கோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது.
ஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு தரும்.
இங்கு அப்படி கொசுக்களின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தரும் உள் அலங்கார செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பூண்டு
பூண்டு செடியை வீட்டினுள் ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து வந்தால், அதன் அடர்த்தியான நறுமணத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.
துளசி
துளசியின் நறுமணத்தினாலும் கொசுக்கள் வராமல் இருக்கும். ஆகவே வீட்டில் தெய்வமாக போற்றப்படும் துளசிச் செடியை தவறாமல் வளர்த்து வாருங்கள்.
புதினா
மிகவும் ஈஸியாக வளரக்கூடிய செடிகளில் ஒன்று தான் புதினா. இதனை தண்டை நட்டு வைத்து, சரியான தண்ணீர் ஊற்றி வந்தால், புதினா நன்கு வளரும். அதிலும் இதனை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், இதன் நறுமணத்தால் கொசுக்கள் வராமல் இருக்கும்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி மிகவும் அழகான பூக்களைக் கொண்ட மற்றும் நறுமணமிக்க உள் அலங்கார செடிகளுள் ஒன்று. இதன் வாசனை கொசுக்களுக்கு ஆகாது. எனவே இதனை வளர்த்தால் கொசுக்களை வருவதைத் தடுக்கலாம்.
லாவெண்டர் ஊதா
நிற பூக்களைக் கொண்ட லாவெண்டர் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல்வேறு அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அதன் நறுமணம் முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இதனை வீட்டினுள் வளர்த்து வந்தால், இது கொசுக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கும்.
சாமந்தி
அழகான மலர்களைக் கொண்ட சாமந்திப் பூ வித்தியாசமான நறுமணத்தைக் கொண்டது. இந்த நறுமணம் கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே இதன வீட்டினுள் வளர்த்து வந்தால், வீடு அழகாக காணப்படுவதோடு, கொசுக்களின்றியும் இருக்கும்.