ஒரு தடவை குழந்தைக்கு டயாபர் மாட்டிவிட்டால் ஆறுமணி நேரம் தாக்குப்பிடிக்கும். அம்மாக்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.
குழந்தைகளுக்கு டயாபர் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?
குழந்தை சிறுநீர் கழித்தால் நிறம் மாறி காட்டிக்கொடுக்கும் டயாபர் கூட வந்துவிட்டது. டிஸ்போசபிள் டயாபரில் மூன்று அடுக்குகள் உள்ளன. உள் அடுக்கு பாலிப்ரோப்பிலைன் என்னும் மென்மையான பொருளால் ஆனது. இதுதான் சிறுநீர் போன்ற திரவப் பொருட்களை உள்ளிழுத்து நடு அடுக்குக்கு கடத்துகிறது.
மேலும் குழந்தையின் தோலோடு நேரடியாக ஒட்டி இருக்கும் பகுதி என்பதால் பெட்ரோலியம் ஜெல்லி, கற்றாழை சாறு, வைட்டமின் இ போன்ற பொருட்கள் சிறிய அளவில் கலக்கப்படும். இதனால் குழந்தைக்கு உராய்வு ஏற்படுவது குறையும்.
நடு அடுக்கு மரக்கூழ் மற்றும் சூப்பர் அப்சார்ப்டு பாலிமர்களால் ஆனது. அப்சார்ப்டு பாலிமர் திரவ நிலையில் உள்ள கழிவுகளை உள்ளிழுத்துக் கொண்டு வெளிப்புறத்தை உலர்வாக வைக்கிறது. வெளி அடுக்கு பாலிஎத்திலின் எனப்படும் பிளாஸ்டிக்கால் ஆனது. இது கழிவுகளை கசிய விடாமல் இருக்கச் செய்கிறது.
இது தவிர சில டயாபர்களில் நறுமணத்துக்கு சில பொருட்களை சேர்க்கிறார்கள். பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை கூட அச்சிடுகிறார்கள். இயற்கையான பொருட்களால் செய்யப்படுவதால் பக்க விளைவுகளை உருவாக்குதில்லை. டயாபரில் இருக்கும் வேதியியல் பொருட்கள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என சில ஆய்வுகளில் சொல்லப்பட்டாலும் எவ்வளவு நேரம் அதை குழந்தைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியம். தேவையான நேரத்தில் மட்டுமே குழந்தைக்கு போட்டு டயாபரை கழட்டிவிட வேண்டும்.
இல்லாவிட்டால் சிறுநீரில் இருக்கும் அமோனியா, யூரியா போன்ற கழிவுப்பொருட்கள் குழந்தையின் தோலை பாதிக்கும். சொறி, கொப்புளம் போன்றவற்றை உருவாக்கும். சில சமயம் நாப்கினில் உள்ள வேதியியல் பொருட்களின் ஒவ்வாமையால் கூட சரும பாதிப்பு (சொறி) ஏற்படலாம். இதை ‘டயாபர் ரேஷ்’ என்று அழைப்பார்கள். எந்நேரமும் குழந்தைக்கு டயாபர் அணிவித்து இருப்பதாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.
டயாபர் குப்பைகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. டயாபரின் நடுஅடுக்கில் உள்ள சோடியம் பாலிஅக்ரிலேட் வேதிப்பொருள் தான் திரவத்தை உறிஞ்சும் செயலை செய்கிறது. இது கான்டாக்ட் டெர்மடைடிஸ் என்னும் தோல் நோயை உருவாக்கக் கூடியது.