ஒருவரின் முகத்தை அழகாக வெளிக்காட்டுவது புருவங்களும் கூட. சிலருக்கு புருவங்களில் முடிகள் அடர்த்தியின்றி இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் புருவங்களை பென்சில் கொண்டு வரைந்து கொள்வார்கள். இன்னும் சிலர் இதற்காக நிறைய பணம் செலவழித்து சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
ஆனால் இப்படி பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அடர்த்தியான புருவங்களைப் பெறலாம்.
இங்கு நல்ல அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி அடர்த்தியான புருவங்களைப் பெறுங்கள்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ ஏராளமாக உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
கற்றாழை
கற்றாழையில் உள்ள அலோனின் என்னும் பொருள் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆகவே கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எணணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, மயிர்கால்களில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே இந்த எண்ணெயை தினமும் புருவங்களின் மீது தடவி வர, புருவங்கள் நன்கு வளரும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி வர, புருவங்களில் உள்ள முடி நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தாலே, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையில் உள்ள பயோட்டின் என்னும் பொருள், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு தினமும் செய்து வந்தால், உங்கள் புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.
வெந்தயம்
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து, புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக இருப்பதைக் காணலாம்.