பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க கருவுறும் தன்மை குறையும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே பெண்களால் கருத்தரிக்க முடியவில்லை. இதற்கு இன்றைய காலத்தில் தம்பதியர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் மன அழுத்தம், ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறை மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகள் தான் காரணங்களாக விளங்குகின்றன.
அதுமட்டுமின்றி தற்போது 35 வயதிலேயே இறுதி மாதவிடாய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால், பெண்கள் 30 வயதிற்குள்ளேயே குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வேறு சில பிரச்சனைகளால் கருத்தரிக்க முடியாமல் போகும்.
இங்கு இளம் வயதிலேயே கருத்தரிக்க இடையூறாக விளங்கும் காரணிகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் கவனம் செலுத்தி வந்தால், நிச்சயம் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
உடல் பருமன்
பெண்கள் அளவுக்கு அதிகமாக குண்டாக இருந்தால், அவர்களின் கருப்பையின் இயக்கம் குறையும். இதனால் சில நேரங்களில் கருப்பை கட்டிகள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம் உள்ளது. இப்படி கருப்பையில் பிரச்சனைகள் சூழ்ந்திருந்தால், கருவுற முடியாமல் போவதோடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நாளடைவில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உருவாகும்.
மிகவும் ஒல்லியாக இருப்பது
அளவுக்கு அதிகமாக ஒல்லியாக இருப்பதும் கருவுறுதலுக்கு தடையாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்களின் உடலில் லெப்டின் என்னும் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு, அதனால் மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாமல் போய், கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
கெமிக்கல் பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்
ஆய்வுகளில் கெமிக்கல் பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், 30 சதவீதம் குழந்தை பெறுவதற்கு தடையை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. அதிலும் ப்தலேட் என்னும் வேதிப்பொருள் நெயில் பாலிஷ் மற்றும் பெர்ப்யூம்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த பொருட்கள் பெண்கள் அதிகம் பயன்படுத்தினால் விரைவில் இறுதி மாதவிடாயை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி
சில பெண்கள் தங்களை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். ஆனால் இப்படி கடுமையான உடற்பயிற்சியை பெண்கள் 5 மணிநேரம் தொடர்ந்து செய்து வந்தால், கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இத்தகைய உடற்பயிற்சியால் சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
தைராய்டு பிரச்சனை
பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், அதனால் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுவதோடு, சில நேரங்களில் தைராய்டு பிரச்சனைக்கு எடுக்கும் மாத்திரைகளால் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
காப்ஃபைன்
காப்ஃபைன் நிறைந்த பானங்களான காபி, டீ மற்றும் எனர்ஜி பானங்களை அதிகம் குடித்து வந்தால், கருமுட்டை நகர்ந்து கருப்பைக்குள் செல்ல முடியாத அளவில் தசைகள் இறுக்கமடையும். அதிலும் ஒரு நாளைக்கு 200 மிகி அதிகமாக காப்ஃபைனை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தம்
மன அழுத்தம் இருந்தால், ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, அதனால் உடலின் செயல்பாடுகள் மட்டுமின்றி, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அதனால் கருவுற முடியாமல் போகும்.