செய்யவே முடியாத சூழ்நிலையில் இருப்பவர் என்றால், அவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை உடனடியாகச் செய்யலாம்.”

“ஏன் பி.எம்.ஐ 40-ஐ தாண்டினால் உடல்பருமன் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும்?”

“பி.எம்.ஐ 40 என்பதற்கு அவர் உயரத்துக்கு மிக அதிகமான உடல் எடை கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அதாவது, 160 செ.மீ உயரம் உள்ளவரின் எடை அதிகபட்சம் 62 கிலோ வரை இருக்கலாம். ஆனால், அவர் 100 கிலோவுக்கு மேல் இருந்தால் பி.எம்.ஐ 40-ஐ தாண்டிவிடும். அதன் பின்னர் உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைப்பதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. மேலும், அவர் உடல் எடை இன்னும் அதிகரித்துக்கொண்டேதான் செல்லும்.

பி.எம்.ஐ 45 என்ற அளவைத் தொடும்போது, அவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், இதய நோய், சர்க்கரை நோய் என அனைத்தும் வந்துவிடும். வளர்சிதை மாற்றம் (Metabolism) மிகவும் குறைவாகிவிடும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் உடலில் சரியாகக் கிரகிக்கப்படாது அல்லது அவசியம் வெளியேற வேண்டிய சத்துக்கள், வெளியேறாமல் உடலில் கழிவுகள் சேர்ந்துவிடும். இதுபோன்ற மோசமான சூழ்நிலையைத் தவிர்க்கவே, பி.எம்.ஐ 40-ஐத் தாண்டினால் உடல்பருமன் மற்றும் வளர்சிதை மாற்றத்துக்கான அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.”

p21a

“உடல்பருமனைக் குறைக்கும் அறுவைசிகிச்சையில் எத்தனை வகைகள் உள்ளன?”

“தற்போது நடைமுறையில் சுமார் 8 விதமான அறுவைசிகிச்சை முறைகள் உள்ளன. ஒருவரது உடல்நிலை, பாதிப்பின் தீவிரம் என பல விஷயங்களை ஆராய்ந்தே அவருக்கு எந்த மாதிரியான அறுவைசிகிச்சை தேவைப்படும் என்பதை டாக்டர் முடிவு செய்வார்.

ஆரம்பத்தில் இரைப்பையைச் சிறிதளவு வெட்டி, அதனை வெளியே எடுக்காமல் உடலுக்குள்ளேயே வைக்கும் அறுவைசிகிச்சை முறையான வெர்டிக்கல் பேன்டட் கேஸ்ட்ரோ பிளாஸ்டி அறுவைசிகிச்சை, வயிற்றைக் கிழித்துச் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில் ரிஸ்க் அதிகம், குணமடைய நீண்ட நாட்கள் ஆகும். அறுவைசிகிச்சைக்குப் பின் எடை பெரிதாகக் குறையவும் இல்லை. அதனால், இந்த முறை கைவிடப்பட்டு, லேப்ரோஸ்கோப்பி அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. லேப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளில் முக்கியமாக இரண்டு வகைகள் இருக்கின்றன. சாப்பிடும் அளவைக் குறைப்பதற்காக ரெஸ்ட்ரிக்டிவ் வகையைச் சார்ந்த, அறுவைசிகிச்சைகளும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை சரிசெய்வதற்காக வளர்சிதை மாற்று அறுவைசிகிச்சைகளும் (Mal obsorptive) செய்யப்படுகின்றன.”

“இந்த அறுவைசிகிச்சையில் பக்கவிளைவு உள்ளதா?”

“சில பக்க விளைவுகள் உள்ளன. பெரும்பாலும் நுண்ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் மட்டுமே பிரச்னை ஏற்படும். ஆனால், அதற்குரிய மாத்திரைகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவந்தால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது. மிகமிக அரிதாக சிறுநீரகம், கல்லீரல் போன்றவை ஒரு சிலருக்கு முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.”

“உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சைகள்தான் ஒரே தீர்வா?”

“டயட், உடற்பயிற்சி மூலம் உடல் எடை குறையவில்லை, உடல் எடையைக் குறைத்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், அறுவைசிகிச்சை செய்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

சிலருக்கு உடல்பருமனோடு சேர்ந்த சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கவும், சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கவும் இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

அழகுக்காக இந்த அறுவைசிகிச்சை செய்ய நினைப்பவர்கள், அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள். 10, 20 கிலோ குறைப்பதற்கு எல்லாம் இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுவது இல்லை.”

– பு.விவேக் ஆனந்த்

மால் அப்சார்ப்டிவ் அறுவைசிகிச்சை

மால் அப்சார்ப்டிவ் அறுவைசிகிச்சை என்பது வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தச் செய்யப்படுகிறது. உடல் பருமனோடு இருப்பவர்களுக்கு, சர்க்கரை நோய் முதலான வேறு சில நோய்களும் இருந்தால், ஸ்லீவ் காஸ்ட்ரேக்டமி அறுவை
சிகிச்சையுடன் சேர்த்து, மால் அப்சார்ப்டிவ் அறுவைசிகிச்சையும் செய்யப்படும்.

மால் அப்சார்ப்டிவ் அறுவைசிகிச்சையில் பலவிதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் அவருடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, எந்தவித அறுவைசிகிச்சை செய்யலாம் என முடிவுசெய்யப்படும். இந்த முறையில் காஸ்ட்ரிக் பைபாஸ், மினி காஸ்ட்ரிக் பைபாஸ், டியோடினோஜெஜினல் பைபாஸ் என பல வகைகள் உள்ளன.

ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி அறுவைசிகிச்சையில் சிறுகுடலின் முன் பகுதி, பின் பகுதி, நடுப் பகுதி எனத் தேவைக்கு ஏற்ப இரைப்பையுடன் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்படும். ஆன்டிஇன்க்ரிடின் என்ற ஹார்மோன், சிறுகுடலில் ஓரளவு சுரக்கிறது. இந்த ஹார்மோன்தான் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் மறைமுகக் காரணி. சிறுகுடல் பைபாஸின்போது, இந்த ஹார்மோன் வெளியேறிவிடும். இதனால், பல்வேறு நோய்கள் கட்டுக்குள்வந்துவிடும்.

மால் அப்சார்ப்டிவ் அறுவைசிகிச்சைகளில் பல வகைகள் இருந்தாலும், மிக முக்கியமாக ரூக்ஸ்-என்-ஒய் (Roux-en-Y), மினி காஸ்ட்ரிக் பைபாஸ்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இந்தியர்களுக்கு மினி காஸ்ட்ரிக் பைபாஸ் அறுவைசிகிச்சை பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இந்தியர்கள் சற்று அதிகமாகச் சாப்பிடுவர் என்பதால், அவர்களுக்குச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும், நுண் ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படும், உடல் எடை நன்றாகக் குறையும், சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ரெஸ்ட்ரிக்டிவ் அறுவைசிகிச்சை

இதில் பல வகைகள் இருந்தாலும், ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve Gastrectomy), கேஸ்ட்ரிக் பேண்ட் (Gastric Band) ஆகிய இரண்டு அறுவைசிகிச்சைகள்தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இரைப்பையைச் சுற்றி ஒரு பேண்ட் போடுவதுதான் கேஸ்ட்ரிக் பேண்ட் அறுவைசிகிச்சை. இந்தியர்கள் மாவுச்சத்து நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுவார்கள் என்பதால், கேஸ்ட்ரிக் பேண்ட் அறுவைசிகிச்சை செய்யப்படுவது இல்லை.

ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி அறுவைசிகிச்சைதான் இந்தியாவில் பிரபலம். இரைப்பையின் கொள்ளவு இந்த அறுவைசிகிச்சை மூலம் குறைக்கப்படும். இந்த அறுவைசிகிச்சையின்போது இரைப்பையில் சுரக்கும் கிரிலின் ஹார்மோன் சுரப்பு அகற்றப்படும். இந்த ஹார்மோன்தான் பசியைத் தூண்டும். இந்த ஹார்மோன் வெளியேறுவதால் பசி எடுக்காது; குறைவாகவே சாப்பிட முடியும்.

இதனால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு சில மாதங்களில் உடல் எடை குறையும். இதனுடன், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்னை, தைராய்டு ஆகிய பிரச்னைகளும் கட்டுக்குள் வந்துவிடும். இந்த அறுவைசிகிச்சை, சாப்பிடும் அளவைக் குறைப்பதற்காக மட்டுமே செய்யப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு, இரைப்பையில் இருக்கும் தசைகள் அதிகமாக வேலை செய்யும். இதனால், சில வருடங்களில் மெள்ள மெள்ள இரைப்பை பெரிதாகும், இதனால், மீண்டும் அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். இதன் காரணமாக மறுபடியும் அறுவைசிகிச்சை செய்ய நேரிடலாம்.

அறுவைசிகிச்சை செய்த பின்னர் வாழ்நாள் முழுவதும் அளவுடன் சாப்பிட்டுவந்தால் எந்தப் பிரச்னையும் வராது. இந்த அறுவைசிகிச்சையில் பக்கவிளைவுகள் குறைவு. ஆனால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு அந்த நபர் உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு போன்றவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். வெறும் உடல்பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு மட்டும் இது பரிந்துரைக்கப்படும்.

உடல்பருமனோடு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் முதலான பிரச்னைகள் இருந்தால், இவர்களுக்கு வளர்சிதை மாற்றத்துக்கான அறுவைசிகிச்சையும் சேர்த்துச் செய்வது அவசியம்.

Related posts

To control your weight – உடல் எடை அதிகரிப்பதை தடுக்க

nathan

உடல் எடையை குறைக்க தூண்டுகோலாகும் நடைப்பயிற்சி

nathan

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது

nathan

இதோ பத்தே நாட்களில் உடல் எடையில் மாற்றம் காண எளிய டிப்ஸ்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பிரபலங்களின் எடை இழப்பிற்கான ரகசியங்கள்!!!

nathan

உங்களுக்கான தீர்வு விரைவில் உடல் எடை குறைக்க??

nathan

உங்களுக்கு தெரியுமா வேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும், எப்படி?

nathan

உடல் எடை குறைய என்ன உணவுகளை சாப்பிடலாம்

nathan