ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், மாலையில் நோன்பு விட்ட பின்னர் எளிதில் சமைத்து சாப்பிடும் வகையில் ஒரு அருமையான பெப்பர் சிக்கன் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த ரெசிபியை சாப்பிட்டால், பகல் வேளையில் நோன்பு இருக்கும் போது நெஞ்செரிச்சல் ஏற்படாது. ஏனெனில் இது கரம் மசாலா எதுவும் சேர்க்காமல் செய்யப்படுவது.
சரி, இப்போது அந்த பெப்பர் சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/4 கிலோ வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் சிக்கன் மசாலா பொடி – 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும். பிறகு அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சிக்கன் மசாலா பொடி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். பின்பு குக்கரை மூடி, மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கினால், பெப்பர் சிக்கன் வறுவல் ரெடி!!!